Header Ads



யாழ்ப்பாணம் சின்னப்பள்ளி மீளமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் (படங்கள் இணைப்பு)

எம்.எஸ்.ஜினூஸ் (கிராம அலுவலர்)

யாழ் சின்னப்பள்ளிவாசலின் மீளமைப்புப் பணி கடந்த 2012 ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான எட்டு அறைகளும் மலசலகூடமும் மீளமைக்கப்பட்டு மஹல்லாவாசிகளின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிவாசல் கட்டிடம் மீளமைக்கப்பட்டு வருகின்றது. பள்ளிவாசலின் ஓரச் சுவர்கள் , கூரை வேலைகள் என்பன ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன. நிலமிழுத்தல் , மின்சார வேலைகள், வர்ணம் பூசும் வேலை, கதவு நிலை யன்னல்கள் செய்யும் வேலை என்பனவே மீதமாக உள்ளது. இந்த வேலைகள் நிறைவு பெற்றதும் தொழுகை உட்பள்ளியினுள் ஆரம்பிக்கப்படும். இப்பணிகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நிறைவு பெறுமென கட்டிட பணியை முன்னின்று மேற்கொண்டு வரும் எஸ்.ஏ.சி. நிலாம்தீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 26.05.2012 அன்று கட்டுமானப்பணிகளை பார்வையிட யாழ் சென்றிருந்த கட்டிட நிர்மாணக் குழு பிரதிநிதிகள் கட்டிட அமைப்பு எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக கூறினர். அத்துடன் மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகைகளுக்கு பதினைந்து பேர் சமூகமளித்திருந்ததைக் கண்டு சந்தோஷமடைந்தனர்.

யாழ் சின்னப்பள்ளி மீளமைப்பை மீள்குடியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படுத்த வேண்டுமென்பதே கட்டிட மீளமைப்புக் குழுவின் நோக்கமாக இருந்தது. பள்ளிவாசல் அறைகளில் வெளியூர்வாசிகள் , வியாபாரிகள்,  மாணவர்கள் என்போர் தங்கியுள்ளதால் இரவு வேளையில் பள்ளிவாசல் வளாகம் சனப்பிளக்கத்துடன் திகழ்வது மற்றும் தொழுகைக்காக பலர் ஒன்று சேர்வது என்பன இறைவன் உதவியால் மீள்குடியேற்றத் திட்டம் வெற்றிபெற்று விட்டதைக் காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பெண்களுக்கான தொழுகை அறையொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற மஹல்லாவாசிகள் சிலரின் கோரிக்கைகளை அடுத்து தற்போது பள்ளிவாசலின் முன்பக்கத்தில் இடது புறத்திலுள்ள அறையை பெண்கள் தொழுமிடமாக மாற்றவும் கட்டிட நிர்மாணக்குழு இணங்கியது. அத்துடன் பெண்களுக்கான மலசல கூடமும் அமைத்துத் தர குழு இணங்கியுள்ளது. வெளியூரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் பெண்கள் தமது இயற்கைக் கடன்களை நிறைவேற்றவும் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த பெண்கள் தொழுகையறை எதிர் காலத்தில் உதவியாக இருக்கும். இதற்கான நிதியையும் கட்டிட மீளமைப்புக் குழு பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளது.
 
யா அல்லாஹ் எமது முயற்சியை அங்கீகரித்து எமது குறைகளை பொறுத்தருளி எம்மையும் எமது இப்பணிக்கு உதவி செய்தவர்களையும் நீ பொருந்திக் கொண்ட நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.




No comments

Powered by Blogger.