Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களை வேறருக்கும் திட்டம் (பகுதி -2)



இப்னு அய்யூப்

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் பல்வேறு கருத்தாட்டல்கள் எமக்கிடையே நடக்கின்றன, பல சந்தர்ப்பங்களில் நாம் என்ன பேசுகின்றோம் என்பது எமக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது, இந்த நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றத்தை எவ்வாறு நாம் அணுக வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கலாநிதியிடம் வினவினேன், ஒரு நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவர் குறிப்பிட்டார் “மீள்குடியேற்றத்தை பிரச்சினைகளின் தொகுப்பாக நோக்குவோம் “a Complex of Problem” என்றார். அவருடைய அந்த வழிகாட்டலுடன் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றம் எத்தகைய பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றது, அது எதிர்நோக்கும் சவால்கள் எத்தகையது என நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

மீளக்குடியேறுவோர் குறித்த தகவல்கள் போதியளவு இன்மை

சுமார் 6,000 குடும்பங்களைக் கொண்டதாக இருக்கும் இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் எத்தனை குடும்பங்கள் எந்தெந்தக் காலத்தில் மீள்குடியேறும் விருப்பத்துடன் இருக்கின்றார்கள் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை, அதாவது உடனடி மீள்குடியேற்றத்துக்குத் தயாரானவர்களின் எண்ணிக்கை யாது, அடுத்தடுத்த கட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு தயாராகுவோரின் எண்ணிக்கைகள் யாது. என்பன போன்ற தரவுகள் இன்னமும் சரிவர அடையாளப்படுத்தப்படவில்லை.

சுமார் 2,100 குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து யாழ் பிரதேச செயலகங்களில் பதிவுகளை நடாத்தியுள்ளனர்.  இந்தக்குடும்பங்களில் எத்தனை பேருக்கு காணிகள் இருக்கின்றன, இன்னும் எத்தனை குடும்பங்களுக்கு காணிகள் தேவைப்படுகின்றன, இத்தகைய குடும்பங்களில் தொழில் முயற்சிகள் யாவை, எவ்வாறு தொழிகளை இதுவரை அவர்கள் மேற்கொள்கின்றார்கள்,  இக்குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை யாது, பென்கள் எத்தனைபேர், திருமணமானவர்கள், விதவைகள், வயோதிபர்கள், வலது குறைந்தோர் என்பன போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படாது இருக்கின்றது. இதன் காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற நலத்திட்டங்களை அடையாளம் காணுவதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள போதிய தரவுகள் இன்மை என்னும் விடயம் எமது மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் முதன்மையாக இருக்கும் பிரச்சினையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அடுத்து  யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவதானிக்கப்படும் பிரச்சினைகளை பினவருமாறு தொகுத்து நோக்க முடியும்.

1. மீளத்திரும்புதலில் நிலவும் பிரச்சினைகள்

2. மீள் கட்டுமானத்தில் காணப்படும் பிரச்சினைகள்

மீளத்திரும்புதலில் உள்ள பிரச்சினைகள் என்னும்போது எமது சமூகம் இரட்டைத் தளங்களில் வாழும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்த குடியிருப்புகள் இல்லாத காரணத்தினால், புத்தளம், நீர்கொழும்பு போன்ற இடம்பெயர்ந்த பிரதேசங்களிலும், யாழ்ப்பாண தாயக மண்ணிலும் அவர்கள் மாறி மாறி வாழும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். எனவே அரச பதிவு நடைமுறைகளில் ஏராளமான பிரச்சினைகள் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். கிராம அலுவலர் ஒருவரின் கையொப்பம் அல்லது சான்றிதழ் தேவைப்படும் போது அதனை அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்வதா அல்லது தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களில் பெற்றுக்கொள்வதா என்ற நடைமுறைப் பிரச்சினைகள் ஏராளம் ஏற்படுகின்றன, அதுபோன்று வாக்காளர் பதிவுகளை எங்கே பேணிக்கொள்வது யாழ்ப்பாணத்திலா அல்லது தற்போது அவர்கள் வாழும் பிரதேசங்களிலா என சிக்கல்கள் தோன்றுகின்றன. இதன் காரணமாக அரச நடைமுறைகளில் பாரிய சிக்கல்களை அவ்வப்போது அவர்கள் எதிர்கொள்கின்றார்கள், இதனை ஒரு சில அரச அதிகாரிகள் தமக்குச்சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம்களை ஓரக்கண்கொண்டு பார்க்கவும், பாரபட்சமாக நடாத்தவும் முயலுவதை நாம் அன்மைக்காலங்களில் நிதர்சனமாகக் கண்டோம்.

அதுமாத்திரமன்றி உதவித்திட்டங்களில் முஸ்லிம்களை இணைத்துக் கொள்வதிலும், கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் முஸ்லிம்களை இணைத்துக் கொள்வதிலும் ஏராளமான பிரச்சினைகள் நிலவுவதையும் நாம் காண்கின்றோம். குறிப்பாக வீட்டுத்திட்டங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புரக்கணிக்கப்படுவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட பதிவு நடைமுறைகளில் காணப்படும் பிரச்சினைகளே முதன்மைக்காரணிகளாக இருக்கின்றன இதன் காரணமாக பின்வரும் விளைவுகளை நாம் எதிர்கொள்கின்றோம்.

