மன்னாரில் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் நீர்ப்பாசன திட்டங்கள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் மாவட்டத்தின் விவசாயத் துறையினை மேம்படுத்த பல்லாயிரம் மில்லியன்கள் ரூபா செலவில் நீர்ப்பாசன திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றன.வடமத்திய மாகாணத்தின் தந்திரி மலை ஊடாக வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை நீர்த்தேக்கம்,அகத்திமுறிப்பு குளம்,மற்றும் வியாடிக் குளம் என்பன அதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான நீரை பெறும் வாய்ப்பை பெறுகின்றன.
இத்திட்டத்தினை நடை முறைப்படுத்த 9 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதுடன்,அதன் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக நீர்பாசன,நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளில் நேற்று விஜயம் செய்த அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டார்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் சுமார் 35ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,இந்த நீர்;ப்பாசன திட்டப் பணிகள் முடிவுறும் போது 55 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் அங்கு நம்பிக்கை வெளியிட்டார்.
அதே வேளை விலச்சி குளத்திலிருந்து கடலுக்கு செல்லும் நீரை தடுத்து அவற்றை விவசாய நடவடிக்கைகளுக்காக திசை திருப்பும் திட்டத்தை நடை முறைப்படுத்துவது குறித்தும் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment