Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலும், இஸ்ரேலும்


மானா

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தேதியில் வழங்கப்படும் ஒரே அறிவுரை பொறுமை ! தம்புல்லையில் நடைபெற்றது வெளிப்படையான இனவாதம் என்பது உலகறியும், இலங்கையின் நீதியமைச்சர் ஒரு இஸ்லாமியர் என்பதையும் உலகறியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் இருப்பதால் தான் நீதிக்குத் தடையா எனும் கேள்வியெழுவதும் அனைவரும் அறிந்த விடயம், பெளத்த மதத்துறவிகள் இலங்கை நாட்டின் ஜனநாயக சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களா எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கையர் மனதிலும் எழுந்திருப்பதும் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் பொறுமை ! யைக் கடைப்பிடியுங்கள்.

ஏன்?

 இலங்கையின் அரசியல்,அதிகார வர்க்கத்தினரிடையே எதிர்பார்க்க முடியாத இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று: நீதி, இரண்டு : நியாயம்.

 ஒரு சாதாரண மனிதனின் வெளிக் கண்ணுக்கும் அப்பாவி மனதுக்கும் தெரிந்த நீதியும் நியாயமும் அரசியல்,அதிகார வர்க்கத்தினருக்குப் புரியாமலிருப்பது இது ஒன்றும் முதற் தடவையல்ல. ஆனாலும் அவர்களுக்குப் புரிவதில்லை.

 அதிகார வர்க்கம் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யும் அதே வேளை, அரசியல் வர்க்கம் தம் அரசியல் நலனை முதன்மைப்படுத்தியே சமூக நலன்களைக் கையாள்கின்றன.

 கடமைக்காகக் கூக்குரலிடும் சமூக ஊடகங்கள், இறுதியில் எம் பங்கிற்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்று பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசிப்பினும் தம் உயிரைக் கையில் பிடித்துப் பேசும் புலமை மிக்க தலைவர்கள், அவ்வப்போது கூக்குரலிட்டு நாமும் இருக்கிறோம் அடுத்த தடவை எனக்கொரு சீட் தாருங்கள் எனும் ரீதியில் ஆங்காங்கே குரல் கொடுக்கும் சமூகப் பிரதிநிதிகள் என்று எம் சமூகம் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் திருப்தி கண்டு கொள்கிறது.

அநுராதபுர சம்பவத்தின் போது, இலங்கையில் இது ஏதோ ஒன்றிற்கான ஆரம்பம் என்று எமது ஐயத்தை நாம் வெளியிட்டிருந்தோம், இது பற்றி நாம் பேட்டி கண்ட முஸ்லிம் அமைச்சர் பெருமக்கள் அலட்சியமாகவே பதிலளித்தார்கள், அதற்கான அன்றைய காரணம் அது யாரோ ஒருவருடைய சியாரம் என்பதாகும். ஆம்! சியார வழிபாடு, வணக்கங்களுக்கு இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் எதிரானவர்களே. இருப்பினும், எமது பார்வையில் அன்றைய சியார உடைப்பு என்பது ஒரு சமூக வாழ்வியல் அடையாளத்தின் அழிப்பாகவே இருந்தது. அதை நாம் குரலெழுப்பிக் கேட்ட போது, " என்ன பேசுகிறீர்கள், என் வெளிநாட்டு நண்பர்களே வந்து, தெருவுக்குத் தெரு இருக்கும் பள்ளி வாயல்களைப் பார்த்து, இது என்ன முஸ்லிம் நாடா? " என்று கேள்வி கேட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் கைத்தொழில் அமைச்சர்.

இலங்கையைப் பொறுத்தவரை நாம் எப்போதும் "இரங்கி" வாழும் நிலையைப் பழகிக்கொண்டே வருவதனால் எமது உரிமைகளைக் கூட சலுகைகளாக்கி, அரசியலில் தஞ்சம் இருக்கிறோம் என்பதற்கு இந்த தம்புல்லை சம்பவம் முக்கியமான எடுத்துக்காட்டாகும்.

சுமங்கல தேரரின் இனவாதத்தை இலங்கையின் காவற்துறை நேரில் கண்டது, விஷேட அதிரடிப் படை (STF) சேவை பெறப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே குறிப்பிடுகிறார், பிரதேச அரச செயலாளர் மற்றும் ஒரு ஊரே பார்த்திருக்க இடம்பெற்ற இக்குறிப்பிட்ட சம்பவத்திற்கு எதிராக இன்னும் ஏன் நாட்டின் காவற்துறையில் ஒரு "முறைப்பாடு" பதிவாகவில்லை? எனும் கேள்வியை நீதியமைச்சரிடம் கேட்கச் சென்றால் .. அதைப்பற்றி வாய் திறக்கும் அளவில் அவரில்லை.

நாடே விடயத்தினைக் கொண்டுபோய் அடகு வைத்த ஜம்இயதுல் உலமா சபையினரோ ஒருவரையொருவர் கை காட்டி விட்டுத் தப்பி விட, தலைவர்களைத் தொடர்பு கொள்வது அரிய விடயமாகிவிட்டது.

சில அமைச்சர் பெருமக்கள் நமக்குக் கூறியது போன்று அவர்கள் மந்திரி சபைக்கூட்டங்களில் இரவிரவாக இந்த விடயத்தை கலந்தாலோசித்துக்கொண்டிருப்பதாகவே நம்புவோமாக இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் பாதிக்கப்பட்ட தம்புல்லை வாசிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டிய தேவையும் கடமையும் நம் மத்தியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, தம்புல்லை ஹைரியா பள்ளிவாயலின் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நாம் அன்று எங்கிருந்தோமோ இன்றும் அங்கேயே, அதே இடத்திலேயே, அச்சத்துடனும், பயத்துடனும், பதட்டத்துடனும் இருக்கிறோம் என்று, இன்று 09-05-2012 நமக்குக் கவலையுடன் தெரிவித்தார்.

ஒரு திங்கள் இரு திங்களாகி, இன்னும் ஜனாதிபதியிடமிருந்து எந்தத் தகவலும் வராத நிலையில், அரச மட்டத்தில் இருந்து, நாம் ஏற்கனவே வலியுறுத்திக் கூறிய ஜனக பண்டார - தேரரின் அரசியல் குறித்து இப்போது விடயங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கின்றன.

இது இவ்வாறிருக்க, திரை மறைவில் சந்திப்புகளும் உடன்பாடுகளும் நடைபெறுவதாக நாட்டில் வசிக்கும் ஊடக வட்டாரத்தில் நிலவும் ஊகங்களும் ஒரேயடியாகப் பொய் எனத் தவிர்க்கப்படும் நிலையில் இல்லை என்பதும் உண்மையாகும்.

அவ்வாறானால், அங்கே என்னதான் நடக்கிறது எனும் குழப்பம் அனைவர் மத்தியிலும் நிகழ்கிறது.

அதற்குள் திடீரென இஸ்ரேல் தூதராலயம் குறித்த விடயங்களும் நாட்டிற்குள் சூடு பிடிக்க ஆரம்பிப்பதனால், கிரிக்கட் போட்டியின் நடுவில் "பாண்" விலை உயர்த்தும் அரச தந்திரம் போன்றே தம்புல்லையை வெளியில் காட்டி இஸ்ரேலைக் காலூன்ற வைக்கிறாரா மஹிந்த எனும் கேள்வி எழுப்பப் பட்டே ஆக வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கும் போது, ஒன்றில் நாட்டின் முஸ்லிம்களின் ஆதரவு இருக்க வேண்டும் அல்லது தீவிர பெளத்தர்களின் ஆதரவை ஹெல உறுமய போன்ற கட்சிகளிலிருந்து மஹிந்த பறித்தெடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக நாட்டில் இன்றைய நிலையில் கையில் எடுக்கக் கூடிய ஒரேயொரு விடயம் "முஸ்லிம் இன விரோதமாகும் " .

