Header Ads



யாழ்ப்பாண சிறுவன் காத்தான்குடி சென்றமை - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..!

முஹம்மது நியாஸ்

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பிலான உண்மை நிலையை அறிந்து, அதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சம்மந்தப்பட்டவர்களை சஜில் ஊடகப் பிரிவு சந்தித்தது.

இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த நஜீம் என்பவரை சஜில் ஊடக  குழு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தபோது, அவர் அளித்த தகவல்களை இங்கு தருகின்றோம்.

'எனது பெயர் முஹம்மது முஸ்தபா முஹம்மது நஜீம். நான் சாரதியாகத் தொழில் புரிகிறேன். எனது தொழில் நிமித்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறேன்.சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால், மரவவெள்ளிக் கிழங்கு சீவல்களை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் பொருட்களை எனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கே, குறிப்பிட்ட வியாபாரியின் பொருட்களை இறக்கிக் கொடுத்துவிட்டு எனக்கு அறிமுகமான ஒருவரின் குளிர்பானக் கடை(Cool Spot)க்கு சுமார் காலை பதினோரு மணியளவில் குளிர்பானம் அருந்துவதற்காகச் சென்றேன். குறித்த அந்தக் குளிர்பானக் கடையானது, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது. நான் அக்கடைக்கு சென்றிருந்த நேரம், அக்கடையில் சுமார் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அழுக்கடைந்த பாடசாலை சீருடையில், மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். அந்தக் கடையினை நடாத்தி வருபவர் என்னிடம் 'இந்தச் சிறுவன் நான்கைந்து நாட்களாக இங்கேதான் இருக்கிறான், வீதியோரங்களில் உறங்குகிறான், உங்களால் முடிந்தால் இச்சிறுவனுக்கு ஏதாவது உதவியை செய்யுங்கள்' என்று கூறினார்.

நான் இதனைக் கேட்டதும், அந்த சிறுவனிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். அச்சிறுவன், 'எனது பெயர் ரஜிராம். நான் ஒரு அநாதை. எனது தகப்பன் கடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார். எனது தாய் மரணித்து நான்கு நாட்கள் ஆகின்றன. எனவே, எனக்கு உறவினர் யாரும் இல்லை' எனவும் கூறினான். உடனே, நான் ரஜிராம் மீது வெகுவாக அனுதாபம் கொண்டேன். அவனை யாழ்ப்பாணத்தில் நான் தங்குகின்ற எனது நண்பர் ஒருவரின் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து பகலுணவும் வாங்கிக் கொடுத்தேன். அதன் பிறகு, அவன் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் அழுக்காகக் காணப்பட்டமையினால், புதிதாக சில ஆடைகளும் செருப்பும் வாங்கிக் கொண்டு மீண்டும் குறிப்பிட்ட குளிர்பானக் கடைக்கு அச்சிறுவனைக் கூட்டி வந்தேன். அப்போது ரஜிராம், நான் அவன்மீது காட்டிய அரவணைப்பைக் கண்டு தனக்கிருந்த ஒரு குடும்பத்தின் தேவையினை உணர்ந்தவனாக 'என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்' என என்னிடம் மன்றாடினான்.

நானும் ரஜிராமுடைய நிலைமையினை உணர்ந்து அவன் மீது அனுதாபம் கொண்டு, பிற்பகல் சுமார் ஆறு மணியளவில் அவனை என்னோடு எனது வாகனத்தில் காத்தான்குடிக்கு அழைத்து வந்தேன்.

என்னுடைய வீட்டில் நான், எனது மனைவி, இரண்டு மகள்மார் (13வயது, 07வயது) மற்றும் ஒன்றரை வயதுடைய ஒரு கைக் குழந்தை. ஆக மொத்தம் ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பம். எனது வீட்டில், ரஜிராம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அமையப் பெற்றான்.

ரஜிராமிற்கு புதிய இடம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்தன. இடையிடையே நான் ரஜிராமுடைய புதிய மனநிலையினை விசாரித்தறிந்து கொண்டேன். தனக்கு, புதிய சூழல் நன்கு பிடித்திருப்பதை தனது சந்தோஷத்தின் மூலம் ரஜிராம் எனது குடும்பத்திற்கு வெளிப்படுத்தினான். முஸ்லிம் சிறுவர்களின் நட்பு, அவர்களின் பழக்க வழக்கங்கள், குடும்ப அமைப்பு, உணவு முறை, வழிபாட்டு முறைகள் என்பவற்றால் ரஜிராம் வெகுவாகக் கவரப் பட்டான். எனது குடும்பத்தில் தானும் ஒரு முஸ்லிமாக வாழவேண்டுமென்று விரும்பி, அதை தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினான்.

ரஜிராமுடைய விருப்பத்தைக் கண்டு மகிழ்ந்த நான், ரஜிராம் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்த பின்னர் முஸ்லிம்களுக்குரிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான 'சுன்னத்' (ஹத்னா) கடமையினை நிறைவேற்றினேன். சுன்னத் செய்யப்பட்டால், இரண்டு நாட்களுக்கு கட்டிலில் ஓய்வு தேவைப்படும். அந்த நாட்களில் கூட, ரஜிராமை எனது சொந்தப் பிள்ளையினைப் போன்றே நான் பராமரித்தேன். அதன் பிறகு ரஜிராமிற்கு 'அன்வர் ஹசன்' என பெயரை மாற்றியமைத்தேன்.
அன்வர் ஹசன் என்னோடு அருகிலிருக்கும் பள்ளிவாயிலுக்குச் சென்று ஐவேளை தொழுகைகளிலும் அனைவருடனும் கூட்டாகக் கலந்துகொண்டான்.

மூன்று மாதங்கள் கழிந்ததன் பின்னர், நான் ரஜிராமை காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தேன். ரஜிராமிடம் பிறப்பத்தாட்சிப் பத்திரம் மற்றும் ஏற்கனவே கல்வி பயின்ற பாடசாலையின் விடுகைப் பத்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லாததன் காரணத்தால், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் பதிவு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் கல்வி கற்று வந்தான்.

இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆன் மற்றும் மார்க்க ஒழுக்கவிழுமியங்களை, நன்னடத்தைகளை போதிக்கின்ற இஸ்லாமிய மதரசாவிலும் அவனை சேர்த்தேன்.காலையில் பாடசாலைக்கும் பிற்பகல் குர்ஆன் கல்விக்கும் என மிகவும் ஆர்வத்துடன் அன்வர் ஹசன் சென்று வந்தான்.

அவ்வேளையில் அன்வர் ஹசன் கல்வி கற்று வந்த மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் மாணவர் முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதற்கும், வகுப்பேற்றுவதற்கும் மாணவர்களின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் தேவை என என்னிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினார்கள்.
பல வேலைப் பழுக்களுக்கும் மத்தியில் இருந்த எனக்கு, அன்வர் ஹசனை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கூட்டிச் சென்று பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்கு சற்று கால தாமதமாகியது.
அதன் பிறகு பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்காக கடந்த வாரம் நான் எனது நண்பர் ஒருவரின் துணையோடு அன்வர் ஹசனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தேன். அன்வர் ஹசன் யாழ்ப்பாணத்தில் எனது நண்பரினது துணிக்கடையில் இருக்கும்போது, அங்கே வந்த அன்வர் ஹசனின் உறவினர் ஒருவர் பொலிசாருக்கு கொடுத்த தகவல் மூலம், அவன் பொலிசாரினால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டான்.' இவ்வாறு ரஜிராம் தொடர்பான விடயங்களை நஜீம் எம்மிடம் தெளிவாக எடுத்துக் கூறினார்.

