Header Ads



பள்ளிவாசல்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு அக்கறை காட்ட வேண்டும்..!


(நவமணி பத்திரிகையில் 27-05-2012 இந்தவாரம் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கமே இது)

இலங்கை முஸ்லிம்களின் இரு கண்களில் ஒன்றாகவே பள்ளிவாசல்கள் இருக்கின்றன.பள்ளிவாசல் இன்று இந்த நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மாறியுள்ளது. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது ஐங்காலத் தொழுகையை நடத்துவதற்காக பள்ளிவாசல்களை அமைத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக முஸ்லிம் ஆண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை கூட்டாக மேற்கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இதனாலே முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் சிறியளவிலேனும் ஒரு பள்ளிவாசலை அமைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். பள்ளிவாசல்களை நிர்மாணித்து இந்த நாட்டில் தமது ஆதிக்கத்தை வியாபிப்பதற்கு முஸ்லிம்கள் முற்படுகின்றார்கள் என முஸ்லிமல்லாதவர்களில் குறிப்பிட்ட ஒரு சிறு விகிதத்தினர் சந்தேகிக்கின்றனர்.

இதனால் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து சில இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள முற்படுகின்றனர். தம்புள்ளையிலும் குருநாகலையிலும் தெஹிவளையிலும் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வரும் நிகழ்வுகள் இதனையே உணர்த்துகின்றன. பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் ஏன் நிர்மாணிக்கின்றார்கள். அதன் மூலம் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி மற்ற மதத்தவர்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் இது பற்றியுள்ள சந்தேகங்களைத் தவிர்க்க முடியும்.

இது குறித்து முஸ்லிம் சமூகம் குறிப்பாக உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் கூடிய கவனஞ் செலுத்த வேண்டும். இன்றைய சூழலில் பள்ளிகளின் தேவை எதற்காக என்பதை பிற சமூகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிவாசல்களது இருப்பு குறித்து இவ்வாறான பிரச்சினை ஒருபக்கமிருக்க பள்ளிவாசல்களுக்குரிய சொத்துக்களைப் பேணுவது குறித்தும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமேயுள்ளன.

இலங்கையின் தலைமைப் பள்ளிவாசலாகக் கருதப்படும் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குரிய பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அதாவது சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்கள் எவருக்கும் பயன்படாத ஒரு சிலரால் அனுபவிப்பதாக பெரிய பள்ளிவாசலின் சொத்துக்களை மீட்டெடுப்பதற்காகப் போராடும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நவமணி கடந்த 12ம் திகதி வெளியிட்ட தகவலின்படி கொழும்பு பெரிய பள்ளிவாசலிற்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்குச்சொந்தமான 11 ஏக்கர் 24 பேர்ச் காணியில் 40 வீதமான காணியே ஜனாஸாக்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய 60 வீதமான காணியில் மதுபானசாலை உட்பட்ட மற்றும் 75 வீதமான காணி அந்நிய மக்களின் கைகளிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அத்தர் மஹாலிலுள்ள நூற்றுக்கணக்கான கடைகளிலிருந்து கிடைக்கும் கூலி எவ்வளவு என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது கிராமப்புறங்களிலிருக்கும் பள்ளிவாசல்களை விட மோசமானதாக இருப்பதனை அவதானிக்கலாம். கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குரிய வருமானத்தினால் பள்ளிவாசல் மட்டுமன்றி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கொழும்பு வாழ் முஸ்லிம்களது வாழ்க்கையை வசந்தமாக்கலாம்.

மிக மோசமான கல்வி நிலையிலுள்ள 22 முஸ்லிம் பாடசாலைகளில் பல அபிவிருத்திகளை செய்து கொழும்பு முஸ்லிம்களது கல்வித் தரத்தை மேம்படுத்தலாம்.

களுத்துறையில் இருக்கின்ற போதி விஹாரைக்கு கிடைக்கும் வருமானத்தில் அதனைச் சூழ வாழும் மக்களது கல்வி மற்றும் சமூக நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றதுவே. பள்ளிவாசல்கள் இறைவனை வணங்கும் வழிபாட்டுத் தளங்களாக மட்டுமன்றி முஸ்லிம்களது மத்திய நிலையமாக அமைதல் வேண்டும். ஆதிகாலத்தில் ஊரின் மத்திய நிலையங்களாக பள்ளிவாசல்கள் இருந்துள்ளன. இந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். பள்ளிவாசல்களை பரிபாலிப்பவர்கள் இது குறித்து கவனம் எடுப்பது முக்கியமானது.

இதேநேரம், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள் எதுவும் சூறையாடப்படவில்லை என அதன் பரிபாலன சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யுங்கள் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பள்ளிவாசலின் சொத்துக்களை மீட்பதற்காக செயற்படும் அமைப்பு பள்ளிபரிபாலன சபை செயலாளரின் கூற்றினை மறுத்து அறிக்கை விட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலிலிருக்கும் பிரச்சினைக்கு தற்போது அப்பள்ளிவாசலை நிர்வகிப்போர் தான் முழுமையான காரணம் எனக் கூற முடியாது. இதற்கு முன்பு பள்ளிவாசலை நிர்வகித்தவர்கள் விட்ட தவறுகளை தற்போதுள்ளவர்கள் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம்.

இந்த விடயங்களை சீர் செய்வதற்கு அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அவை போதுமானதாக இல்லை. இந்த விடயத்தில் தற்போதைய பரிபாலன சபை துரிதமாக இயங்கி பள்ளிவாசலின் சொத்துக்களை பாதுகாக்க உரிய வருமானம் கிடைக்க வழி செய்தல் வேண்டும். இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களமும் வக்பு சபையும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிபரிபாலன சபைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கி கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சொத்துக்களைப் பாதுகாக்க மற்றும் அவற்றிலிருந்து உரிய வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மிதமிஞ்சிக் கிடக்கும் சொத்துக்களும் அதனால் பெறப்படும் வருமானமும் அந்தந்தப் பிரதேச ஜமாத்தாருக்கு உதவியாக அமையும் வகையில் ஒரு டிரஸ்ட் உண்டாக்கப்பட வேண்டும். நாட்டின் பள்ளிவாசல்களையும் பள்ளிவாசல் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.

1 comment:

  1. பூனைக்கு மணி கட்டுவது யார்?என்று பார்க்காமல் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமை.காலம் தாழ்த்தாது விரைந்து செயல் படுவோம்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.