Header Ads



தமிழர் கூட்டமைப்பை தெரிவுக்குழு முன் கொண்டுவர ஹக்கீம் மேற்கொள்ளும் முயற்சியை பலப்படுத்துவோம்


(இன்றைய 11-05-2012 நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இம்மாதம் 19ம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கு நாடு தவறியுள்ளது. இதன் காரணமாக நாடு பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பலமான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது நாளாந்தம் அதிகரித்து வருவதனை
அவதானித்து வருகின்றோம்.

பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழர்களின் பிரதான கட்சியான தமிழர் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையே நிலவும் பனிப்போர் காரணமாக இனப் பிரச்சினைக்கான தீர்வு காணும் முயற்சிநாளுக்கு நாள் இழுத்தடிக்கப்படுவதனையே அவதானிக்கின்றோம். தமிழர் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமென அரசாங்கம் கூறுகின்றது.

தமிழர் கூட்டமைப்போ அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென்று கூறுகின்றது.இந்தப் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர் கூட்டமைப்பினரை தெரிவுக்குழுவுக்கு அழைத்து வருவதற்கு தான் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொதுசன ஐக்கிய முன்னணியின் மேதின விழாவில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துரையாடிய போது ஹக்கீமின் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி பச்சை விளக்கு காட்டியுள்ளார். தமிழர் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவரான மூத்த அரசியல்வாதியான 35 வருட காலமாக தொடராக இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி வரும் ஆர். சம்பந்தன் தேசிய கொடியை ஏந்தி இந்த நல்லெண்ணத்தையே வெளியிட்டுள்ளார்.

இதேநேரம், அரசும் தமிழர் கூட்டமைப்பும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தின்படி தீர் வொன்றைக் காண்பதற்கான தெரிவுக்குழு ஒன்றை நியமித்தால் அந்தத் தெரிவுக்குழுவுக்கு தம் பிரதிநிதிகளை நியமிக்கத் தயாராக இருப்பதாக தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசுக்கும் தமிழர் கூட்டமைப்புக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தெரிவுக்குழு ஒன்றினை நியமிப்பதாயின் அது நியமிக்கப்படும் முறை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவுக்குழு நியமிக்கப்படமுன் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் தெரிவுக்குழுவின் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்ற வாக்குறுதிப்படியே தெரிவுக்குழுவை நியமிப்பதாக அரசு அறிவித்திருந்தது. அவ்வாறு அறிவித்தே ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் தெரிவுக்குழுவிடயம் இன்னும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே உள்ளது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட்டு தமிழர் தரப்பிற்கு தெரிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழர் கூட்டமைப்புக்கு தெரிவுக்குழுவுக்கு வரவுள்ள தடைகளை அகற்ற வேண்டும். இங்கே தான் இந்த விடயத்தில் தரகராகப் பணிபுரிய வந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணியுள்ளது. தமிழர் கூட்டமைப்புக்கு அரசு அளித்துள்ள வாக்குறுதிகளில் இதுவரை நிறைவேற்றப்படாதுள்ளவற்றை நிறை வேற்றுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

அவற்றை நிறைவேற்றுவதற்குள்ள தடைகளைத் தேடி அவற்றைக் கலைவதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்த அரசின் அமைச்சர் என்பதனைவிட ஒரு சிறுபான்மை இனத்தினது கட்சியின் தலைவரென்ற வகையில் அமைச்சர் ஹக்கீம் இந்தப் பணியில் ஈடுபட முன்வந்துள்ளார்.

எனவே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமுமுள்ள பலர் அரசாங்கத்துக்குள் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரங்களைப் பலப்படுத்தி தமிழர் கூட் டமைப்பினை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவருவதற்குள்ள தடைகளை அகற்ற உதவ வேண்டும்.

கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழர் தரப்பில் சொல்லப்படும் கருத்துக்கள் அவர்களது செயற்பாடுகள் தெரிவுக்குழு தொடர்பாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி வருகின்றது. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கைகடைப் பிடிக்க வேண்டும்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் நிலையில் இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசு முக்கியத்துவமளிக்க வேண்டும்.

இலங்கை வந்து சென்ற இந்திய பாராளுமன்ற தூதுக்குழு தெரிவுக்குழுவின் இயக்கம் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழர் கூட்டமைப்பு தெரிவுக்குழுவிற்கு வரவேண்டும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமை இந்த விடயத்தில் தரகராகச் செயற்படும் படியும் கேட்டுள்ளது. இந்தப் பின்னணியை இரு தரப்பினரும் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இழுபட்டுக் கொண்டிருக்கும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காண்பதற்கு வழி சமைக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.