Header Ads



அரசாங்க செலவில் ஹஜ்ஜுக்கு செல்லாதீர்கள் - இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல்வாதிகள் சொந்த செலவில் ஹஜ்ஜுக்கு சென்றால் போதும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு செலவில் ஹஜ்ஜுக்கு செல்லும் வழக்கத்தை அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும் என்று நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

புனித ஹஜ் பயணத்தை வர்த்தகமாக கருதவேண்டாம் என்று ஹஜ் டூர் ஆபரேட்டர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஹஜ்ஜின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்றால் தனியார் ஹஜ் டூர் ஆபரேட்டர்கள் இந்த தொழிலை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

புதிய ஹஜ் கொள்கை தொடர்பாக வருகிற மே மாதம் 13-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும்.

மத்திய அரசின் ஹஜ் கொள்கைக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை லாபக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலானதாகும். ஹஜ் புனிதப் பயணத்தை லாபம் சம்பாதிக்கும் வர்த்தகமாக பார்க்க கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு கோடி வர்த்தகம் புரியும் ஆபரேட்டர்கள் மட்டும் தனியார் ஹஜ் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்தால் போதும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தனியார் ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

50 ஹஜ் சீட்டுகள் மூலம் குறைந்தது 75 லட்சம் ரூபாய் வருமானத்தை சம்பாதிக்கும் உங்களால் மீதமுள்ள 12 மாதங்களில் இதர சேவைகளின் மூலம் 25 லட்சம் ரூபாய் கூட சம்பாதிக்க இயலாதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அரசு ஒதுக்கீட்டில் செய்வது போல ஹாஜிகளை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருப்பமான தனியார் ஹஜ் டூர் ஏஜன்சியை அணுகுவதற்கு வசதியை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஒத்துவரக்கூடியது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஹஜ் புனித பயணத்தின் செலவை குறைப்பதற்கான வழிகளை குறித்தும் நீதிமன்றம் ஆராய்ந்தது. ஏர் இந்தியா அல்லது சவூதி ஏர்லைன்ஸ் மூலமாக மட்டுமே ஹஜ் சர்வீஸ் நடத்தவேண்டும் என்பது சவூதி அரசின் கொள்கையாகும் என்றும் ஆகையால்தான் விமான பயணத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹான்வதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்மட்ட அளவில் பேச்சு வார்த்தை நடத்தி விமான கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருடந்தோறும் ஹஜ்ஜிற்கு பிரதமரின் நல்லெண்ணக் குழுவை நிறுத்த முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஹஜ் குழுவில் நான்கு பேர் போதும் என்றும், நான்கு அல்லது ஐந்து வருடத்திற்குள் குழுவை அனுப்புவதை முற்றிலும் நிறுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசின் புதிய ஹஜ் கொள்கையின் அடிப்படையில் எழுபது வயதிற்கு அதிகமானவர்களுக்கும், நான்கு தடவை தொடர்ச்சியாக விண்ணப்பித்தவர்களுக்கும் குலுக்கல் இல்லாமல் நேரடியாக ஹஜ் பயணம் செல்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.

ஹஜ் கமிட்டி மூலமாக ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஹஜ்ஜுக்கு செல்ல இயலும். பிரதமரின் நல்லெண்ணக் குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்காக அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹான்வதி மற்றும் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் ஆகியோர் ஆஜரானார்கள்.

No comments

Powered by Blogger.