மஹிந்த அரசாங்கத்திற்கு ஒரே கல்லில் இரு கனிகள் தரக்கூடிய இச்சிக்கலில் முஸ்லிம்களைத் தந்திரமாகக் கையாள்வதில் இதுவரை மஹிந்த கெட்டிக்காரராகவே இருப்பது இங்கே கவனிக்கத்தக்க விடயமாகும்.

அதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுவதாகக் கூறும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மெளனம் சாதிப்பதே கேள்விக்குரியதும், கேலிக்குரியதுமான விடயங்களாகும்.

எனவே, இது தொடர்பில் அரசியல் பிரமுகர்களைத் தொடர்பு கொண்டு நாம் கேள்வி கேட்க விளைந்த போது, ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டித் தப்பியோட முயற்சிக்கிறார்கள் என்பதும் நாம் வாசகர்களுக்கு அறியத்தர விரும்பும் உண்மையாகும்.

முஸ்லிம் தலைவர்களின் இன்றைய நிலையைச் சுருங்கக் கூறின், பொறியில் மாட்டிக்கொண்ட எலி போன்றது என்பது நியாயமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இதில் ஜம் இயதுல் உலமாவும் இணைந்து கொண்டது சமூகத்துக்குக் கிடைத்த மிகப் பெரும் பின்னடைவாகும்.

அதே இடத்தில் பள்ளியிருக்கும், இஸ்ரேலின் ஆதிக்கமும் வளரும் என்பது ஒரு தெரிவாக இருக்க, இஸ்ரேல் வேண்டாம் பள்ளி வேறு இடத்திற்கு நகர்த்தப்படலாம் என்றொரு தெரிவு இலங்கை முஸ்லிம்களை நெருக்குவதை இது வரை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் என்பது இங்கு நாம் எழுப்ப விரும்பும் கேள்வியாகும்.

நாம் மெளனமாகக் காத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இலங்கை அரசியல் தந்திரம் அதன் பொறுப்பாளிகளாக முதலில் ஜம் இயதுல் உலமாவையும், அடுத்து முஸ்லிம் காங்கிரசையும் எமக்கே திருப்பித் தந்திருக்கிறது.

தம்புல்லை மக்களோ, இன்று தம் நிலைப்பாடு குறித்து வெளியிலும் எதையும் சொல்ல முடியாத மெளனிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில், காலியில், கொழும்பில், நுவரெலியாவில் எங்கு வேண்டுமானாலும் நாம் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம், கோஷமிடலாம், ஆனால் அரசின் தந்திரமான நிலைப்பாட்டில் ஒரு அங்குலத்தை அசைத்துப் பார்க்கக்கூடிய அழுத்தம் கூட இன்று எம் மத்தியில் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் !

பொறுமை, இதை அரசியலின் ஆயுதத் தெரிவாக நம்மிடம் வழங்கிவிட்டு, மறுபுறத்தில் என்ன நடக்கிறது என்கிற உண்மையைத் தெரிந்தும் வெளியே சொல்ல முடியாத அரசின் பங்காளிகளும், அடகு வைக்கப்பட்ட மார்க்க அறிஞர்களும், அன்றைய சிக்கலில் கூடிக் கலைந்த பின்னர் இன்று வரை தம்புல்லை பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு "ஆறுதல்" வார்த்தையேனும் தெரிவிக்க வில்லை எனும் கசப்பான உண்மை இங்கு வெளிக்கொண்டுவரப்பட வேண்டியதாகும்.

அது குறித்தும் நமது அரசியல் வாதிகளிடம் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. இருந்தாலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இது குறித்து என்னதான் கருதுகிறது என்பதில் அனைவருக்கும் ஒரு ஐயப்பாடு இருக்கவே செய்கிறது.