இது இவ்வாறிருக்க ஒரு சில தமிழ் இணையத்தள ஊடகங்கள் உண்மை நிலை என்னவென்பதில் சற்றேனும் கவனம் செலுத்தாமல், நாட்டில் நிலவுகின்ற இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை நலினப்படுத்தும் போக்கில் சில தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விடயமாகும்.

ஊடகங்களின் மெத்தனம்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் இணையத்தள ஊடகங்களும், அச்சூடகங்களும் பலவாறான திரிபுபடுத்தப்பட்ட தவறான தகவல்களை செய்திகளாகப் பிரசுரித்துள்ளன.

முப்பது வருட கொடிய யுத்தத்தின் பிடிக்குள் இருந்து விடுபட்டு, இப்போது நாடெங்கிலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற இச்சூழலில், ஊடகங்கள் இவ்வாறான மேலெழுந்தவாரியான ஊகங்களை தங்களின் இணையத் தளங்களிலும் செய்தித் தாள்களிலும் வெளியிடுவதானது, நாட்டின் ஜனநாயக மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டி எழுப்புதல் போன்ற செயற்றிட்டங்களை வீழ்ச்சிப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு ஜனநாயக நாட்டின் சீரான கட்டமைப்பிற்கும் அதன் சீர்குலைவிற்கும் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். ஊடகங்கள் தங்களின் நடுநிலைத் தன்மையினை மறந்து, நடந்த சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்பதை சரிவர அறிந்துகொள்ளாமல் வெளியிடுகின்ற இவ்வாறான தகவல்களே, இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட செய்திகளில் பிரபல இணையத்தள ஊடகங்கள் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளின் உண்மைத்தன்மையினை இங்கு தருகிறோம்.

யாழில் 12 வயது சிறுவன் முஸ்லிம்களால் கடத்தல்..

பொதுவாகக் கடத்தல் என்பது ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக அவரை வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்வதையே குறிக்கும். இதுவே கடத்தல் என்ற சொல்லுக்குரிய சுருக்கமான வரைவிலக்கணமாகும். ஆனால், நஜீம் செய்ததோ கடத்தல் அல்ல. மாறாக, ஒரு சிறுவனின் விருப்பத்திற்கும், வேண்டுதலுக்கும் இணங்கவே தன்னுடைய வீட்டிற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். இதில் அச்சிறுவனுக்கு தேவையாக இருந்த ஒரு குடும்பத்தின் தேவைப்பாட்டை அவன் மீது கொண்ட ஒரு அனுதாபத்தின் காரணமாக நஜீம் நிறைவேற்றினார்.

யாழ் நகருக்கு தொழில் நிமித்தம் அடிக்கடி சென்றுவரும் ஒருவர், அந்நகரிலேயே, பொது இடத்தில் வைத்து, பட்டப் பகலில் தன்னிடம் எந்தவொரு பக்கபலமும் இல்லாமல், தனியே ஒரு பன்னிரண்டு வயது சிறுவனைக் கடத்துவதென்பது முடியாத ஒரு காரியமாகும். அத்தோடு, சிறுவன் காலையில் நஜீமை சந்தித்தது முதல், மாலை ஆறு மணி வரைக்கும் அதே இடத்திலேயே நஜீமோடுதான் இருந்திருக்கிறான் என்பதற்கு, குளிர்பானக் கடையினை நடாத்தி வருபவர் சாட்சியாக இருக்கிறார். எனவே, ஒரு சிறுவனைக் கடத்திவிட்டு பின் அதே சிறுவனோடு அதே நகரில் சுமார் எழு மணித்தியாலங்கள் வரையில் தரித்திருப்பதென்பது அறிவு பூர்வமற்ற ஒரு விடயமாகும்;.

பல ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டான்.
ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்வதற்குரிய வயதெல்லைக்குள் சிறுவன் இல்லை. பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன், மாற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவரோடு காத்தான்குடி வரைக்கும் சென்று, சுமார் ஒருவருடத்தின் பின்னர், தான் கடத்தப்பட்ட அதே இடத்தில் மீட்கப்பட்டான் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.

வலுக்கட்டாயமாகவோ அல்லது ஆசை வார்த்தைகளின் மூலமோ ஒரு சிறுவனை கடத்திச் செல்கின்ற ஒரு நபர், மறுபடியும் அவனை அதே நகரத்திலுள்ள ஒரு துணிக்கடையில் தொழில் புரிவதற்காக அழைத்து வருவதென்பது, ஒரு சாதாரண அறிவு உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஆனால், இது விடயத்தில் போதிய ஆய்வை மேற்கொள்ளாத ஊடகங்களின் மெத்தனப் போக்கு கண்டிக்கப் படவேண்டியது.

தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்...
முஸ்லிம்களின் மதமான இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், எந்தவொரு மதத்தினை சேர்ந்த ஒருவரையும் கட்டாயமாத மதமாற்றம் செய்ய அதில் அனுமதி இல்லை. அவ்வாறு செய்யவும் இயலாது. மத நம்பிக்கைகள் என்பது அந்தந்த மதங்கள் மேலுள்ள சுய விருப்பங்களினால் ஏற்படுவதே. மாறாக, எந்தவொரு மதக் கோட்பாட்டையும் யாராலும் யாருக்கும் திணிக்க முடியாது.

நஜீமுக்கும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தம் கிடையாது. நஜீமுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவன் தேவைஎன்றால், கிழக்கு மாகாணத்திலேயே நஜீம் வசிக்கின்ற ஊரான காத்தான்குடியில்தான் முஸ்லிம் அநாதை சிறுவர்களை பராமாரிக்கின்ற 'அனாதைகள் இல்லம்' உள்ளது. அங்கே சென்று அவர்களின் நிபந்தனையின் அடிப்படையில் ஒரு சிறுவனைப் பெற்றுக்கொள்வதில் நஜீமுக்கு எதுவித சிரமமும் இல்லை.

யாழ்குடா நாட்டில் இன்றைய சூழ்நிலையினைப் பொறுத்தவரையில் கொலை, கற்பழிப்பு, போதை வஸ்த்துப் பாவனை, வழிப்பறி, விபச்சாரம், ஆட்கடத்தல் என்பன நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் அதிகமானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலேயே நிகழ்கின்றன. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எவரையும் அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரை பயன்படுத்தி எந்தவொரு ஊடகமும் செய்திகளை வெளியிடுவதில்லை.

ஆனால், முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற சில விடயங்கள் தவறாக நோக்கப்பட்டு அதனை அவர்கள் சார்ந்துள்ள மதத்தினையும் வசிக்கின்ற பிரதேசத்தினையும் குறிப்பிட்டு செய்திகளை பெரிதுபடுத்தி வெளியிடுவதானது, ஒரு சகோதர இனத்தின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வின் வெளிப்பாட்டினையே பறைசாற்றுகிறது.

கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்!
இங்கே ஊடகங்கள் சிறுவனை கொடுமைப் படுத்தியதாகக் கூற முற்படுவது, இஸ்லாமிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான, விருத்த சேதனத் (சுன்னத்) தையாகும். விருத்த சேதனம் எனப்படுவது, இன்று முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் ஒரு காரியமாக இருந்தாலும், ஆரம்பகால அரேபிய மக்களிடம் இருந்து வந்த ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஏன் இயேசு கிறிஸ்துவுக்கே விருத்த சேதனம் செய்யப்பட்டிருந்ததாக பைபிள் கூறுகிறது. இன்னும் பைபிளில் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகவும் இவ்விருத்த சேதனம் காணப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கமும் இதனை வலியுறுத்துகிறது.

நமது நாட்டில் முந்தைய காலங்களில் முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆறு வயதை அடைந்ததன் பின்னரே விருத்த சேதனம் செய்வார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பிறந்து வெறும் பத்து அல்லது இருபது நாட்கள் மாத்திரம் கடந்திருக்கும் போதே, இவ் விருத்த சேதனம் செய்யப்படுகிறது. அத்தோடு முன்னர், விருத்த சேதனம் செய்விப்பதற்கென்று அதில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்கள் இருந்தார்கள். அனால், இப்போது இலங்கையில் வைத்தியர்களினாலேயே, அது நவீன முறைகளைக் கொண்டு மகவும் இலகுவான முறையில் மேற்கொள்ளப் படுவதால், இஸ்லாம் அல்லாத மக்கள் கூட, தூய்மை கருதி பெருமளவில் விருத்த சேதனம் செய்கிறார்கள்.

இன்றைய நாட்களில் ஒரு குழந்தைக்கோ, ஒரு சிறுவனுக்கோ விருத்த சேதனம் செய்வதற்கு சுமார் ஐயாயிரம் ரூபா வரையில் செலவாகின்றது. ஒரு சிறுவனை யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவந்து காத்தான்குடியில் வைத்து ஐயாயிரம் ரூபா செலவழித்து கொடுமைப்படுத்த வேண்டிய எந்தவொரு நிர்ப்பந்தமும் நஜீமுக்கு கிடையாது. எனவே, அவர் அச்சிறுவனை தனது குடும்பத்திலுள்ள ஒரு குழந்தையாக நினைத்ததன் விளைவாகவே இதனை மேற்கொண்டார்.

எனவே, அறிவியல் ரீதியாக மிகச் சிறந்த நடைமுறை என அனுமதிக்கப்பட்ட ஒரு மத அனுஷ்டானத்தை சிறுவர்களைக் கொடுமைப்படுத்தல் என வர்ணிப்பதானது சகோதர மதமொன்றின் மேலுள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.

அதிர்ச்சியில் தமிழ் மக்கள்...

தம் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் அல்லது ஒரு யுவதி மாற்று மதத்தவர்களால் கடத்தப்பட்ட செய்தியை அறிந்ததும், அம்மக்கள் அதிர்ச்சியடைவே தொன்றும் ஆச்சரியமான விடயமல்ல.நாட்டில் தமிழ் முஸ்லிம் உறவுகள் மீளக்கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், முஸ்லிம்களால் இக்கடத்தல் மேற்கொள்ளப் பட்டுள்ளது என தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக, முந்தியடித்துக் கொண்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இவ்வாறான மெருகூட்டப்பட தகவல்கள் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகள் கேள்விக்குறியாவது குறித்து, இவ்வூடகங்கள் ஏனோ சிந்திக்க மறந்துவிட்டன.

சிறுவனுக்கு அன்வர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டான், என்பது ஊடகங்களின் வாதம். கடத்தப்பட்டு கொடுமைப் படுத்துவதற்கு, பெயர் மாற்றம் அவசியம் இல்லை. ஆனால், நஜீமின் குடும்பத்தில் ஒரு அங்கத்தவனாக மாறுவதற்கு, அவனுக்கு முஸ்லிம் பெயர் ஒன்று அவசியமாக இருந்தது. முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய ஒரு பிரதேசமான காத்தான்குடியில், ரஜிராம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அச்சிறுவனால் முஸ்லிம்கள் மத்தியில் ஒன்றரக் கலந்து வாழ முடியாது. எனவே, அவன் அன்வர் ஹசன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டான். இதில் ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்த அளவிற்கு விடயங்கள் ஏதுமில்லை.

ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த சிறுமியர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது, கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலைகளை செய்யுமாறு கொடுமைப் படுத்தப்பட்டான்.

இச்செய்தி முதன் முதலாக ஒரு ஊடகத்தில் வெளியானதும், உடனே மற்றைய ஊடகங்களும் அச்செய்தியை பிரதியெடுத்தே சில சில மாற்றங்களை செய்து தங்களின் பங்குக்கு வெளியிட்டன. ஆனால், உண்மை நிலை என்னவென்பதனை ஆராய்வதற்கு அனைத்து ஊடகங்களும் தவறிவிட்டன.

நஜீமுடைய குடும்பத்தைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நஜீமுடைய பிள்ளைகளில் முதல் இரண்டு பிள்ளைகள் மாத்திரமே பாடசாலையில் கல்வி கற்பவர்கள். முதலாவது மகள் தரம் ஏழிலும், இரண்டாவது மகன் தரம் இரண்டிலும் கல்வி கற்கிறார்கள். இவர்கள் செல்கின்ற பாடசாலையான மட்/அஷ்ஷுஹதா வித்தியாலயம் நஜீமின் வீட்டிலிருந்து வெறும் நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது. எனவே, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு பதிமூன்று வயது சிறுமியை அழைத்துச் செல்வதற்கு துணை ஒன்றும் தேவையில்லை. அவர்கள் தாமாகவே பாடசாலைக்கு சென்று வருபவர்கள். அத்தோடு இதில் மிக முக்கியமான ஒரு விடயத்தை சகல ஊடகங்களும் தங்களின் மெத்தனப்போக்கால், இருட்டடிப்புச் செய்துவிட்டன.

அதாவது, சிறுவன் ரஜிராம் காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் தரம் ஏழில் சுமார் ஆறு மாதங்கள் வரையில் கல்வி கற்று வந்தான். பாடசாலை செல்வதற்காக நஜீமினால் ரஜிராமிற்கு சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே ரஜிராமின் வகுப்பாசிரியராக ஒரு தமிழ் ஆசிரியையே கடமை புரிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரஜிராமின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாததன் காரணமாகவேதான் அதை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒரு வருடத்தின் பின் தாயாரினால் சிறுவன் அடையாளம் காணபட்டான்...

குறித்த சிறுவனுக்கு மனிதாபிமான நோக்கத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டதை, ஆட்கடத்தல் என்று கூக்குரலிடுகின்ற தமிழ் ஊடகங்கள், தமிழர் நல அமைப்புக்கள், அச்சிறுவன் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் நாட்கணக்கில் அனாதரவாக அலைந்து திரிந்த போது, தங்களின் உதவிக்கரத்தினை நீட்டி உதவி செய்ய முன்வராததன் மர்மம்தான் என்ன?

