Header Ads



சிரியாவில் துப்பாக்கி + பீரங்கி சத்தங்கள் ஓய்ந்தது

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களை அரசு இராணுவத்தின் மூலம் ஒடுக்கி வந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 9,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா அறிவித்துள்ளது. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தீவிர முயற்சி மேற்கொண்டு, கோபி அனானை சமாதான தூதுவராக நியமித்தது.

இவர் சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிரியா நேற்று காலை 6 மணி முதல் இதனை அமுலுக்கு கொண்டு வந்தது. ஹோம்ஸ், ஹமா, இட்லிப் ஆகிய நகரங்களில் குவிக்கப்பட்டிருந்த இராணுவம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எனவே அங்கு தினசரி ஒலித்து கொண்டிருந்த துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் போராட்டக்காரர்கள் கையெழுத்திடவில்லை. எனவே அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைய வேண்டும் என சிரியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து கலவரம் நடந்ததால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் 25 ஆயிரம் பேரும், ஜோர்டானில் 8 ஆயிரம் பேரும், லெபனானில் 16 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர உள்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களும் பயமின்றி தங்கள் வீடுகளில் தங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.