முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்துவோம் - யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் இந்தியா உறுதி
இந்திய எதிர்க்கட்சித தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கையில் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இன்று (18-ஏப்ரல் 2012- புதன் கிழமை) மாலை யாழ்ப்பாணம் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் ஒரு விஷேட சந்திப்பொன்றினை நடாத்தினார்கள், இதன்போது யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் சகோதரர் முஹம்மத் நிலாம், மற்றும் தகவல் வழிகாட்டல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விலே குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் யாழ் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், சரவணபவன் ஆகியோரும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், வர்த்தக சமூகத்தவர்கள் என 50 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது யாழ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்வதால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடான நிலைகள், அபிவிருத்தியில் காட்டப்படும் பாரபட்சங்கள், கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலை, யாழ் இளைய தலைமுறையினரிடம் தோன்றியிருக்கும் கல்வி ஒழுக்கம் சார்ந்த வீழ்ச்சிகள் குறித்து முக்கியத்துவமளிக்கப்பட்டு கருத்துக்கள் பறிமாறப்பட்டன.
இங்கே முஸ்லிம் சமூகம் சார்ந்து கருத்து வெளியிட்ட அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் அவர்கள், தனது உரையில்,
“அனைவருக்கும் மாலை வந்தனங்கள்; இங்கே வருகை தந்திருக்கும் கௌரவ இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் எமது மண்ணுக்கு அன்போடு வரவேற்கின்றோம். இவ்விடத்திலே யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் அதற்கு முதலில் நாம் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
இலங்கை மண்ணில் யுத்தம் நிறைவடைந்திருக்கின்றது, ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் இன்னமும் முழுமையான அமைதியை எட்டிக்கொள்ளவில்லை. இங்கே கருத்துக்களை முன்வைத்த எமது சகோதர சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறிய விடயங்களில் உண்மை இருக்கின்றது. அவை எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அவ்வாறு அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை நாமும் உணர்கின்றோம். அவை விரைவாகத் தீர்க்கப்படவேண்டும் என்பது எமது விருப்பமாகும்.
யாழ் மண்ணிலே 1990 வரை மக்கள் ஒன்றித்து வாழ்ந்தார்கள், 1990களில் புலிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொண்ட பலவந்த வெளியேற்றம் இந்த குடாநாட்டு மக்களின் ஐக்கியத்தையும் சகவாழ்வையும் வேட்டு வைத்துவிட்டது. இதனால் முஸ்லிம்களின் மீது மிகவும் துன்பகரமான ஒரு வாழ்வு கடந்த 20 வருடங்களாக திணிக்கப்பட்டிருந்தது. இப்போது யுத்தமற்ற சூழலில் இந்த மண்ணின் மக்களாகிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் குடியேறத் தொடங்கியிருக்கின்றார்கள். அவர்களை தமிழ் சமூகம் வரவேற்க வேண்டும் அதுவே 1990களில் நடைபெற்ற துன்பியல் நிகழ்விற்கான பரிகாரமாக இருக்க முடியும். இந்திய அரசாங்கமும் முஸ்லிம்களின் நிலையை உணர்ந்து அவர்களது மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்கும் என நாம் நம்புகின்றோம், எமது விரிவான கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை கௌரவ இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கின்றோம்” எனக்கூறி மஹஜர்களை கையளித்தார்.
இதற்கு குறித்த நிகழ்விற்கு தலைமை தாங்கிய தலைவி சுஸ்மா சுவராஜ் அவர்கள் “ முஸ்லிம்கள் குறித்த விடயத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் மஹஜரில் குறிப்பிட்டப்பட்டுள்ள விடயங்களை வாசித்தறிந்து எமது குழுவின் இறுதி அறிக்கையில் அவற்றை இடம்பெறச்செய்வதகாவும்” குறிப்பிட்டார்.
அத்தோடு இதற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருக்கு தான் எழுதியுள்ள கடிதத்தில் முஸ்லிம்களுக்கும் இந்திய வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக மீளக்குடியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு முன்வைக்கப்பட்டமை ஒரு முக்கிய அடைவாகக் கருதப்படுகின்றது.

Post a Comment