எனவே, இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் நாட்டில் நிலவுகின்ற இன நல்லுறவிற்கான தங்களின் கடப்பாட்டினை உணர்ந்து எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

'எந்தவொரு மனிதன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தினையும் கொலை செய்தவனைப் போலாவான். எந்தவொரு மனிதன் ஒரு உயிரை வாழ வைத்தானோ அவன் முழு மனித சமூகத்தினையும் வாழ வைத்தவன் போலாவான்.' (அல் குர்ஆன் 05:32)

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் ரஜிராம், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் போது, தன் கைப்பட எழுதிய அப்பியாசக் கொப்பிகளின் பிரதி.










25 comments:

  1. திரும்பவும் ஒரு சில ஊடகம் விசக் கருத்தை எழுதி தங்கள் ஈனப் புத்தியை உலகுக்கு காட்டுகிறார்கள் அந்த இணையத்திக்கு இதன் பிரதியை அனுப்பி உண்மையை தெளிவுபடுத்துங்கள் .
    Meraan

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் நிதானமாகச் செயல்படுவதே சிறந்தது. முஸ்லிம் அல்லாதவர்களின் தளங்களில் இருந்து விஷத்தைக் கக்கும் செய்திகளை புறக்கணிப்பு செய்வதே இன்றைய தேவை.

    யாரப்பா பலாத்காரமாக ஸுன்னத் செய்பவர்?

    பொய்யும் புளுகுமே தவிர வேறெதை தமிழ் தளங்கள் பிரசுரிக்கிறது?

    ReplyDelete
  3. ஒரு சிறுவனை எப்படி சட்டரீதியற்ற விதத்தில் கொண்டு செல்ல முடியும்? ஒரு குழந்தையை தத்தெடுத்தல் என்பதற்கு சட்ட முறை இருக்கின்றதல்லவா? இப்படி சட்டரீதியற்ற விதத்தில் கொண்டு சென்றது கட்டதல் தான். அதை நியாயப்படுத்தி நீங்களும் உங்களை அழுக்காக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. உண்மைகளைக் கண்டறிந்து, மக்களின் குழப்ப நிலையான எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, பொறுப்புக் கூறும் ஊடகம் என்ற விடயத்திற்கு அர்த்தம் காட்டியுள்ள உங்கள் பயணம் தொடர வேண்டும். உங்கள் போக்கு, மற்ற ஊடகங்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கட்டும்..

    ReplyDelete
  5. குற்றவாளிக்கு துணைபோவதையே அல்லது அவரை நல்லவராக காட்ட முற்படுவதையே நோக்கமாக கொண்டு வரையப்பட்டுள்ளது.

    1. 18 வயதுக்கு குறைந்த ஒருவரை விரும்பியோ, விரும்பாமலோ அழைத்துச் சென்றாலும் அது கடத்தலாகவே கருதப்படும்.
    2. சிறுவன் ஒருவன் கூறியதைக் கேட்டு அனுதாபத்தால் அழைத்துச் சென்றேன் என்று சொல்வது மற்றையவர்களின் காதில் பூச்சுற்றும் வேலை.
    3. ஒரு பிள்ளையை வளர்ப்பதற்காக எடுப்பதென்றாலும் அதற்கு நடைமுறைகள் உண்டு.
    4. வீதியில் அநாதரவாக இருந்த ஒரு பொருளை கொண்டுபோய் வீட்டில் வைத்தேன் என்று சொல்வது போலிருக்கின்றது இது.
    5. அந்த சிறுவன் அநாதையாக இருக்கின்றான் என்று அனுதாபம் வந்திருந்தால் முதலில் அவனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதன் மூலம் அவனுடைய உண்மை நிலையினை அறிந்து உண்மையில் அவன் யாருமற்ற அனாதையாக இருந்தால் அதன் பின்னர் உரிய வழிமுறைகளின் ஊடாக அவனை கூட்டிச் சென்றிருக்கலாம்.
    6. குற்றவாளியை காப்பாற்றுவதற்காக உங்களின் இணைத்தளத்தைப் பாவிக்காதீர்கள்.
    7. மேலும் மேற்படி விடயம் நீதிமன்ற வழக்கில் உள்ளதால் இதைப்பற்றி மேலும் கருத்த தெரிவிக்கவில்லை. வழக்கு முடிவில் அனைத்தும் தாங்கள் கூறியது போல வெளிச்சத்திற்கு வரும்.
    8. தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் (அழைத்து????) சென்று முஸ்லிமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லிம்கள் தொடர்பாக தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் சரியானதே...

    முஸ்லிம்களுக்கு சுன்னத் செய்வது சடங்காக இருக்கலாம்... ஆனால் தமிழ் சிறுவனுக்கு செய்தது கொடுமையே அன்றி வேறொன்றும் இல்லை...

    யாழ்ப்பாணத் தமிழன்

    ReplyDelete
  6. பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் தங்களது மீள் பதிவை வெளி விட வேண்டும்.
    அவ்வாறுதான் அவர் (நஜீம்) கஊடி சல்வதன்றல் ஏன் போலீசில் சொல்லவில்லை .....
    இவ்வாறு உதவி விரும்பத்தக்கது ஆனால் முறையாஹா சைய்ய வேண்டும் .....

    ReplyDelete
  7. மிகவும் தெளிவாக புரிகிறது எது உண்மையான விடயம் என்பது . ஆனால் சில தமிழ் ஊடகங்கள் தன்னை அறிமுகம் செய்வதற்கு இப்படியான சில்லறை சம்பவங்களை உண்மை தெரிந்தும் மடையர்களை போன்று நடப்பது வேதனை அளிக்கும் விஷயம்... ஆகவே இதனை குறித்த தமிழ்வின் போன்ற ஊடகங்கத்தினர் உண்மையை உணர்ந்து அறிவுடன் நடக்க முயற்சிக்க வேண்டும் பொய்யான விடயங்களை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து தனனது ஊடகத்திற்கு பலம் சேர்க்கக் கூடாது ... இது அறிவுடையோரின் விடயமல்ல ...

    ReplyDelete
  8. A marvalous reporting excellent service, I do appreciate Jaffnamuslim.com editor/board.

    Great Job-
    AbuBasim-KSA

    ReplyDelete
  9. மெலிஞ்சிமுனை அகம்

    ‎//யாழில் காணாமல் போன சிறுவன் மதம் - பெயர் மாற்றப்பட்ட நிலையில் - கிழக்கில் மீட்பு:-//
    என "குளோபல் ரமில் நியூஸ்" மே,22இல் வெளியிட்ட செய்திக்கும் படத்துக்கும் எதிர்வினையாக பானுபாரதி இட்ட பதிவும், அதற்கு வசைபாடி வந்த பின்னூட்டங்களும்.

