தர்மத்தை தகர்த்தெறியும் பிக்கு மாணவர்கள் - பௌத்த பல்கலைக்கழகங்களை மூடிவிடுவதே சிறந்தது என்கிறார் உயர்கல்வி அமைச்சர்
பல்கலைக்கழகம் செல்லும் பிக்கு மாணவர்கள் நாட்டுக்கும் தாம் பிறந்த கிராமத்திற்கும் ஏதாவது நன்மைகளை செய்வார்களென்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாகவே அவர்கள் செயற்படுகின்றனர். எனவே "பாலிபௌத்த' பல்கலைக்கழகங்களை மூடிவிடுவதே சிறந்ததாகும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பட்டதாரிகள், தொழிற்துறைசார் பயிற்சியுடன் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எமது இலக்காகுமென்றும் அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு "சிமா' நிறுவனத்தோடு இணைந்து தொழில்சார் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் உயர்கல்வி அமைச்சுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு சினமன் லேக் சைட்' ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிராமத்து விகாரைகளின் பிரதம பிக்குமாரும், மக்களும் தமது பணத்தை செலவழித்து பட்டப்படிப்புக்காக பிக்கு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதே இதன் நோக்கமாகும். ஆனால் பிக்கு மாணவர்கள் இந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து தர்மத்தை தகர்த்தெறிந்து பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறும் போது காவி உடையை கழற்றி எறிந்து வெளியேற முயற்சி செய்கின்றனர்.
எனவே பாலி பௌத்த பல்கலைக்கழகங்களை மாசுபடுத்துவதை அங்கீகரிக்க முடியாது. எனவே பாலி பௌத்த பல்கலைக்கழகங்களை மூடி விடுவதே சிறப்பானதாகும். எமது பல்கலைக்கழகங்களில் இன்னமும் சம்பிரதாயபூர்வமான பாடநெறிகளே முன்னெடுக்கப்படுகின்றன.
இங்கிருந்து வெளியேறும் மாணவர்களின் பெரும்பாலõனோர் தொழில் இன்றி ஆர்ப்பாட்டக்காரர்களாக மாறுகின்றனர். ஒரு சில அரசியல் கட்சிகள் தமது சுயநலத்திற்காக இவ்வாறான மாணவர்களை பயன்படுத்துகின்றது. எனவே பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பெறும் மாணவர்கள் அதனோடு தொழிற்துறை சார் கல்வியையும் வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சு திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்கு சிமா நிறுவனம் உதவி வழங்க முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழிற்சார் கற்கைநெறியை கற்பதற்காக நிதியை பெற்றுக்கொள்வதற்காக வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளும் விதத்தில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

Post a Comment