எனவே, எதிர்க்கட்சியில் இன்றைய நிலையில் நாட்டின் மிக முக்கிய முஸ்லிம் அரசியல் பிரதிநிதியாக இருக்கும் கொழும்பு நகர மேயர் அல்ஹாஜ் முஸம்மில் அவர்களை நாம் இது தொடர்பாக இன்றைய தினம் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கேட்ட போது, எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் மென்மைப் போக்கில் நிலைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

தேவையேற்படின் அனைத்து முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் ஒன்றிணையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய கொழும்பு மேயர், இந்த விடயத்தில் அரசிற்கு எதிர்க்கட்சி தரப்பில் போதிய அழுத்தம் தரப்படுகிறதா எனும் கேள்விக்கு அண்மையில் களுத்துறைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலத்தையும் அது கையாளப்பட்ட விதத்தையும் குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சியும் செயற்பாடும் ஒரு காரணம் என்று உரிமை கோருகிறார்.

இது ஒரு புறமிருக்க, சம்பந்தப்பட்ட பள்ளிவாயல் மற்றும் அந்தப் பிரதேச வாசிகள் தொடர்பில் எவ்வாறான விடயங்களை எம் அரசியல் தலைமைகள் இன்றைய நிலையில் மேற்கொள்கின்றன என்று பார்த்தால், இப்பதிவின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போன்று அனைவரும் "எதையோ" சாதித்த பெருமையில் அடங்கிக் கிடப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஆக, நாம் திருப்தியடைந்த விட்டோம் ! இன்றைய எம் பொறுமைக்கும் - அமைதிக்கும் இது தான் நாம் கற்பிக்கப்போகும் அர்த்தம்.

இலங்கை அரசியலின் சிக்கலான ஏற்பாட்டில், முஸ்லிம்கள் அனாவசியமான நெருக்கடிகளை உருவாக்க்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் எம் மக்கள், நம் உரிமைகளை மற்றவர் நசுக்கும் போதும் அமைதியாகவே இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதை அரசியல் சாணக்கியம் என்று ஒரு சாராரும் பலவீனம் என்று இன்னொரு சாராரும் வாதாடலாம்.

இதில் எந்தப் பக்கம் தமக்குச் சார்பாக இருக்கிறதோ அந்தப் பக்கத்தை தமக்காகத் தெரிவு செய்து கொள்கிறார்கள் எம் மக்கள்.

எனினும், உண்மை நிலை என்னவென்பதில் நாம் மிகக் குறைந்த அக்கறையுடனேயே இருக்கிறோம். போராட்டமே வேண்டாம் இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே ! ஏனெனில் அரசாங்கம் அந்த இடத்திலிருந்து பள்ளியை அகற்றப்போவதில்லை. ஆனால் மறு புறத்தில் என்ன நடக்கிறது என்பதில் எமது ஆயத்தம் எந்த அளவில் இருக்கிறது என்பதை நம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய நிலையில் இலங்கையில் இனவாதம் துளிர்விட்டு விட்டது, அது அரசியல் அரங்கில் நுழைந்து விட்டது, அத்துடன் இனிமேல் இது "முஸ்லிம் விரோதமாக" வளரப்போகிறது.

அடுத்து என்ன ?

 இலங்கை வரலாற்றில் நாம் பல பாடங்களைக் கற்று விட்டோம், எமது உரையாடலின் போது சிறிமாவோ காலத்தில் புத்தளத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் நினைவூட்டிய கொழும்பு நகர மேயர், தம் கட்சி எப்போதும் தேவையான அழுத்தங்களைக் கொடுத்து நம் சமூகத்திற்குப் பாடுபடுவதாகவும் குறிப்பிடுகிறார்.

அத்தனை வாய்ப்புகளும் கை நழுவிச் சென்றால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், "ஆம்" அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்று அவர் கூறுவதைக் கேட்கும் போது அது திருப்தியளிப்பதாக இருந்தாலும், நாம் இது வரை அறியாத ஒரு அரசியல் சதுரங்கத்திற்குள் தள்ளப்படுவதையும் இங்கு உணர்ந்தே ஆக வேண்டும்.

