சுனாமி அச்சம் நீடிப்பு - பள்ளிவாசல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்து தஞ்சம்
சுனாமி எச்சரிக்கை நாட்டில் ரத்துச் செய்யப்பட்டுள்ள போதிலும் கடற்கரையோரங்களில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தொடர்ந்தும் பள்ளிவாசல்களிலும், மேட்டுப் பகுதிகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருப்பதாக அறியவருகிறது.
வீடுகளை விட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டதையடுத்து ஆட்களில்லாத வீடுகளில் திருடர்கள் புகுந்து தமது கைவரிசையைக் காட்டலாம் என்பதால் சகல பிரதேசங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு, ரோந்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளியேறிய மக்கள் உடனடியாக சொந்த இடங்களுக்குத் திரும்பும் வாய்ப்பு இல்லாததால் இரவு முழுவதும் சகல பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினர் ரோந்து சேவையிலீடுபட்ட வண்ணமிருந்தனர்.
பள்ளிவாசல்களில் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனிநபர்களும், அமைப்புக்களும் உதவியளித்து வருகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்கள் வெறிச்சாடி காணப்படுவதுடன், சுனாமி அச்சம் மக்களிடையே தொடர்ந்து நீடிப்பதாலும் அவர்கள் தமது கடற்கரையோர பிரதேச வீடுகளுக்குச்செல்ல அச்சப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment