Header Ads



இலங்கை - இந்திய அரசியல் இராஜதந்திர அதிர்வுகள்


(15-04-2012 இன்றைய தினம் ஞாயிஞ தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ள அரசியல் கட்டுரையொன்றை இங்கு மீள்பதிவிடுகிறோம்)

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.

     மற்றுமொரு சுனாமி அழிவிலிருந்து இலங்கையும், உலகமும் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடர் அரசியல் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதை நோக்க முடிகிறது.

         ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்ததையடுத்து இந்த இரு நாடுகளுக்கிடையிலுமான அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்று சொன்னாலும் உண்மையில் இலங்கை தனது உள்நாட்டு யுத்தத்தில் எப்போது வெற்றியீட்டியதோ அன்றிலிருந்து இவ்விரு நாடுகளுக்கிடையிலுமான அரசியல் அதிர்வுக்கு அடித்தளமிடப்பட்டது எனலாம்.

           விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தில் தாம் வெற்றி பெற்றதற்கு இந்தியா, ஒருபோதுமே உரிமை கோரக்கூடாது என்பதில் உறுதியாக நின்ற இலங்கை தனது உறுதியில் இன்றுவரை வெற்றியும் பெற்றுவருகிறது.

             இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதில் தாங்களும் பஙகளிப்புச் செய்தோம் என்பதை இதுவரை உரத்துக்கூற முடியாதளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு கட்சிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு யுத்ததில் புலிகளை தோற்கடிக்க தான் வழங்கிய வகிபாகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முடியாத நிலையிலேயே இந்தியா காணப்பட்டது.
 
           உள்நாட்டு யுத்ததில் வெற்றி பெற்ற மமதையில் மூழ்கியிருந்த இலங்கை, புதிய நண்பர்களையும் தேடத் தொடங்கியது.
 
          மற்றொரு புறம் இந்திய - இலங்கை உறவில் விரிசல் ஏற்படுவதை ஆவலோடு எதிர்பார்த்து நின்ற சீனா, உள்நாட்டு யுத்ததின் பின்னர் இலங்கைக்கு வாரி வழங்கும் வள்ளலாக தன்னை மாற்றியமைத்துக்கொண்டது.
       
            இலங்கையுடனான சீனாவின் இந்த தாராளமும் இந்தியாவை சினங்கொள்ளச் செய்திருந்த நிலையிலேயே ஜெனீவாவில் இந்தியா, இலங்கைக்கு பாடம் கறபித்தது.

            இலங்கைக்கு ஜெனீவாவில் இந்தியா கறபித்த பாடமானது இருநாடுகளுக்குமிடையே தொடர்ந்தும் அரசியல் அதிர்வலைகளை தொடரச் செய்வதில் செல்வாக்குச் செலுத்தியது.

கூடங்குள அணுநிலைய அச்சுறுத்தல்

            குறிப்பாக இதில் தென்னிந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையம் தொடர்பான விவகாரம் மாறியுள்ளது.
 
                இலங்கையில் எந்தவொரு அணுமின் ஆலைகளும் நிறுவப்படவில்லை. இந்தியாவிலிருந்து 20 கிலோமீற்றர் கிட்டிய தூரத்திலேயே இலங்கை உள்ளது. தென்னிந்தியாவில் மூன்று அணு ஆலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் வடமேற்கு கரையோரமான மன்னாரிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் தென்னிந்திய கரையோரத்தில் உள்ள கூடங்குளம் என்ற இடத்தில் அணுமின் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

              கூடங்குளம் அணுமின் ஆலை வேலைகள் யாவும் பூர்த்தியடைந்தால், உலகில் மிகப் பெரிய அணுமின் ஆலைகளில் ஒன்றாக இது காணப்படும் எனவும் இதிலிருந்து 4.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் கூறப்படுகின்றது. இவ் அணு ஆலையின் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டால் இதன் பாதிப்பு மிகச் சிறிய இலங்கை தீவை பாதிக்கச் செய்யும்.

               இவ்வாறான அணு ஆலைகளால் ஏற்படும் அழிவை, ஆபத்தை எதிர்நோக்கத் தக்கவகையில் இலங்கை அணுசக்தி அதிகாரசபை போதியளவு முன் ஆயத்த நடவடிக்கையைக் கொண்டிருக்கவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.

            இதுதொடர்பில் சிங்கள கடும்போக்காளராக வர்ணிக்கப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கள் பிரதானம் பெறுகின்றன. எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள அனைத்துலக அணுசக்தி அமைப்பின் கூட்டத்தொடரில் தென்னிந்திய கரையோரத்தில் நிறுவப்படும் அணுமின் ஆலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கவுள்ளதாக எரிபொருள், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

             தென்னிந்தியாவில் நிறுவப்படும் அணுமின் ஆலைகள் இலங்கைக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் என நடந்து முடிந்த சர்வதேச  அணுசக்தி அமைப்பின் கூட்டத்தொடரில் எடுத்துக் கூறப்பட்டதாகவும், இவ்வாறு அழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் தலையீடு செய்யுமாறு இவ்அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

             இந்த விடயத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உடன்படிக்கை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச அணுசக்தி அமைப்பு பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பில் வெளியுறவு அமைச்சின் ஊடாக நாங்கள் திட்ட வரைபொன்றை அனுப்பியிருந்தோம். இதற்கு இந்தியத் தரப்பு குறிப்பு வடிவில் பதில் அனுப்பியிருந்தது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

           தென்னிந்தியாவில் நிறுவப்படும் அணுமின் ஆலைகளால் ஏற்படவல்ல அணு அழிவுகளை தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தபோதிலும், இது தொடர்பாக இந்திய அரசாங்கம் பரந்தளவிலான விடயங்களை கலந்துரையாடுவதற்கான திட்ட வரைபொன்றை அனுப்பியிருந்தது என  அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

         இலங்கை - இந்தியா நாடுகளுக்கிடையிரான இந்த விவகாரம் இவ்வாறு சூடு பிடித்துள்ளமையும் இதுதொடர்பில் இலங்கை சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளமையும் இருநாடுகளுக்குமிடையே ஆரம்பித்துள்ள இராஜதந்திர புகைச்சல் எனலாம்.

இலங்கையை கண்காணிக்கும் இந்தியா

        ஆதேவேளை அண்மையில் வெளியாகியுள்ள மற்றுமொரு தகவலும் இலங்கை குறித்து இந்தியா எத்தகைய சந்தேகத்தைக் கொண்டுள்ளது என்பதை தெளிவாக்குகிறது.
 
         இலங்கையுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா, இலங்கைக்கு மிக நெருக்கமாக நிறுவியுள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐஎன்எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது.

         இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார். INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும். இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

      விரைவில் மேலும் இரண்டு உளவு விமானங்கள் இந்த அணியில் சேர்க்கப்படவுள்ளன. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டவை என்பதுடன், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆளில்லா உளவு விமானங்களை விடத் துல்லியமான படங்களையும், தகவல்களையும் வழங்கக் கூடியவையாகும்
.
         இலங்கையில்  அதிகரித்து வரும் சீனத் தலையீடுகளை அடுத்து பிராந்திய ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையிலேயே, இலங்கைக்கு மிகநெருக்கமாக இந்தியா இந்த உளவு விமான அணியை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 
         அதேநேரம் இலங்கைக்கு வரவிருந்த இந்தியாவின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் வருகை பற்றியும் எதிர்மரையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

            இலங்கைக்கு வரவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலக்கி கொண்டுள்ளது. இச்செயற்பாடானது புதுடெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்றும் இதனால் இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.

           இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

          குழுவில் யார் யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியிடப்படாவிட்டாலும்இ கடந்தவாரமே சில பெயர்கள் கசிந்தன.  மீள் குடியேற்றத்திற்காக இந்தியா வழங்கிய 500 கோடி ரூபா பற்றியும் அதன் செலவு குறித்தும் ஆராய்வதே இந்தக் குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.  

           அத்துடன் ஜனாதிபதி ராஜபக்சவுடன் விருந்துண்பதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கைக்கு அனுப்ப முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   இந்தக் குழுவில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னார்ட் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

          ஆனால்,  தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கை செல்லும் குழுவில் அதிமுக உறுப்பினர் இடம்பெறமாட்டார் என்று அறிவித்துள்ளார்.  இலங்கை பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது.

           இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ராஜபக்சவுடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பயணம் ஏதோ ஒரு சுற்றுலா பயணமாகவே அமையும். எனவே இந்தப் பயணத்தில் அதிமுக இடம்பெறாது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை சண்டித்தனம் செய்ததாக சொல்லும் சிதம்பரம்

          இந்தியாவின் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை வருவதில் இவ்வாறு சிக்கல்கள் காணப்படும் நிலையில் மறுபுறம் இலங்கையின் அரசியல் கட்சி வட்டாரங்களிடையே இந்தியா குறித்து எழுந்துள்ள எதிர்மறை கருத்துக்களையும் நோக்கவேண்டியுள்ளது. ஜாதிக்க ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஜே.வி.பி. இவற்றுடன் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவக்ச ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களைகூறி வருகின்றனர்.

            அவ்வாறே இந்தியாவின் உட்துறை அமைச்சர் பா. சதம்பரம்கூட இலங்கையின் சண்டித்தனத்தை ஒடுக்குவதற்காவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

       இதனடிப்படையில் நோக்குகையில் இலங்கை சண்டித்தனம் செய்கிறது என்ற நிலைப்பாட்டையே இந்தியா கொண்டுள்ளமையையும் அறியமுடிகிறது.

      இவற்றையெல்லாம் நோக்குகையில் இலங்கை - இந்தியா நாடுகளுக்கிடையே அரசியல் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது.

     புவியியல் விதியின்படி பாரிய நிலநடுக்கத்தை அடுத்துதான் சிறியளவிலான அதிர்வுகள் ஏற்படும். ஆனால் இலங்கை - இந்தியா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வுகள் பெரிய நடுக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு..!!

No comments

Powered by Blogger.