    ----------------------------------------------------------
    ஊடகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுச் செடிகள்...
    -----------------------------------------------------------
    இந்தச் செய்தியை வடிவமைத்துள்ள விதத்தையும், அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள படத்தையும், வெவ்வேறு சம்பவங்களைக் கோர்த்துக்கட்டி இந்து முஸ்லிம் பிரிவினைக்குத் தூபமிடும் இஸ்லாம் எதிர்ப்புவாத நரித்தனத்தையும் பாருங்கள்.
    உலக ஊடகம் என்ற போர்வையில் இந்துத்துவ வெறியை வளர்க்கும் முயற்சியைத்தவிர வேறெதுவாக இது இருக்க முடியும்...?-பானுபாரதி-

    பானுபாரதி: ஊடகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுச் செடிகள்... May 23 at 4:43am

    ராமசாமி துரைரத்னம்: நடந்த உண்மையை சொன்னால் அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது. கொடுஞ்செயலை செய்யும் முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாக்கும் பரதேசி பண்ணடைகளே, யாழ்ப்பாணத்தில் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதை வெளியிட்டால் உங்களுக்கு நச்சு செடியாக தெரியுதா பரதேசிகளே May 23 at 12:26pm

    ராமசாமி துரைரத்னம்: சோனிகள் தமிழ் சிறுவனை பிடித்து சென்று சுன்னத்து செய்திருக்கிறார்கள். சோனியளுக்கு வக்காலத்து வாங்குபவர்களே உங்களுக்கும் சுன்னத்து கேக்குதா..? May 23 at 12:33pm

    பானுபாரதி: அண்ணே ராமசாமி அண்ணே, இந்துச் சிறுவனைப் பிடித்துக் கொண்டுபோய் முஸ்லிம் ஆக்கிப்போட்டார்கள் என்று உங்களுக்கு தார்மீகக் கோபம் வருவதாக நீங்கள் காட்டிக் கொள்வதெல்லாம் சரிதானண்ணே, கொஞ்சம் வார்த்தைகளை அளந்து கதையுங்கோ. இந்தச் செயல் கண்டிக்கத் தக்கது என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது. அதேவேளை ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழி போடுவதும் குற்றம் சுமத்துவதும் எந்தவித நியாயங்களுக்குள்ளும் அடங்காது பாருங்கோ. சமூக அக்கறையோடு ஊடகங்கள் நடாத்துபவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். ஒரு செய்தியை எப்படிப் பிரசுரிப்பதென்று. நீங்கள் கொண்டுள்ள அரசியல் கருத்தியல் என்ன என்பதன் வெளிப்பாடுதான் இப்படியான தன்மையுடன் செய்தியை வடிவமைக்கச் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் கிருமினல் வேலைகள் செய்யும் ஒருசில தமிழர்களுக்காக ஒட்டுமொத்த தமிழரையும் குற்றம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா... மீண்டும் ராமசாமி அண்ணைக்குச் சொல்ல விரும்புவது... வார்த்தைகளை அளந்து கதையும்... May 23 at 5:37pm

    கலையரசன்_ Ramasamy Thurairatnam, இனத்துவேஷம் பேசுவது கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்பதால், உங்களை நண்பரகள் வட்டத்தில் இருந்து நீக்குகின்றேன். May 24 at 2:03am
    -------------------------------------------------------------------
    இப்படி ராமசாமி துரைரட்ணம் போன்றவர்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக உசுப்பி விடுவதில் இந்த ஊடகங்கள் வெற்றியை அனுபவிக்கின்றன.. அன்புடன் தமயந்தி

    ReplyDelete
  10. Mohd.Nawshad-Qatar30/05/2012, 08:52

    Mashaa Allah, Good attempt taken by Bro.Mohd Niyas and real story on the subject should be brought to the management of the websites and the medias insisting them to publish the true story thoes published the fabricated story.

    Mohd.Nawshad- Doha-Qatar

    ReplyDelete
  11. ஐயா யாழ்ப்பாணத் தமிழனே,

    நீரும் புலி சார்பு ஊடகங்கள் போலவே சிந்திக்கின்றீரே!
    குறித்த சிறுவன் காத்தான்குடி பாடசாலையில் கல்வி கற்ற பொழுது
    கைப்பட எழுதிய பாடங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளனவே,
    அது உமது கண்ணுக்குப் பட வில்லையா?

    இந்தக் கட்டுரையின் நோக்கம், நஜீம் செய்தது சரி என்பதை சொல்வது அல்ல,
    மாறாக, ஒரு நிகழ்வை, தமிழ் ஊடகங்கள் எவ்வாறு திரித்து செய்தி வெளியிட்டுள்ளன
    என்பதனை சுட்டிக் காட்டுவதேயாகும். இதைப் பூந்து கொள்ளாமல், நீரும் தமிழ் ஊடகங்கள்
    போலவே சிந்தித்தால்????

    குறித்த சிறுவன் உண்மையில் கடத்தப் பட்டிருந்தால், அவன் மீண்டும் யாழ்ப்பானத்திட்கு
    அழைத்து வரப்பட்டிருப்பானா? சிறுவன் விருப்பத்திற்கு மாறாக சிறுவன் கடத்தப் பட்டிருந்தால்,
    அவனுக்கு கல்வி கற்பித்த தமிழ் ஆசிரியையிடம் ஏன் சொல்லவில்லை?

    1 இலிருந்து 8 வரை நம்பர் எல்லாம் போட்டு 18 வயதுக்குக் குறைவான ஒருவரை விரும்பியோ விரும்பாமலோ அழைத்துச் செல்வதைப் பற்றியெல்லாம்
    மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அண்ணரே, புலிகள் 18 பாதியான 9 வயதுச் சிறுவர், சிறுமிகளை எல்லாம் பலாத்தகாரமாக கடத்திச் சென்று
    ஆயுதப் பயிற்ச்சி கொடுத்து, கொலை ஆயுதங்களை கையில் கொடுத்து சயனைட்டை கழுத்தில் மாட்டி, இராணுவத்தினருடன் மொத வைத்தார்களே,
    அப்பொழுது உங்கள் குரல்கள் எல்லாம் எங்கே இருந்தன? தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு விசிலடித்துக் கொண்டிருந்தன.

    ReplyDelete
  12. Mohd.Nawshad-Qatar30/05/2012, 09:09

    Masha Allah best attempt taken by Bro.Mohd.Niyas and the real story of the subject should be brought the attention of the medias thoes published the fabricated story and insist them to publish the true story.

    Mohd.Nawshad, Doha-Qatar

    ReplyDelete
  13. இலங்கையின் ஒரு ரக்பி வீரருக்கு தங்கச் சங்கிலிகளை திருடிய குற்றத்த்திட்காக
    சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. குறித்த வீரர் ஒரு தமிழர்.

    முஸ்லீம்கள் கடத்தினார்கள், முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்று செய்தி வெளியிடும்
    எந்த தமிழ் ஊடகமும், ''தங்கச் சங்கிலி திருடிய தமிழருக்கு சிறைத் தண்டனை''
    என்று செய்தி வெளியிடவில்லை. வெளியிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை.

    இதே வழி முறையினை ஏன் முஸ்லிம்கள் சம்மந்தப் பட்ட விடயங்களில் கடைப்பிடிப்பதில்லை?

    ReplyDelete
  14. அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய சிலர் இப்படியும் வம்பில் மாட்டுவதுண்டு .-சிந்திநியுங்கள் அவர் யாழ்பாணத்தில் இருந்து சிறுவனை கடத்தி சென்றால் மீண்டும் ஏன் யாழ்பானத்திக்கு அழைத்து வர வேண்டும் .நல்ல மனதோடு சிறுவனுக்கு உதவ முன் வந்தது தப்பா? நஜீம் யின் பிழை முதலில் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று சொல்லி இருக்க வேண்டும் .அநேகருக்கு இந்த சட்ட திட்டங்கள் தெரிவதில்லை .அதனால் வீண் வம்பில் மாட்டுவதுண்டு

    ReplyDelete
  15. தமிழ் ஊடகங்களின் இந்த செய்தியிடலைப் பார்க்கும் போது சரிநிகர் போன்ற மாற்று ஊடகங்களின் இல்லாமையை உணர முடிகின்றது.

