கட்டுநாயக்கா விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மீது வைரஸ் தாக்குதல்
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பு இன்று பிற்பகல் திடீரெனச் செயலிழந்து போனதால், பயணிகள் எவரும் உள்வரவோ வெளிச்செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு பயணிகள் உள்வரவும், வெளிச்செல்லவும் காத்திருந்த போதே கணினி வலையமைப்புச் செயலிழந்தது.
இதனால், பயணிகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து அனுமதி வழங்க முடியாத நிலை குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பயணிகளை வெளிச்செல்லவோ உள்வரவோ அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில் செயலிழந்த கணினி கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் பயணிகள் எவரும் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்படவில்லை என்றும் அவர்கள கூறினர். மிகமுக்கியமான விமான நிலைய கணினி வலையமைப்பு செயலிழந்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நாசவேலைகள் ஏதும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

Post a Comment