விளையாட எனக்கொரு கால் வேண்டும் - டாக்டர் ரயீஸின் டயறியிலிருந்து...!
அம்பாறை மகாஓயா வீதியில் அம்பாறையிலிருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் ஆதல்ஓயா பாலத்தின் அருகே ஒரு சிறிய தயிர்க்கடை இருக்கிறது. சுபுன் மீகிரி என்ற பெயரில் இருக்கும்இந்தக் கடையில் சுத்தமான கலப்பில்லாத தயிர் வாங்குவதற்காக பலர் வாகனத்தை நிறுத்திச் செல்வர். அந்தக்கடையின் பல வாடிக்கையாளர்களுள் நானும் ஒருவன்.
சென்ற மாதம் ஒருநாள் நானும் மனைவியும் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் வழியில் அந்தக்கடைக்குச் சென்றோம். நாமிருவரும் வைத்தியர்கள் என்பது அந்தக் கடை உரிமையாளருக்கு தெரியும்.
ஆயுபோவன் மாஹத்தயா, மாஹத்தயா எனகங் தமய் ஹிடியே எக்ஸ்ரே எகக் பென்னகண்ட (எக்ஸ்ரே ஒன்றைக் காட்டுவதற்காக நீங்கள் வரும் வரைதான் காத்திருந்தோம்) என்று சொல்லியவாறு தனது 10 வயது மகனின் எக்ஸ்ரேயைக் காட்டினார் அந்தக் கடைச் சொந்தக்காரர்.
எக்ஸ்ரேயைப் பார்த்ததும் தயிர் தேவையில்லை. இந்தக்கடையில் வாகனத்தை நிறுத்தாமல் போயிருக்கலாம் என்று எண்ணியது மனது. எக்ஸ்ரேயைப் பார்த்த கணத்திலேயே என்ன நோய் என்று தெரிந்து கொண்ட நான் தொடர்ந்து அதனை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு அல்ல. என்னையும் எக்ஸ்ரேயையும் மாறிப் மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தந்தைக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் வந்து சேரும் வரையே எக்ஸ்ரேயைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்த என் மனைவியிடம் கொடுத்தேன். அதனைப் பார்த்துவிட்டு சிறுவனுக்கு என்ன நோய் என்பதைப் புரிந்து கொண்ட என் மனைவியினது முகமும் மாறுதலுக்குள்ளானது. எதுவும் பேசாமல் எக்ஸ்ரேயை என்னிடமே தந்தாள்.
மொகத மாஹத்தயா லொகு லெடக்த? (என்ன டாக்டர் பெரிய நோயா) என்றார் அந்தத் தந்தை. அவர் மிகவும் பின் தங்கிய இந்த சிங்களக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அப்பாவி மனிதர்.
உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்றேன்.
ஒரேயொரு மகன் பத்து வயது. முதல் குழந்தை பிறந்த பிறகு குழந்தைப் பாக்கியம் இல்லாமற் போய்விட்டது என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.
ஏன் எக்ஸ்ரே எடுத்தீர்கள்?
இரண்டு மாதங்களாக எனது மகனின் வலது முழங்காலுக்கு சற்று மேலே ஒரு வீக்கம் ஏற்பட்டது. நோவு எதுவும் இருக்கவில்லை. நடக்கவும் முடியுமாக இருந்தது. அந்த வீக்கம் சற்றுப் பெரிதாக வளர ஆரம்பித்ததும் அம்பாறை வைத்தியசாலைக்குச் சென்று சிறுவர் நோய் வைத்தியரிடம் காட்டினோம். அவர் எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறினார். அதுதான் எடுத்து வந்திருக்கிறோம். கிளினிக்கிற்குச் சென்று காட்ட வேண்டும். அதற்கிடையில் வீங்கிய பகுதியில் ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து பரீட்சித்துப் பார்ப்பதற்காக கொழும்புக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
என்னுடைய கேள்விகளால் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதைப் புரிந்து கொண்ட அவர் எக்ஸ்ரேயில் என்ன இருக்கிறது எதையும் மறைக்காமல் சொல்லிவிடுங்கள் டாக்டர் ? என்று அழ ஆரம்பித்துவிட்டார்.
முழங்காலுக்கு மேலே ஒரு கட்டியிருக்கிறது. இது எலும்பில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய் osteosarcoma என்பது அதன் பெயர். மீதியை சொல்ல முடியாது தடுமாறினேன். அவரோ விடவில்லை.
அப்படியானால் புற்றுநோய் இருக்கும் எனது மகனின் கால் துண்டிக்கப்படவேண்டுமா என்று கண்கலங்கினார்.
கொழும்புக்கு அனுப்பி செய்யப்பட்ட பரிசோதனையின் (biospy) முடிவு osteosarcoma ஆக இருந்தால் முழங்காலுக்கு மேல் தொடையென்பின் அரைவாசிக்கு மேல் துண்டிக்கப்பட்டு புற்றுநோய் பரவுவது தடுக்கப்படவேண்டும். எனவே காலைத் துண்டிப்பதைத்தவிர வேறு வழியில்லை. ஒருவாறு சொல்லி முடித்த போது கடைக்கு வந்திருந்த பலரது கண்களும் கசிந்துவிட்டன.
