பல்கலைக்கழக மாணவ அனுமதி தொடர்பில் மூக்குடைபட்ட உயர் கல்வியமைச்சர்
புதிய இஸெட் புள்ளி முறைமையை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிக்க அனுமதி வழங்குமாறு உயர்கல்வி அமைச்சர் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தும், அந்த பெறுபேறுகளை இரத்துச் செய்யுமாறு கோரியும் 16 மாணவர்களுடன், இலங்கை ஆசிரியர் சங்கமும் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்கல்வி அமைச்சரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெறுபேறுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டதுடன், மே மாதம் 10 ஆம் திகதி அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் ஏதேனும் கருத்து தெரிவிப்பதாயின் இடைப்பட்ட காலப்பகுதியில் அதற்கான சந்தர்ப்பம் உயர்கல்வி அமைச்சருக்கு இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல், தீர்ப்பு வழங்குவதற்கு தினம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்வதற்கு உயர்கல்வி அமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென நீதியரசர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு உயர்கல்வி அமைச்சருக்கு எவ்வித உரிமையும் இல்லையென நீதியரசர்கள் குழாம் மேலும் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கே அதற்கான உரிமை காணப்படுவதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே இஸெட் புள்ளி முறைமையை தயாரிப்பதற்கு குழுவை நியமித்ததாக அறிவிப்பதற்கு உயர்கல்வி அமைச்சர் முயற்சிப்பதாகவும் நிதியரசர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.
நடைமுறையிலுள்ள இஸெட் ஸ்கோர் முறைமையில் குளறுபடி காணப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டு, அதன் தீர்ப்பிற்கான தினம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படக்கூடாது என்றும், அதற்கு அனுமதி வழங்க நீதிமன்றம் தயாரில்லை எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த நகர்த்தல் பத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

Post a Comment