Header Ads



ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தினை கிழக்கு முஸ்லிம்களே நிர்ணயிக்க வேண்டிய அவசியம்

TM

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களென எவரொருவரையும் கட்சி இதுவரை பெயர் குறித்துத் தீர்மானிக்கவில்லை என்றும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுபவர்கள் தொடர்பில் முடிவுகள் எட்டப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மு.காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.காங்கிரஸ் தெரிவு செய்து விட்டதாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 'கிழக்குத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென - கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை. தேர்தல் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் மட்டுமே தற்போது நாம் ஈடுபட்டு வருகிறோம்.

அலிசாஹிர் மௌலானாவுக்கு கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் பதவியினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியை நான் சந்தித்துப் பேசியதாக கதையொன்று அவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளில் மட்டுமே நான் ஈடுபட்டு வருகிறேன். தனி நபர் ரீதியான எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் நான் இறங்கியதுமில்லை, தனிநபர் அரசியலுக்குத் துணைபோனதுமில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் எனும் விடயத்தில் 2012 ஆம் ஆண்டினை ஒரு கால இலக்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்னறிவுப்புச் செய்துள்ளார்கள். உண்மையில் இந்தக் கால இலக்கானது அவருடைய ஆன்மாவின் வெளிப்பாடு என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அந்தவகையில், தலைவர் அஷ்ரப் அவர்கள் நிர்ணயம் செய்த கால இலக்கில் முஸ்லிம்கள் அடைந்து கொள்ள வேண்டிய அரசியல் அந்தஷ்துக் குறித்தே நாம் இப்போது சிந்தித்து வருகின்றோம். தற்போதைய நிலையில், ஓட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தினையும்  கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களே நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர்' என்றார்.

1 comment:

  1. முஸ்லிம் மக்களுக்கு ஒன்று என்றால் ஆளையே காணோம். ஆனால் அரசியல் என்றால் வேட்டியை வரிச்சுக் கட்டிக்கிட்டு வருகினம். தம்புள்ள பிரச்சினைக்கு ஆள் எங்கோ போய் இருந்தினம் என்று தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்தாரோ? அது அவரது விருப்பமான செயல் தானே...

    ReplyDelete

Powered by Blogger.