வன்முறை எமது தெரிவல்ல, தேவையுமல்ல எனவே எமது உரிமைப் போராட்டத்தினை வலுவான முறையில், முன்னெடுக்கும் தேவைக்கு நாம் தள்ளப்படுகிறோம். எமது போராட்டங்கள் வெறும் எதிர்ப்புக் கோஷங்களாக இருந்து எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை (உதாரணம்: தம்புல்லை மஸ்ஜித் விவகாரம்) எம் போராட்டங்களின் வலிமை சர்வதேசத்தைத் தொட வேண்டும்.

எமது குரல்கள் ஒலிப்பதற்காக ஒலிக்க முடியாது, அது தேவைக்கேற்ற விடயத்தினை தேவையான விதத்தில் ஒலிப்பதாக இருக்க வேண்டும்.

நாடு என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், நான் ஒரு தீர்ப்பை நாளை தருகிறேன் என்று ஒரு பொறுப்பு மிக்க நாட்டின் தலைவர், அதுவும் நீதியமைச்சரின் சமூகத்தையே பொறுமை எனும் சிறைக்குள் அடக்கி வைத்திருக்கிறார், அவர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அதே வேளை, அரசியல் அரங்கில் நாம் எங்கே நிற்கிறோம் என்பது உணரப்பட வேண்டும், நம் குரல்கள் அழுத்தங்களைத் தர மறுப்பதேன்? அவை அனர்த்தங்களையும் மூடி மறைப்பதேன் எனும் சூத்திரம் அறியப்பட வேண்டும்.

ஆக மொத்தத்தில், நாமும் நவீன மனித சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து கொள்ளவும், செயற்படவும், உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்து அதன் வழியில் ஜனநாயக முறையில் போராடவும் பழக வேண்டும்.

எதுவும் நடக்கவில்லை போன்று இன்று நாம் அமைதி காக்கலாம், ஆனால் ஒவ்வொரு நேரத் தொழுகையையும் பயத்துடன் தொழும் தம்புல்லை ஹைரியா மஸ்ஜித் மக்களின் இந்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் என்பதை மறந்து விடலாகாது.

உங்கள் குரல்கள் ஐநாவில் ஒலிக்க வேண்டுமென்றால் அங்கும் ஒலித்தேயாக வேண்டும் ! நாம் வன்முறையாளர்களல்ல, ஆனாலும் கடந்த கால வரலாற்றை அப்படியே மறந்து விட்டு நாளைய விடியலை ஏற்றுக்கொள்வதன் மூலம் எம் எதிர்காலத்தை மெல்ல மெல்ல இழக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

7 comments:

  1. A great news !!
    Spread this to the world, if possible translate this into English so that every Sri Lankan and every human being would be reading this

    ReplyDelete
  2. Masha Allah

    clear massage great news don't believe any more politicians because they already silence we pray for Allah & take a proper action not happen any more in future. if is it possible to take this problem UN go head insha Allah Allah help us
    riyas

    ReplyDelete
  3. ACJU is the only only realistic means to consolidate and unite all our forces; May be 100% they are not in a correct track, but most of the time they are trying their best.

    So, brother, your article is expressing some different thoughts, which are welcome & well said, but you don't paint politicians & ACJU (jamiathul ulema); in same brush..

    ReplyDelete
  4. Thanks and goverment diverting muslim ummah dammbulla masjith metter to Israel so, be confident to takes our rights Dampulla musjith and Israel metter.

    Shiddeeque

    ReplyDelete
  5. what you said 100% correct and true we should voice to get our freedom so we should together go head.

    ReplyDelete
  6. Masha Allah,

    Gread Message

    Thanks.

    ReplyDelete
  7. ACJU must reply to this. There is overall doubt.

    ReplyDelete

Powered by Blogger.