விரிசலடைந்து வரும் ஈராக் துருக்கி உறவுகள் - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
ஈராக்கும் துருக்கியும் மீண்டும் கடும் முறுகல் நிலைக்கும் சொற்போருக்கும் ஆளாகியுள்ளன. ஓரளவுக்கு சிரிய யுத்தமும் ஈராக்கின் எரியும் பிரச்சினையாக மாறியுள்ள ஷியாசுன்னி மோதலும் அதன் தீய விளைவுகளும் இதற்கான நேரடிக் காரணங்கள் எனக் கூறலாம். ஈராக்கின் (பொம்மை) உப ஜனாதிபதியும் இராக்கியா முஸ்லிம் கட்சியின் பிரதான தலைவர்களுள் ஒருவரும் மிதவாத சுன்னி அமைப்புக்களின் தலைவருமான தாரிக் அல்ஹாஷெமி ஏறத்தாழ உயிர்ப்பாதுகாப்பிற்காக துருக்கியில் தஞ்சமடைந்துள்ளார். ஈராக்கை மட்டமல்ல முழுப் பிராந்தியத்தையும் பயமுறுத்தக் கூடிய நிகழ்வாக இதனைக் கருத முடியும். மத்திய கிழக்கின் புவியியல் அரசியலில் முக்கிய மையமாக ஈராக் இன்று விளங்குகிறது. ஈராக்கின் உள் விவகாரமான மதப் பிரிவினை மோதல்கள் பிராந்திய மோதல்களாக வெடிப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தாரிக் அல்ஹாஷெமியின் வெளியேற்றம் பல கேள்விகளையும் சர்வதேச ரீதியிலான சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஈராக் பிரதமர் நூறி அல்மாலிக்கியின் அரசியல் போக்குகள் குறித்து அதிருப்தியும் ஐயங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஹாஷெமியின் தஞ்சத்தைத் தொடர்ந்து ஈராக்கிற்கும் துருக்கிக்கும் இடையிலான தொடர்புகளில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளது. பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் கொண்ட சொற்போர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பிரதமர் மாலிக்கி ஒரு விடயத்தைக் கவனமாக உணர வேண்டும். மதப் பிரிவுகளுக்கிடையிலான மோதல்களை மாலிக்கி உருவாக்கினால் அதை துருக்கி வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது' என்று துருக்கிப் பிரதமர் எர்டோகான் கூறியுள்ளார்.
"துருக்கிப் பிரதமர் எர்டோகான் எல்லா ஈராக்கியரினதும் மனங்கள் புண்படுமாறு பேசிவருகிறார். ஈராக்கியர் அனைவரும் ஈராக்கியர் என்பதில் பெருமையடைகிறார்கள். சுன்னிகளும் ஷியாக்களும் ஒரு சகோதரர்கள் போன்று வாழ்கிறார்கள். இவர்களுக்கு உதவப் போவதாக யாரும் கூற வேண்டியது அவசியமில்லை' என்று ஈராக் பிரதமர் மாலிக்கி உடனடியாக துருக்கிப் பிரதமரின் கூற்றுக்குப் பதிலளித்துள்ளார்.
சர்வதேச பொலிஸ் அமைப்பான "இன்டர்போல்' அல்ஹாஷெமி மீது அவசர பிடிவிறாந்தைப் பிறப்பித்துள்ளது. மாலிக்கி அரசு வெளியிட்ட பிடிவிறாந்திற்கு மேலதிக பிடிவிறாந்தாக இதைக் குறிப்பிடமுடியும். இதைத் தொடர்ந்து ஈராக்கில் சுன்னிப் பிரிவினருக்கும் ஷியாக்களுக்கும் இடையிலான சந்தேகமும் மோதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஹாஷெமி தன்மீது சுமத்தப்பட்டுள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார். இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என்றும் மாலிக்கி அரசை ஹாஷெமி குற்றஞ்சுமத்தியுள்ளார். ஷியா மதப் பிரவு அரசாங்க அதிகாரிகளையும் இராணுவ வீரர்களையும் (ஷியா) பொதுமக்களையும் கொலை செய்வதற்காக "கொலைப் படை' ஒன்றை தலைமை வகித்து நடத்தினார் என்றும் அதற்கு நிதியுதவி செய்து வந்தார் என்றும் ஒரு குற்றச்சாட்டு கூறுகிறது. புனித யாத்திரையில் பயணித்த ஷியா பொதுமக்கள் உட்பட பல பேரைப் பலி கொண்ட 150 க்கும் மேற்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தம் இருப்பதாகவும் ஹாஷெமி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
தன்னைக் கொலை செய்வதற்கான அல்லது கைது செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக ஹாஷெமி பயந்தார். இதன் முதற்கட்டப் பாதுகாப்பு நடவடிக்கையாக ஈராக்கின் சுன்னி குர்திஷ் பிராந்தியத்திற்கு சுயாட்சிப் பிராந்தியத்திற்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து சவுதிக்கும் கட்டாருக்கும் சென்றார். ஹாஷெமியைத் திருப்பி ஒப்படைக்குமாறு குர்திஷ்தானையும் கட்டாரிலும் ஈராக் வலியுறுத்திக் கெட்டுக்கொண்டது. ஈராக்கின் பிராந்திய சுயாட்சிஅரசான குர்திஷ்தான் உட்பட எல்லா (சுன்னி) நாடுகளும் இவ் வேண்டுகோளை நிராகரித்துவிட்டன.
