மன்னார் ஆயரை மதிக்கிறோம் - ஆனால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதை அனுமதியோம்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.ஹமீத் அனுப்பிய அறிக்கை
வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ். றிஸாட் பதியுதீன் அவர்கள் பேசுகின்ற பொழுது - மன்னார் ஆயர் அவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற தடை பற்றியும் ஜனாதிபதிக்கு ஆயர் அவர்களால் இது தொடர்பாக எழுதிய கடிதம் பற்றியும் குறிப்பிட்டு, 20 வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து, இன்னும் அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்படவில்லை, அதற்கான தடைகள் எவை என்பதைப் பற்றியும் பேசினார். அவ்வாறு பேசியது தவறு. அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆயரிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அவரது பேச்சுக் கண்டிக்கத்தக்கது, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.
ஆயர் அவர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியது உண்மை, ஆயர் அவர்களே, வாராந்த தமிழ் பத்திரிகையொன்றில், 'அரச காணியில் சட்ட நடைமுறையினைப் பின்பற்றியே குடியேற வேண்டும். எனவே தான் நான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். முஸ்லிம்களின் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆயர் அவர்களை, ஒரு ஆயர் என்ற முறையில் நாம் மதிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆண்டாண்டு காலம் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்களின் சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து 'அகதி' முத்திரை குத்தி விடுதலைப் புலிகள் துரத்தி, இரண்டு தசாப்தத்திற்கு மேல் மாற்று இடங்களில் அல்லோல கல்லோலப்பட்டு, அரசாங்கம் கொடுத்த உலர் உணவை நம்பி வாழ்ந்து இப்போதாவது தம் சொந்த மண்ணிற்கு சென்று புது வாழ்வு ஆரம்பிக்கலாமா? என்று அவர்கள் அங்கலாய்க்கின்ற பொழுது அவர்கள் காலா காலம் வாழ்ந்த பூழிகள் விடுதலைப் புலிகளின் கையாட்களின் கைகளில் அகப்பட்டு இருக்கின்ற பொழுது, ஏதாவது மாற்று இடத்திலாவது போய்க் குடியிருப்போம், என்று போனால் மக்களை அன்புக் கண்களால் பார்க்க வேண்டிய ஆயருக்கே பொறுக்கவில்லை. ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுகின்றார். சட்டத்தைப் பேணவில்லை என்று.
இந்த நாட்டில் சட்டம் பேணப்பட வேண்டும், என்பதில் மதிப்பிற்குரிய ஆயர் அவர்களின் அக்கறையை மெய்ச்சுகின்றோம். ஆனால் அந்த அக்கறை அவலப்பட்ட மக்கள் ஆறுதல் தேட விளைகின்ற போது மட்டும் தானா? என்பதுதான் கேள்விக் குறியாகும். அதற்காக முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேற முற்பட்டார்கள். என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் ஆயர் அவர்களின் வாதத்தின் படி சட்டம் இந்த அவல மக்களுக்கு மட்டும்தானா. என்று தான் கேட்கின்றோம்.
சன்னார் ஈச்சிளவக்கை ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிகளில் கிளிநொச்சி மாவட்ட மாவீரர் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. மதிப்பிற்குரிய ஆயர் அவர்கள் அவ்வாறு சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றிவிட்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர்களுடைய சொந்தக் காணிகளை மீண்டும் வழங்க வேண்டும். என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவாரா?
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் எவ்வளவோ உள்ளன. அவைகள் தொடர்பாக எழுதுவாரா? அவலை முஸ்லிம்களுக்கு மாத்திரம் தானா சட்டம்.
இவற்றைப்பற்றிப் பேசுவது தவறா? முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் விடயத்தில் குறுக்கே நிற்பது மதிப்பிற்குரிய ஒரு ஆயர் என்பதற்காக முஸ்லிம் தலைமைகள் வாய்மூடி மௌனியாக இருந்தால் 20 வருடங்களாக வழிந்தோடுகின்ற இந்த அவலைகளின் கண்ணீருக்கு வழி என்னி தமது சமூகத்திற்கு நீதி கேட்டு குரலெழுப்புகின்ற ஒரு கட்சி இன்னுமொரு பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி கேட்டு அச் சமூகத்தின் தலைமைகள் பேசும் போது அது தவறு என்றால் அது என்ன நியாயம்.ஒரு மறை மாவட்ட ஆயர் என்ற முறையில் நாம் அவரை மதிக்கின்றோம்.
அதேநேரம் இன்னுமொரு சமூகத்திற்கு அநீதியைச் செய்துகொண்டு அச்சமூகத் தலைமைத்துவம் அமைதி காக்க வேண்டும், என்று எதிர்ப்பார்த்தால் நாம் இன்னும் அதிகம் பேசுவோம். எமக்கு நீதி கிடைக்கும் வரை பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தலைவர் அஷ்ரப் படைத்த சரித்திரத்தை தாங்களும் படைக்க வேண்டாமா,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மோசமான கருத்துக்களுக்கு மிகவும் அறுமையாகும் அமைந்திருக்கின்றது.உண்மையை சொல்லுங்கள்,புலிகளால் சொல்ல முடியுமெனில்,அதனை முன்னெடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால சொல்ல முடியுமென்றால்,இலங்கை முஸ்லிம்களால் ஏன் சொல்ல முடியாது..உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும்,அப்போது தான் அது எடுபடும்..
ReplyDeleteஜவாஹர் சாலி
கல்முனை