* பிரஜைகளுக்கான பதிவுகளில் எமது விபரங்கள் இணைத்துக் கொள்ளப்படாத அபாயம்

* வாக்காளர் பதிவுகளில் எமது விபரங்கள் இணைத்துக் கொள்ளப்படாத அபாயம்

* உதவித் திட்டங்களில் விபரங்கள் இணைத்துக் கொள்ளப்படாத அபாயம்

எனவே மீளத்திரும்புதலில் நிலவும் பிரச்சினைகள் மீள்குடியேற்றத்தில் அதிக தாக்கம் விளைவிக்கும் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

மீள்கட்டுமானத்தில் நிலவும் பிரச்சினைகள்

மீள் கட்டுமானம் என்னும்போது நாம் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் முஸ்லிம்களை மீளவும் குடியேற்றி அவர்களுக்குத்தேவையான வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஒரு சீரான சமூக அமைப்பை நிறுவுதலுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பகுதியினைக் குறிப்பிடுகின்றோம். இவ்வாறான ஒரு பாரிய வேலைத்திட்டதில் நாம் ஏராளமான பிரச்சினைகளை அடையாளப்படுத்துகின்றோம் அவற்றை சுருக்கமாக நோக்கின்,

காணியில்லாத பிரச்சினை: சுமார் 3000 குடும்பங்கள் காணியற்றோராக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர், இவர்களுக்கு முஸ்லிம் வட்டாரத்தை அண்மித்த பகுதிகளில் காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

வீடில்லாப் பிரச்சினை: யாழ் முஸ்லிம் வட்டாரம், புதிய சோனகர் தெருப்பகுதியில் 90%ற்கும் அதிகமான வீடுகள் சிதைவடைந்தே காணப்பட்டன அவற்றும் சுமார் 15%மான வீடுகள் மாற்றும் மதத்தவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன, தற்போது 30%மான  வீடுகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதர வீடுகளும் திருத்தியமைக்கப்படவேண்டிய தேவையுடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரப் பிரச்சினை; யாழ் முஸ்லிம் வட்டாரத்தைப் பொறுத்தமட்டில் தற்போது தொழில்வாய்ப்புகள் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளன, வெளியேற்றத்துக்கு முன்னர் எமது சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்ட தொழில் முயற்சிகளில் தற்போது முஸ்லிம்கள் ஈடுபாடு காட்டுகின்ற தன்மை குறைவடைந்துள்ளது. பழைய இரும்பு சேகரிப்பு, ஆடு மாடு விறபனை போன்ற துறைகளில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள் இவை நிரந்தரத்தன்மை அற்ற தொழில்கள் என்பதோடு அரச சட்டங்கள் கடுமையாக அமுலாகும் பகுதிகளாகும் எனவே இவற்றை ஒழுங்குபடுத்துவதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன, 1990களுக்கு முன்னர் யாழ் நகர்ப்பகுதிகளில் எம்மவர்களுக்கு உரித்தாக இருந்த ஏராளமான வியாபார ஸ்தலங்கள் தற்போது எம்மவர்களின் வசம் இல்லாமையும் முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

உட்கட்டமைப்பு வசிதிகள் இன்மை

கல்வி சார்ந்த பிரச்சினைகள்

போன்ற பிரச்சினைகளை நாம் இங்கே மீள்கட்டுமானம் சார்ந்த பிரச்சினையாக அடையாளப்படுத்துகின்றோம். இத்தகைய பிரச்சினைகளை எமது சமூகமும் சமூகச் செயற்பாட்டாளர்களும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் எமது வினைத்திறன் மிகுந்த மீள்குடியேற்ற செயற்பாடாக அமையப்போகின்றது.

இன்றைய திகதியில் மீள்குடியேற்றம் குறித்து பேசுகின்ற அவற்றில் முயற்சிகளை மேற்கொள்கின்ற அமைப்புகள் நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன்வைக்கின்றார்கள் என்ற கேள்வியும் எம்மிடம் எழுகின்றன. எம்மவர்கள் இன்னமும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் மனோ பாவத்துடனும், தூரநோக்கில்லாமல் செயற்படும் தன்மை கொண்டவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவிகளை மேற்கொள்கின்றார்கள், ஆனால் அவை நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளுள் ஏதாவது ஒன்றை அல்லது பலதை நிவர்த்திக்கும் விதத்தில் அமைகின்றதா என்ற வினாவை எழுப்பிக்கொள்தல் அவசியப்படுகின்றது, அதுமாத்திரமல்ல யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அமைப்புகளும் இதே கேள்விகளை எழுப்பிக்கொள்தல் அவசியமாகின்றது.

இத்தகைய பிரச்சினைகளை நாம் எவ்வாறு அணுக வேண்டும் அதற்கான செயற்திட்டங்கள் என்ன என்பன போன்ற விடயங்களை எமது அடுத்த பகுதியில் வாசகர்களுக்கு தருகின்றோம்.

(மேலும் வரும்)

2 comments:

  1. கட்டுரையாளர் எங்களுக்கு ஒரு விளக்கத்தை தருவது பொறுத்தம் என நினைக்கின்றேன், இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
    முஸ்லிம் தனவந்தர்கள் இணைந்து 50ற்கும் அதிகமான வீடுகளைத் திருத்தியமைத்துக் கொடுத்துள்ளார்கள், இதனால் 50ற்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன, அதேபோல மௌலவி சுபியானும் பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாக நாம் ஊடகங்களில் அறிந்தோம், இத்தகைய முயற்சிகளினால் நீங்கள் முன்வைக்கும் பிரச்சினைகளில் ஒரு சில அளவேனும் குறைந்திருக்கும்தானே உங்களது ஆக்கத்தில் அவற்றிற்கு இடம்கொடுத்திருக்க முடியும்தானே, ஏன் அவை இடம்பிடிக்கவில்லை, தயவு செய்து விளக்கிக் கூறவும்.
    நன்றி
    இவ்வண்ணம்
    றஹீம்- கிருலப்பனை

    ReplyDelete
  2. கட்டுரை தொடரும் என்று இருப்பதனால் முடிவு வரை இன்ஷா அல்லாஹ் பொறுத்திருப்போமே .
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.