மே 8 ஆம் திகதி இன்டர் போல் பிடிவிறாந்து வெளியிடப்பட்டாலும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறிய மறுநாளே ஈராக் அரசு ஹாஷெமியைக் கைது செய்வதற்கான ஆணையை உயர்நீதிமன்றத்தின் ஊடாகப் பிறப்பித்திருந்தது. அரசிற்கு ஆதரவளித்துவரும் சுன்னிக் கட்சிகளும் ஏனைய சுன்னி அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றக் கூட்டத் தொடர்களையும் அமைச்சரவைக் கூட்டங்களையும் சுன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் புறக்கணிப்புச் செய்தனர். சில வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
மே 8 ஆம் திகதி இன்டர் போல் பிடிவிறாந்து வெளியிடப்பட்டாலும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறிய மறுநாளே ஈராக் அரசு ஹாஷெமியைக் கைது செய்வதற்கான ஆணையை உயர்நீதிமன்றத்தின் ஊடாகப் பிறப்பித்திருந்தது. அரசிற்கு ஆதரவளித்துவரும் சுன்னிக் கட்சிகளும் ஏனைய சுன்னி அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றக் கூட்டத் தொடர்களையும் அமைச்சரவைக் கூட்டங்களையும் சுன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் புறக்கணிப்புச் செய்தனர். சில வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
ஹாஷெமிக்கும் ஏனைய சுன்னித் தலைவர்களுக்கும் எதிரான மாலிக்கி அரசின் இக்கடும் போக்கு சுன்னிகளை அதிருப்திக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. எவ்வாறாயினும் அரபு மக்கள் எழுச்சியை ஹாஷெமி தலைமையில் சுன்னிகள் ஈராக்கில் உருவாக்கலாம் என்ற சந்தேகம் மாலிக்கி அரசிற்கு உள்ளது. சர்வாதிகாரத்திற்கும் ஊழலுக்கும் மதப்பிரிவினைவாதத்திற்கும் எதிரான பிரசாரங்களை ஈராக் அரசிற்கு எதிராக முன்வைப்பதிலும் பொதுமக்களை ஓரணியில் திரட்டுவதிலும் ஹாஷெமி செயலூக்கம் உள்ளவராக ஏக்கினார் என்பது உண்மையே.
"ஹர்ரியத் டெய்லி'க்கு வழங்கிய பேட்டியில் ஹாஷெமி பின்வருமாறு கூறியிருக்கிறார்,
"எமது பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து அரசியல் யாப்பு மூலமாகத் தீர்க்காவிட்டால் எமது நாட்டின் எதிர்காலம் மங்கலானது, கவலைக்கிடமானது. ஆகவே தேவையான விருப்பங்களும் கோரிக்கைகளும் பேச்சு மேசைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஐக்கிய ஈராக்கைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இது நடந்தாக வேண்டும்'.