    ReplyDelete
  16. யாழில் காணாமல் போன சிறுவன் மதம் - பெயர் மாற்றப்பட்ட நிலையில் - கிழக்கில் மீட்பு:-
    22 மே 2012



    யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களினில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதேயிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கணடுபிடிக்கப்பட்டுள்ளாhன். மதம் மாற்றப்பட்டு இச்சிறுவன் வளர்க்கப்பட்டு வருகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

    முதலில் தன்னை கடத்திவந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

    அத்துடன் குறித்த சிறுவன் மத ரீதியான கிரியைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ள சிறார்களது நிலைபற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 19ம் திகதி சனிக்கிழமையும் வடமராட்சி நவிண்டில் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளான். தொண்டமனாறு கெருடாவில் பகுதியை சேர்ந்த மதகுரு ஒருவரது மகனான யோகேஸ்வரக்குருக்கள் செந்தூரன் என்பவனே காணாமல் போயுள்ளான். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் கல்லூரி 10ம் வகுப்பு மாணவனான இவன் தனியார் கல்வி நிலையத்திற்கென புறப்பட்டு சென்றிருந்த வேளையில் காணாமல் போயுள்ளான்.

    ஏற்கனவே காரை நகரில் மனநிலை குன்றிய யுவதியொருத்தியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் மத ரீதியான முரண்பாடுகள் மீண்டும் முனைப்பு பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கில் மீட்கப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/77830/language/ta-IN/---------.aspx

    அன்புடையீர் இதுவே குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளிவந்த செய்தி.

    எமது தளத்தில் முஸ்லீம்களை புண்படுத்தும் எந்த பின்னூட்டங்களும் வரவில்லை. இந்தச் செய்தியில் இனவாதம் மதவாதம் என்பவற்றை தூண்டும் தகவல்களையும் நாம் உள்ளடக்கவில்லை. எமது செய்தியாளர் உறுதிப்படுத்தி அனுப்பிய செய்தியையே இங்கு பொறுப்புணர்வுடன் பிரசுரித்தோம். அத்துடன் முஸ்லீம்கள் மட்டும் அல்ல எல்லா இனங்கள் குறித்தும் செய்திகளை வெளியிடும் போது ஊடக தர்மத்திற்கு அமைவாகவே வெளியிடுகிறோம். எமது செய்திகளை மீள்பதிவு செய்யும் தளங்களில் வரும் பின்னூட்டங்களை நாம்கட்டுப்படுத்த முடியாது என்பதனை இணையம் நடத்தும் உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவை இல்லை. வயது குறைந்த சிறுவன் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவராயின் அவர்மீது செலுத்தப்படும் எவ்விதமான அழுத்தங்களும் பலாத்காரமாகவே கருதப்படும். இது அவரது விருப்பத்திற்கு ஏற்ப எனக் கூறப்பட்டாலும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில் இது சட்டத்திற்கு முரணானது. இதனை ஒரு இந்து செய்தாலும் முஸ்லீம் செய்தாலும் கிறீஸ்தவர் செய்தாலும் தவறே. ஆனால் இந்த செய்தியை தெளிவாக வாசியுங்கள். நாம் எந்த இடத்திலும் முஸ்லீம் என்றோ சுன்னத்துச் செய்தது என்றோ அல்லது முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையிலோ செய்தியை பிரசுரிக்கவில்லை. இதற்கு உபயோகித்த படமும் மாற்றம் என்பதை மட்டுமே சுட்டி நிற்கிறது. இதற்கு நீங்கள் வேறு வியாக்கியானம் செய்தால் குளோபல் தமிழ்ச் செய்திகள் என்ன செய்ய முடியும். எமது தளம் ஆரம்பிக்கப்பட்டது முதல் நான் ஊடகவியலாளராக தொழிற்பட ஆரம்பித்ததில் இருந்து முஸ்லீம்கள் மட்டும் அல்ல சிறுபான்மையினரின் உரிமைகள் உணர்வுகள் குறித்து எடுக்கும் கரிசனை குறித்து எவரும் என்மீது கைகாட்டி கேள்வி எழுப்ப முடியாது. ஆனாலும் நானும் மனிதன் எல்லாம் அறிந்த உணர்ந்த ஞானி அல்ல என்னையும் மீறி சொற்பிரயோகங்களில் தவறுகள் ஏற்படலாம். ஆனால் அவை சுட்டிக் காட்டப்பட்ட போது பல இடங்களில் எனது வருத்தத்தை தெரிவித்து உள்ளேன். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் முஸ்லீம்கள் குறித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்து முஸ்லீம்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதாக கூறும் தளங்களோ அல்லது ஊடகங்களோ காட்டும் அக்கறையை விட பன்மடங்கு முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்பதனை எமது தளத்தை 2008ல் இருந்து வாசித்து வருபவர்களுக்கு புரியும்.

    நன்றி நடராஜா குருபரன்
    குளோபல் தமிழ்ச் செய்திகள்.

    ReplyDelete
  17. யாழ் தமிழனுக்கு நல்ல செருப்படி கொடுத்த நண்பருக்கு நன்றி
    யாழ் குருவி

    ReplyDelete
  18. globel tamilnews reporter's what he said we agree we expect this kind of understanding.
    Abdul Hameed

    ReplyDelete
  19. அன்பான சகோதரர்களே நடந்த விடயங்களை நோக்கும் பொது இரு பக்கமும் சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அந்த பிள்ளையை கூட்டி சென்றவர் ஒரு சிறு பிள்ளை அல்ல அவரும் 3 பிள்ளைகளுக்கு தந்தை இருந்தும் அவரது புத்தி எங்கே போனது சட்டம் என்று வரும் பொது அவன் அனாதையாக இருந்தான் அல்லது சாப்பிட வழி இல்லாமல் இருந்தான் என்ற விடயங்கள் சட்டத்தின் முன் எடுபடாத விடயங்கள் இதை அவர் அறியமாட்டார. இது இனிவரும் இதுபோன்ற செயல்களுக்கு நல்ல ஒரு பாடமாகஇருக்கும். " உண்மையான விடயத்தை உலகுக்கு தெளிவு படுத்திய JAFFNA MUSLIM.COM க்கு எனது மனமார்ந்த நன்றிகள் " அடுத்து சக முஸ்லிம் அன்பர்களே நஜீம் செய்தது மனிதாபிமான முறையில் சரியாக இருந்தாலும் சட்டத்தின் பார்வையிலும் மற்றும் தற்போதைய வடக்கு உள்ள சூல்நிலையிலும் அவர் செய்தது தவறே எனவே மாற்று சகோதரர்களிடம் சொற்போரில் ஈடுபடுவதை விடுத்து இனிமேலும் இதுபோன்றதொரு தவறு இடம்பெறாமல் எது செயினும் சரியாக செய்வதற்கு வழி அமைத்து கொடுபோமாக . அல்லாஹ் எமனைவருக்கும் நல்ல சிந்தனயுடன் செயல்படுவதக்கு உதவிசெய்வனாக