இது ஏன் டாக்டர் நாங்கள் கொடுத்த உணவுகளில் விற்றமின் போதாதா?
அவர்கள் ஏழைகள்தான், மெக்டோனல்ட், கே.எப்.சி.எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இருந்தும் கிராமத்து மண்ணில் உருவாகும் பயிர்களிலும் கிராமத்துக்குளத்தில் நீந்தித் திரியும் மீன்களிலும் மற்றும் உணவுகளிலும் தேவையான விற்றமின்களை இறைவன் வைத்திருப்பதால் விற்றமின்களுக்கு குறைவு ஏற்படாது.
இதற்கும் விற்றமின்களுக்கும் சம்பந்தமில்லை என்றேன்.
அப்படியானால் என்ன காரணம் டாக்டர்? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? படிப்பறிவற்ற அந்த அப்பாவித் தந்தையின் கேள்விகளும் அழுகையும் தொடர்ந்தன.
எனக்குப் பதில் தெரிந்திருக்கும் என்று நினைத்து மீண்டும் மீண்டும் கேட்கிறார். கடவுளின் படைப்புக்கு முன்னால் வைத்தியர்கள் அப்பாவிகள் என்பதை அந்த மனிதர் அறிந்திருக்கவில்லை.
என்ன காரணம், வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பதில் எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எந்த வைத்திய நிபுணருக்கும் தெரியாது. உங்களின் மகனுக்கு ஏற்பட்ட இந்த நோய் அமெரிக்க ஜனாதிபதியின் மகனுக்கும் ஏற்படலாம். உலகில் இருக்கும் அனைத்து விசேட வைத்திய நிபுணர்களும் ஒன்று சேர்ந்து ஆராய்ந்தாலும் பதில் கிடைக்காது.இப்போதைய மருத்துவ விஞ்ஞான அறிவு இதற்குரிய பதிலை இன்னும் அறியவில்லை என்றேன்.
விஞ்ஞானமும் மருத்துவமும் வளர்ந்திருக்கின்றன. அதன் மூலம் பல விடயங்களை கடவுள் கற்றுத் தந்திருக்கிறான். அப்படியிருந்தும் அவன் கற்றுத் தந்தது கையளவே. அவன் கற்றுத் தராதது தன்னளவில் வைத்திருப்பது எவ்வளவு என்பது எமக்குத் தெரியாது என்று அந்த மனிதருக்கு சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை.
அறிவைக் கொண்டுஒரு மனிதன் பெருமைப்பட்டுக் கொள்கிறான். சந்திரனுக்குச் சென்று வந்தது பெருமை. கலங்களுக்குள் ஒளிந்திருக்கும் கருவையும் ஜீனையும் கண்டுகொண்டது பெருமை என்று மனிதன் நினைக்கிறான். அப்படியிருந்தும் பெருமையடிக்கும் இந்த அப்பாவி விஞ்ஞான மனிதன் ஒரு கிணற்றுத் தவளைதான். பிரமாண்டமான பிரபஞ்சத்தின் படைப்பில் சந்திரன் புறக்கணிக்கக்கூய ஓர் அமைப்பு. அங்கு சென்று வந்தது பெருமையல்ல. மனிதன் ஓர் அற்புதப் படைப்பு.மனிதக் கலங்களில் இருக்கும் ஜீன் அற்புதமான ஆனால் முழு மனிதப் படைப்போடு ஒப்பிடும் போதுபுறக்கணிக்கக்கூடிய ஓர் அமைப்பு. அதனைத் தெரிந்து கொண்டது ஒன்றும் பெருமையல்ல.
ஐந்துநாட்களுக்குப் பின் மீண்டும் கொழும்பு திரும்பும் வழியில் அந்தக் கடையில் தரித்துச் சென்றோம். தந்தையும் மகனும் இருக்கவில்லை. அயலவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் மஹரகம வைத்தியசாலையில் இருப்பதாகவும் மகனின் வலது கால் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.
விளையாட எனக்கொரு கால் வேண்டும் என்று அந்த சிறுவன் கேட்டால் பெற்றோர் எங்கு செல்வார்கள்?வைத்தியர்கள் எங்குதான் செல்வார்கள்? கடவுளின் படைப்பின் மகிமைகளுள் ஒன்று அந்தக் கால்கள் இல்லாத போது தான் தெரிகிறது.
செயற்கைக் கால் பொருத்த மிகவும் செலவாகுமா டாக்டர்? அவர்கள் மிகவும் ஏழைகள் செயற்கைக் கால் பொருத்த அவர்களிடம் பணவசதியில்லை என்று கேட்டார் அந்தக் கடையிலிருந்த ஒரு பெண்மணி.
படைத்த இறைவன் கருணையுள்ளவன். அவனைப் படைத்த இறைவன் ஏதோ ஓர் ஏற்பாட்டை ஏற்படுத்தியிருப்பான் என்று கூறி அந்த இடத்திலிருந்து பிரிந்து சென்றோம்
Post a Comment