மாலிக்கி (ஷியா) ஆட்சி, விரும்பாத விடயங்களை ஹாஷெமி பேசி வருகிறார். அண்மையில் நடந்த அரபு உச்சிமாநாட்டில் எடுத்த தீர்மானங்களை மாலிக்கி நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் சிரிய ஆட்சியாளர்களைப் பலப்படுத்தும் வகையில் இராணுவ உதவிகளையும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதன் மூலம் மாலிக்கி தனது ஷியா பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ஹாஷெமி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஹாஷெமியின் சகோதரர் ஜெனரல் அமீர் அல் ஹாஷெமி, அவரது சகோதரி மெய்சூன் ஆகியோரின் படுகொலைகளில் மாலிக்கியின் கரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் ஹாஷெமி கூறியுள்ளார். சர்வாதிகாரம், ஊழல், பிராந்திய பிரச்சினை அனைத்திற்கும் காரணமாயுள்ள மாலிக்கி பதவி விலக வேண்டுமென்பதே ஹாஷெமியின் ஒரே கோரிக்கையாகும்.
"வைத்தியப் பரிசோதனைகளுக்காக ஹாஷெமி துருக்கி வந்துள்ளதாகவும் பரிசோதனைகள் முடிந்ததும் ஈராக் திரும்பிவிடுவார்' என்றும் துருக்கிய அரசு பொதுவாகக் கூறியுள்ள போதிலும் அரச பாதுகாப்புடன் ஹாஷெமி அரச விருந்தினர் போல் ஆடம்பர மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். துருக்கித் தலைவர்களுடன் ஈராக் மற்றும் சிரிய மோதல்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகிறார். சவுதிக்கு அடுத்ததாக சுன்னிகள் விவகாரத்தில் விசேட அக்கறை காட்டும் நாடாக துருக்கியைக் கூற முடியும். தனது எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய அரச அந்தஸ்துகளுக்காக மட்டுமன்றி திரும்ப ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை துருக்கி உதாசீனம் செய்து வருவதனாலும் மாலிக்கி அரசு துருக்கி மீது கடும் கோபத்தில் உள்ளது.
இத்தாலியில் பத்திரிகையாளர் மத்தியில் பேசும்போது, துருக்கிப் பிரதமர் இன்டர்போல் பிடியாணைக்குப் பதில் தரும் முயற்சிகளை ஹாஷெமி ஈடுபட்டுவருவதாகவும் இந்த விடயங்களில் துருக்கி அவருக்கு உதவி வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தாம் ஆதரிக்கும் ஒருவரை திருப்பி ஒப்படைப்பதற்கு துருக்கி ஒருபோதும் சம்மதிக்காது என்று துருக்கி பாராளுமன்றத்தில் அரச தரப்பினர் கூறியுள்ளனர். துருக்கி மீது தனக்கு பெரிய நம்பிக்கை இருப்பதாக ஹாஷெமி கூறியுள்ளார்.
தனது இராக்கியா கட்சிக்கான தத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் போது துருக்கியின் ஆளும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியும் தத்துவங்களிலிருந்து பலவற்றைத் தான் அப்படியே எடுத்தாண்டிருப்பதாகவும் ஈராக்கிற்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டும் தான் செய்துள்ளதாகவும் ஹாஷெமி துருக்கியில் பேசியுள்ளார்.
இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் பாலமாக விளங்கக்கூடிய புதிய அரசியல் பரிசோதனைத் தத்துவமாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் (ஏ.கே.பி.) கொள்கைகள் கருதப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் கவனத்தை இது பரவலாக ஈர்த்து வருகின்றது என்ற செய்தியையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
ஈராக்கில் சுயாட்சிஅதிகாரம் பெற்றுள்ள குர்திஷ்தான் பிராந்திய அரசாங்கமும் மாலிக்கி அரசை எதிர்த்து வருகிறது. மத்திய அரசு பிராந்திய அரசைத் தனிமைப்படுத்தி வருவதாகவும் வருமான வாய்ப்புகளை தரமறுப்பதாகவும் தனது பிராந்தியத்தில் ஷியா மேலாதிக்கத்தைத் திணிக்க முயல்வதாகவும் குர்திஷ் தலைவர் மசூத் பராஸானி ஈராக் அரசை குற்றஞ்சுமத்தியுள்ளார். தாரிக் அல்ஹாஷெமியை மாலிக்கி அரசு மிக மோசமாக நடத்துவதாகவும் குர்திஷ் இன முஸ்லிம்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈராக்கில் 20 சதவீதமான குர்திஷ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் சுன்னிகள். வூõபி மத்ஹபைச் சேர்ந்த இவர்கள் காதிரிய்யா, நக்ஷ்பந்தியா போன்ற மறைஞான அல்லது சூஃபித் தரீக்கா பள்ளிகளை சிறப்பாகப் பின்பற்றுகின்றனர். மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றுள்ள முக்கிய சூஃபித்துவத் தரிக்கா பள்ளிகள் பல ஈராக்கிலுள்ளன. காதிரிய்யா, சாதுரியா, நக்ஷ்பந்தியா போன்ற சூஃபித் தரிக்கா பிரிவுகளை இலங்கையிலும் காண முடியும்.
