Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தல், நமது நிலைப்பாடு என்ன..?


(நேற்று வியாழக்கிழமை மே, 17 ஆம் திகதி வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசியர் தலையங்கத்தை இங்கு பதிவிடுகிறோம்)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவில்  நடத்துவதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் இத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஜூன் மாதத்தில் கிழக்கு மாகாண சபையை கலைப்பது எனவும் செப்டெம்பரில் தேர்தலை நடத்துவது எனவும் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், இறுதியாக நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் போன்றே இத் தேர்தலும் அதிக கவனயீர்ப்பைப் பெற்ற ஒன்றாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த தேர்தலில் சூட்டைக் கிளப்பிய ‘முஸ்லிம் முதலமைச்சரா? தமிழ் முதலமைச்சரா?’ எனும் இழுபறி இந்த முறையும் நடக்கத்தான் போகிறது என்பதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதே வெளித் தெரிய ஆரம்பித்துவிட்டன.

இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ள நிலையில் கிழக்கின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் தமது பலத்தை உரசிப் பார்ப்பதற்கான முயற்சிகளும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் எனலாம்.

எது எப்படியிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தை மிகத் தெளிவாக வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வதற்கான ஒரேயொரு களமாக கிழக்கு மாகாண சபையே இருக்கிறது. இம் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பெறும் வாக்குகளே அவற்றின் செல்வாக்கைப் பறைசாற்றப் போகின்றன.

அதற்குமப்பால் தற்போதைய மாகாண சபை மூலமாக முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும் நிறையவே பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். குறிப்பாக உள்ளூராட்சி சபைகள் திருத்த சட்ட மூலம், நாடு நகர திட்டமிடல் சட்ட மூலம் என்பவற்றில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். சிலர் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிபணிந்து விலைபோனார்கள். இன்னும் சிலர் சமூகத்தின் உரிமைகளுக்காக அவற்றை எதிர்த்து நின்றார்கள்.

நிச்சயமாக அடுத்த மாகாண சபை சிறுபான்மையினருக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே அமையப் போகிறது. வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையினரின் ஆதிக்கமும் குறிப்பாக பௌத்த தீவிரப் போக்கு கொண்டவர்களின் தலையீடுகளும் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாகாண சபையில் இதனை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதற்கான தூரநோக்கு இந்த இடத்தில் அவசியமாகும்.

முஸ்லிம் முதலமைச்சரா தமிழ் முதலமைச்சரா என்ற விவாதத்துக்கும் கோஷத்துக்கும் அப்பால் கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் கருத்தொருமித்து நிற்பது எவ்வாறு என்பதைப் பற்றிய உடன்பாட்டுக்கு வருவதே காலத்தின் தேவையாகும்.

தனித் தனிக் கட்சிகளில் போட்டியிட்டாலும் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான விடயங்கள் தலைதூக்கும்போது அதனை எதிர்த்து நிற்பதற்கான பலத்தை தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து எடுப்பார்களாயின் அதுவே எமக்குக் கிடைக்கும் வெற்றியாகும். மாறாக அற்ப சலுகைகளுக்கும் வாகன வரிச் சலுகைகளுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  விலைபோவார்களாயின் இவ்வாறானவர்கள் தேர்தலில் போட்டியிடாது முன்கூட்டியே ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் மிகச் சிறந்த கைமாறாக அமையும்.

அதேபோன்றுதான் சமகால அரசியலில் முனைப்புடன் செயற்படும் முற்போக்கு அரசியல் சக்திகளுக்கும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் இந்த மாகாண சபைத் தேர்தல் மூலம் களம் அமைத்துக் கொடுக்க வேண்டியது சிரேஷ்ட அரசியல்வாதிகளினதும் பொது மக்களினதும் கடப்பாடாகும். அதன் மூலம் சீர்கெட்டுப் போயுள்ள அரசியலில் புதியதொரு மாற்றத்தையேனும் எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

ஆக, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மிகவும் திட்டமிட்ட வகையில் சிறுபான்மைக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டும். மூன்று தசாப்தகால இனப்பிரச்சினைக்கு  நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான வலுவான அழுத்தத்தை வழங்குவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை சிறுபான்மைக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவார்களா? அல்லது வழமைபோன்று விலைபோய்விடுவார்களா என்பதற்கு காலம் விரைவில் பதில் சொல்லத்தான் போகிறது.

No comments

Powered by Blogger.