இறுக்கமான ஜீன்ஸ் அணிபவர்களின் கவனத்திற்கு..!
பெண்களைப் பொறுத்தவரை இறுக்கமாக ஜீன்ஸ்களை அணிவது பாதுகாப்பானது என்று இன்றுவரை கருதப்பட்டு வந்தபோதும் அது நோய்களை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "வுமன்ஸ் ஹெல்த்' என்னும் மருத்துவ சஞ்சிகை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அச்சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களைப் பார்ப்போம்.
இளவயது ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது, சில நேரங்களில் "இவர்களுக்கு மூச்சு முட்டுமே' என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு இறுக்கமாக போட்டுக்கொண்டுஎப்படி வாகனங்களில் ஏறி இறங்குவார்கள்? மாடிப்படிகளில் ஏறுவார்கள்? என்றெல்லாம் கேட்கத்தான் தோன்றும்.
ஆனால், ஜீன்ஸ் கன்னியர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அது அவர்கள் நாகரீகம். அது அவர்கள் உலகம்...! அது உடலை இறுக்கினால், தாங்களும் நாகரீகத்தோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும் என்றுகூறி சரும நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு உடை இருக்கிறதா? இல்லையா என்று தேடும் அளவுக்கு நாகரீகத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். தோல் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கலக்கும் பெண்களும் அதற்கு "ஸ்கின்னி' என்றொரு பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.
இப்போது ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள். அதனை விரும்பி அணிய என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்டால்.
"தன்னம்பிக்கை தருவதாக' சிலர் சொல்கிறார்கள்.
சௌகரியமான உடையாக இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள்.
"அழகு அதிகரிக்கிறது... எடுப்பாக இருக்கிறது' என்பவர்களும் உண்டு.
"எங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான உடை' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஜீன்ஸ்களை அணிந்தாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.
தோழியர் குழு ஒன்று பஸ், ரயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது. பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் ஒருவருக்கு காலில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. பயணத்தில் ஏற்பட்ட அசௌகரியத்தால் அது ஏற்பட்டிருக்கும் என்று முதலில் அவள் நினைத்தாள். ஆனால், மறுநாள் வலி அதிகரித்துவிடவே, டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
பயணத்திற்கு சௌகரியமானது என்று கருதி இறுக்கமான ஜீன்ஸை அவள் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவிட்டாள். ஏற்கனவே அது உடலை இறுக்கிப்பிடித்திருக்க, அதற்கு மேல் இறுக்கிப்பிடிக்கும் பெல்ட்டும் அணிந்திருக்கிறாள். அது அவளுக்கு "மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.
பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதி வழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்ஸும் பெல்ட்டும் போட்டி போட்டு இறுக்கியது கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலியும் அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங்களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால் சத்திர சிகிச்சை தேவைப்படும்.
நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்புப் பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால் அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.
ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்றுப்படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறுது. அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம். "ஆண்களின் இனப் பெருக்க திறன் குறைய என்ன காரணம்?' என்பது பற்றிய ஆராய்ச்சி, சுவீடனில் நடந்தது. இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்குக் காரணம் என்று கண்டறிந்தார்கள். அதைத் தொடர்ந்து "சுவிடிஷ் டைட் ஜீன்ஸ் தியரி' என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள்.
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைப்பைகள் இயற்கையாகவே உடலில் இருந்து வெளியே தொங்குகின்றன. உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே உயிரணு உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால்தான், உடலுக்கு வெளியே அது அமைந்திருக்கிறது.
இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால், உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்ஸை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ்களையோ அணிவிக்க வேண்டாம். அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக் குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும்.
ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நாகரீகம், சௌகரியம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுத்து அணியவேண்டும். "ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது. துணிகளில் தயாரித்தவைகளை வாங்க வேண்டும்.
நாகரீகம் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடை காலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதைத் தவிர்த்திடுங்கள். தூரப் பயணம் மேற்கொள்ளும்போது இறுக்கமான ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் நாகரீகத்தை விட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

itha iwanga ippathan kandu pudichurukanga.aana irukamana aadaya aniyathinga endu eatkanave islam solli vittathu.islathin unmai thanmai poha poha anaiwarukkum purium,aaanal iruthiel marumaivaruwathtkul anaivarum nanmayai sithu kollattum
ReplyDelete