Header Ads



2011 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு அநீதி நிகழாது - அமைச்சர் எஸ்.பி.

2011 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்படாத வகையில் இசட் புள்ளி ஊடாக அவர்களின் பல்கலைக்கழகத் தெரிவு இடம்பெறும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற் றிய மாணவர்கள் மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய மாணவர்கள் என இரண்டு பிரிவினர் உள்ளனர்.

இசட் புள்ளி ஊடாக அவர்களைப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யும்போது எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு இடம்பெறும் என்றார். கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இசட் புள்ளியின் ஊடாக அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யும் போது, எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு இடம்பெறும்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் தோற்றிய இரண்டு வகையான இசட் புள்ளி காணப்படுவதால் எந்த முறையில் மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்வது என்பது பற்றி ஆராய உயர்கல்வி அமைச்சு குழுவொன்றை நியமித்திருந்தது.  இந்த நிலையில் இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுயாதீனக் குழு முன்வைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும். எந்த அடிப்படையில் மாணவர்களின் தெரிவு இடம்பெற்றாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்வோம். பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதியுடைய எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றார்.

அழகியற்கலை கல்லூரிகளுக்கு மாணவர்கள் தெரிவு

அழகியற்கலை கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாது எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நடனம், சங்கீதம், மற்றும் சித்திரம் ஆகிய துறைகளில் தோற்றி அழகியற்கலை கல்லூரிகளுக்குத் தகுதியாகும் மாணவர்கள் மீண்டும் செயன்முறை பரீட்சைகளுக்கு உட்படுத்தப் படுவது இனிவரும் காலங்களில் அவசியமற்றது. எனவே, செயன்முறைப் பரீட்சைகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அழகியற்கல்லூரிகளுக்குத் தகுதிபெற்றபோதும் பலமுறை நடத்தப்படும் செயன்முறைப் பரீட்சைகளில் வெற்றிபெறாத பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதில்லை. மாணவர்களுக்கு ஏற்படும் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே செயன்முறைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது சித்திரம், நடனம், மற்றும் சங்கீதம் தொடர்பாக நடத்தப்படும் செயன்முறைப் பரீட்சைகளின் மட்டத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறைப் பரீட்சைகளின்போது அழகியற்கலை கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை மதிப்பீட்டாளர்களாகக் கலந்துகொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.