அமெரிக்காவை மகிழ்விக்கவே இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்க அனுமதியளிப்பு
இதுவரை இலங்கையில் இயங்காத இஸ்ரேல் தூதரகத்தை திறப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கை இஸ்ரேலுடன் தூதரக தொடர்புகளை கொண்டிருந்த போதிலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற போர் கொள்கை காரணமாக இலங்கையில் தூதரகத்தை திறக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அரபு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்றை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க, பாலஸ்தீனம் தொடர்பான இஸ்ரேலின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இஸ்ரேல் தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளமையானது பாரதூரமானது.
இந்த தீர்மானத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இலங்கை- பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்த தீர்மானத்தினால், அரபு உலகில் உள்ள நட்பு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்படும். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாவலான இஸ்ரேலுக்கு இலங்கையில் தூதரகம் ஒன்றை திறக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவதானது அமெரிக்காவிற்கு சாதகமான தனது நிலைப்பாட்டை காட்டுவதற்காகவே எனவும் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Sariya sonninga...
ReplyDelete