    இஷாக் ரஹீம்
    கெகுனகொள்ள

    ReplyDelete
  20. நடந்த சம்பவத்தில் நஜிமின் அறியாமை விழங்குகிறது ஆனால் அவரின் நோக்கம் நன்மையை நாடியது இன்னும் ஒன்று அவர் ஒரு சாரதி அவர் அந்த பையனை வீட்டு வேலைக்கோ வாகன வேலைக்கோ பயன்படுத்த வில்லை ஆகவே அவரின் நோக்கம் தெளிவாக விளங்குகிறது அவனுக்கு உதவி செய்யவே அன்றி வேறு ஒன்றும் இல்லை , ஆனால் நான் TAMIL WIN வின் மற்றும் TAMIL CNN தவறாமல் பார்த்டு வரும் ஒரு வாசகன் எந்நேரமும் எனது கணனியில் தமிழ் வின் OPENAKA இருக்கும் தமிழ் வின் இல் வரும் செய்திகள் ஒரு வித துவேசத்தை பிரதிபலித்தே வருகின்றன என்பது 100 %வீத உண்மை முஸ்லிம் செய்திகள் என்றால் ஒரு வித துவேசத்தை கக்கியே வெளியிடுகின்றனர் முஸ்லிம் நபர் தவறு செய்யும் பட்சத்தில் வேண்டும் என்றே குத்தி காட்டுகின்றனர் ஏன் தமிழ் தகப்பனால் சிறுமி மகள் வல்லுறவு என்று செய்தி வந்தது உண்டா ?? எத்தனை வல்லுறவு சம்பவம்கள் யாழ்ப்பணத்தில் நடைபெறுகின்றன ? இதனால முழு தமிழ் ஆண்களும் அப்படியா ?? இன்றைக்கு அதிகமாக பாலியல் துஷ்பிரயோக சம்பவம்கள் யாழ்பாணத்தில் தான் நடக்கின்றன அப்படியானால் தமிழர் களுக்கு காம வெறி அதிகம் என்ற முடிவுக்கு வரலாமா ????? சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களது சிறுபிள்ளைகளை கொன்றால் உங்களுக்கு எப்படி வலிக்கின்றதோ அதே வலிதான் எங்களுக்கும் இருந்தது ஏறாவூரில் , எனது ஊரில் பள்ளியில் எப்படி இரக்கமில்லாமல் கொன்று குவித்திங்க ?? ஆமி செய்தால் கொலை புலி செய்தால் புரட்சியா ??? உங்களுக்கு பெரும்பான்மை செய்த அதே தவரை எங்களுக்கு நீங்கள் செய்வது நியாயமா ??? இனியாவது தமிழ் வின் சற்று மாற முயற்சிக்கவும்.
    காத்தான்குடியில் இருந்து சப்றி

    ReplyDelete
  21. மேற்குறித்த சம்பவத்தில் நஜீம் செய்தது நூற்றுக்குநூறு வீதம் சரியென்று நிறுவுவது நமது நோக்கமல்ல.நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற விசாரணைகள் மூலம் யார் குற்றவாளி என்பது வெளிச்சத்திற்கு வரும்.அதுவரைக்கும் நஜீம் ஒரு சந்தேக நபர்தானே தவிர அவரை குற்றவாளி சொல்கின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது.
    நாம் கூறவருவது இதுதான்,
    நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்கடத்தல்,கொலை,கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் ஒன்று புதிதல்ல.நாளுக்குநாள் இவற்றில் ஏதாவதொன்று அல்லது அனைத்தும் நமது நாட்டில் எங்காவது ஓர் இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
    ஆனால் அவற்றை செயபவர்ககள் யாரையும் எந்தவொரு ஊடகமும் அக்குற்றவாளிகள் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரையோ அல்லது அவர்கள் வசிக்கும் ஊரின் பெயரையோ மையப் படுத்தி வெளியிடுவதில்லை.உதாரணமாக

    இன்று(30.05.2012)இணையத்தளங்களில் வெளியான ரக்பி வீரர் ஒருவர் ஒரு பெண்ணின் நகையினை அபகரித்த விடயம்;

    உண்மையில் இக்கொள்ளையில் ஈடுபட்டவர் ஒரு தமிழர்.ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட எந்தவொரு ஊடகமும் தமிழர் என்ற வாசகத்தினை பயன்படுத்தவில்லை.அதற்காகப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் கூறவில்லை.காரணம் அவர் செய்த குற்றத்திற்கும் அவர் சார்ந்துள்ள மதத்திற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.
    ஆனால் முஸ்லிம்களால் ஒரு விடயம் குற்றமாகக் கருதப்படும் போது மட்டும் அங்கே அவர்சார்ந்த மதத்தின் பெயர் அடையாளப்படுத்தப் படுகிறது.
    இது ஊடகங்கள் மேற்கொள்கின்ற ஒரு மோசடியாகும்.இதையேதான் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.பொதுவாக ஒருவர் ஒரு குற்றச் செயலைப் புரிந்தால் அவர் ஒரு சந்தேக நபர்,அல்லது குற்றவாளி என்றுதான் நோக்கப்படுவார்.அவர் ஒரு இஸ்லாமியரா,ஹிந்துவா,கிறிஸ்தவரா என்பதெல்லாம் தேவையற்ற விடயங்கள்.குற்றமென்றால்,அதை யார் செய்தாலும் தண்டனை ஒன்றுதான்.
    இரண்டு முஸ்லிம்கள் செய்ததாகக் கருதப்படுகின்ற ஒரு குற்றச்செயலை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதில் ஈடுபட்டதைப் போன்று சித்தரிக்க முற்பட்ட ஊடகங்களின் வன்மத்தனத்தினை கண்டிக்கிறோம்.
    ஏனைய மதத்தவர்களால் மேற்கொள்ளப் படுகின்ற குற்றச்செயல்களை வெளியிடும்போது அவர்களின் பெயரை மாத்திரம் பயன்படுத்துவதும்,முஸ்லிம்களால் மேற்கொள்ளப் படுகின்றவற்றுக்கு அவர்களின் பெயர்,சார்ந்துள்ள மதம்,வசிக்கின்ற பிரதேசம்,அவர்களின் மத்தத்தைச் சார்ந்தவர்களால் இதற்கு முன்னர் இழைக்கப் பட்ட குற்றச்செயல்களின் பட்டியல் போன்ற விபரங்களைஎல்லாம் குறிப்பிட்டு வெளியிடுகின்ற ஒரு பாரபட்ச முறையினை நாம் இங்கே சுட்டிக் கட்டியுள்ளோம்.
    தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல,எதிர்காலத்தில் முஸ்லிம் ஊடகங்கள் ஏனைய மதத்தவர்களின் விடயங்களில் இந்த முறையினை கையாள்வார்களானால் அதையும் நாம் உடனுக்குடன்சுட்டிக்காட்டுவோம்.
    எனவே இப்பின்னூட்டத்தில் கருத்துக்களையிடும் சகோதரர்கள் இவ்விடயத்தினைக் கருத்திற்கொண்டு உங்களின் கருத்துக்களை பதியுமாறு வினயமாய் வேண்டிக்கொள்கிறேன்.
    மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளின்போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று இங்கே விளக்கிக் கூறிய செய்தித்தொகுப்பாளர் நடராஜா குருவரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    முஹம்மது நியாஸ்.