ஈராக் சமூகத்தில் காதிரிய்யா தரிக்கா பிரிவு மிகவும் பிரபலமானது. இலங்கையிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இத்தரிக்காவுக்கு உண்டு. இரத்தினபுரிபலாங்கொடையிலுள்ள தப்தர்ஜெய்லானி மலைக்குகை இலங்கையில் காதிரிய்யாத் தரீக்காவின் சின்னமாகப் போற்றப்படுகிறது.
காதிரிய்யாத் தரீக்காவின் பெருந் தலைவரான அப்துல் காதிர் ஜெய்லானியின் வரலாற்றுடன் தப்தர்ஜெய்லானியின் வரலாற்றையும் இணைத்துப் பேசும் பல தகவல்கள் உள்ளன. ஈராக்கில் ஜீலான் என்ற இடத்தில் ஹிஜ்ரி 471 இல் பிறந்த அப்துல் காதிர் ஜெய்லானிக்கும் இலங்கையிலுள்ள அவர் பெயரிலான சின்னங்களுக்கும் இடையிலான தொடர்புகள் வரலாற்று ஆய்வாளர்களின் கவனிக்கப்படக்கூடியவை ஆகும்.
ஆனால், ஈராக்கிலும் மத்திய கிழக்கின் ஏனைய சில பகுதிகளிலும் எழுந்துள்ள சமய உடற்பூசல்களில் சூஃபித்துவத் தரிக்காக்களுக்கு எதிரான மோதல்களும் இன்று முக்கிய இடத்தில் உள்ளன. சதாம் ஹுசைனின் வீழ்ச்சியுடன் சுன்னி சமயப் பிரிவினருக்குள் ஏற்பட்ட பிரதான பூசல்களில் இதையும் ஒன்றாகக் கருதலாம். ஷியாசுன்னி உட்படப் பல முனைகளிலிருந்து எழுந்துள்ள கவலைக்குரிய சமயப் பிரிவினைவாதமும் சமய உட்பூசல்களும் நிலையான ஐக்கியத்திற்கு பெரும் சவாலாகவே அமையும்.
2003 இல் ஈராக்கில் நடைபெற்ற அமெரிக்க ஆக்கிரமிப்பானது பெரிய அரசியல், சமூக மாற்றங்களையும் புதிய பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. இனக்கலவரங்களும் சமயப் பிரிவினைவாத மோதல்களும் தீவிரமடைந்துள்ளன. இவை உள்நாட்டு யுத்தத்திற்கு வலிவகுக்கும் என்பதை 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வாளர்கள் அனுமானித்திருந்தனர்.
ஜனநாயகத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டதும் சதாம் யுகத்திற்குரிய சிறுபான்மை சுன்னிகளின் அரசியல் பலம் நெருக்கடிக்குள்ளாகியது. பெரும்பான்மை வாக்குப்பலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தியதன் மூலம் ஷியாக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தேர்தல் முறையானது மாற்றத்தைக் கொண்டுவந்த போதிலும் சதாமின் சர்வாதிகாரமும் முடிவுக்கு வந்திருந்த போதும் புதிய ஆட்சி மாற்றம் நச்சு வட்டத்தைப் போல மீண்டும் சர்வாதிகாரத்திற்கே ஈராக்கைக் கொண்டு வந்தது.
மாலிக்கியின் கைகளில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றமும் சுதந்திமாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையமும் மாலிக்கின் கட்டுப்பாட்டில் உள்ளன. முப்படைகளும் பாதுகாப்பு அமைச்சும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அவரது கைகளில் உள்ளன. சர்வாதிகாரத்திற்கான பூர்வாங்க அங்கலட்சணங்கள் இவைதான். உண்மையான ஜனநாயகம் இதனை உடைத்தெறிவதைப்பற்றிய பாடங்களைத் தான் மக்களுக்குக் கற்றுத் தருகிறது.
Post a Comment