    ReplyDelete
  22. இங்கே நடக்கும் கருத்தாடல்கள் அனைத்தும் ஒரு விடயத்தை உற்றுநோக்கத் தவறியிருக்கின்றன என்பது வெள்ளிடைமலை, அதாவது தமிழ் ஊடகங்கள் அல்லது தமிழர்களின் ஊடகங்கள் என தம்மை அடையாளப்படுத்த விரும்பும், துடிக்கும் அள்ளது துள்ளும் ஊடகங்கள் யாவும் ஒரே பாணியிலேயே சிந்திக்கின்ற செயலாற்றுகின்றன என்பதாகும்.

    “தமிழர்களின் இன உணர்வைத் தக்கவைப்பதற்கு இன்னுமொரு இனத்தின் மீது தங்கியிருக்கின்ற வேண்டிய நிலையில் எல்லா தமிழ் சார்பு ஊடகங்களும் இருக்கின்றன” அதாவது இன்னுமொரு இனத்தைக் காட்டித்தான் தமிழர்களின் தேசிய இனத்துவ உணர்வுகளை வளர்க்க, தக்கவைக்க வேண்டிய நிலை இன்று இருக்கின்றது. இந்த அடிப்படையில் உருவாகிய விடயங்களே குறித்த சிறுவனின் விவகாரமும், காரை நகர் பாலியல் வல்லுறவு நிகழ்வுமாகும். இவ்வாறான சமூகவிரோத செயல்கள் இன்று நாட்டின் எல்லாப்பாகங்களிலும் எல்லா இனத்தவர்களாலும் எல்லா மதத்தவர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன, இதற்கு சட்டரீதியான முறைமைகள் இருக்கின்றன, இங்கே குறித்த சிறுவனின் விடயத்தில் நியாயம் கூறும் உரிமை எம்மில் எவருக்கும் கிடையாது அது சட்டத்தின் வேலை, அதனை சட்டம் தன் கடமையைச் செய்யட்டும், நாம் விட்டுவிடுகின்றோம், ஆனால் ஊடகங்கள் குறிப்பாக தமிழ் சார்பு ஊடகங்கள் மேற்கொள்ளும் இத்தகைய அநாகரீகமான செயற்பாட்டை நாம் கண்மூடி வாய்பொத்தி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ் ஊடகங்கள்ள் தமது நிலைப்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.

    தமிழர்களின் உரிமைப் போராட்டைத்தை சீரழித்து தமிழர்களை இன்னமும் கிணற்றுத்தவளைகளாக வாழவைத்த பெருமையில் ஒரு பங்கு தமிழ் ஊடகங்களுக்கும் இருக்கின்றது. தலைவர் அகலக்கால் விரிக்க மாட்டார், உள்ளே வரவிட்டுத்தாக்குவார், எதிர்ப்படை திணறுகின்றது, வண்ணிக்குள் உள் இழுத்து வட்டமிட்டுத்தாக்குவார் என்று போர்க் காலங்களில் உசுப்பேத்திய ஊடகங்கள் ஒன்றேனும் அங்கிருக்கும் மக்களின் நிலைகளை சரிவர உலகிற்கு எடுத்துச்சொல்லத் தவறிவிட்டன என ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் அங்கலாய்த்தார், அதே போன்று யுத்த முடிவிற்கும் பின்னர் தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்ன அதற்கான தீர்வு என்ன என்று தமிழ் மக்களை அறிவூட்டாமல் தனிநாடு தனி நாடு என்று தமிழர்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சியில் தமிழ் ஊடகங்கள் முனைப்புடன் செயற்படுகின்றன.

    உண்மையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் 20 வயது வாலிபனை அழைத்து உனக்கு எதற்காக தனிநாடு தேவை என்று கேட்டால் அவன் எல்லோரும் கேட்கிறார்கள் அதனால் நானும் கேட்கின்றேன் என்றுதான் பதில் சொல்லுவான், அவனால் தனிநாட்டுக்கோரிக்கைக்கான அடிப்படைகள் என்ன என்று தெரியாது. அதேபோன்று 1950களில் நிலவிய நிலமைகல் 1983களில் நிலவிய நிலைமைகள் இப்போது மாறியிருக்கின்றன, சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு மாற்று வடிவம் பெற்றிருக்கின்றன அவை குறித்து எந்த தமிழ் ஊடகங்களும் அலட்டிக்கொள்வதில்லை, 1980களில் சிறீ குறியீட்டை வாகனங்களில் குறிப்பது தொடர்பாக ஒரு பாரிய போராட்டத்தை தமிழர் தரப்பு மேற்கொண்டது, இதனை எதிர்க்கும் நடவடிக்கைகளை சிங்கள அரசு தீவிரமாக செயற்பட்டது பின்னர் வடகிழக்கில் தமிழ் சிறீ எழுத்தும் தென்னிலங்கையில் சிங்கள சிறீ எழுத்தும் பாவனைக்கு வந்தது, ஆனால் இப்போது அந்த சிறீ இலக்கம் எங்கே????

    இவ்வாறாக தமிழர் தரப்பு உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தனது சமூகத்தை வழிநடாத்த கற்றுக்கொள்ள வேண்டும், அதைவிடுத்து இனத்துவ எண்ணங்களையும் இனங்களுக்கிடையிலான குரோதங்களையும் வளர்த்துவிடுவதால் நடக்கப்போவது என்றும் இல்லை, யாழ்ப்பாண நிகழ்வுகளோடு முஸ்லிம் சமூகத்தை இணைத்துப்பேசி அதனால் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? இன்னுமொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என்று கனவு காண்கின்றீர்களா?
    ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தற்போதுள்ள தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர தவறும் பட்சத்தில் அத்தகைய ஒரு தீர்வை ஒரு முஸ்லிம் மகன்தான் உங்களுக்குப் பெற்றுத்தரும் நிலை ஏற்படும். ஏனெனின் யாழ்ப்பாணம் எனதும் மண் இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் எனதும் உறவு என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மிகுந்த உறுதியோடும் நம்பிக்கையோடும் இருக்கின்றார்கள்.

    யாழ் முஸ்லிம் மைந்தன்

    ReplyDelete
  23. பனை மரத்தின் கீழ் இருந்து பால் அருந்தியுள்ளார். ஊராவீட்டு சோலி அவருக்கேன்? எதற்கும் ஒரு முறையுண்டு. அது தவறினால் இப்படித்தான் வரும்(எச்)

    ReplyDelete
  24. youre jaffna muslim so you will healp to muslim youre not instersted in this child why they dident take this chield to police station ?

    ReplyDelete
  25. குறித்த சம்பவத்தினை திரிபுபடுத்தி உண்மையினை மறைத்து செய்திகளை வெளியிட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் இனங்களுக்கிடையிலான முரணபாடுகளை வளர்க்கும் நச்சுத்தன்மை வெளிப்பட்டிருக்கின்றது எனவே இவர்கள் தொடரபில் தமிழ் முஸ்லீம் மக்கள் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.