Header Ads



சதிமுயற்சி செய்யமாட்டோம் - பாகிஸ்தான் இராணுவ தளபதி கூறுகிறார்


பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப்போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறி அவற்றை பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்ஃபாக் கயானி நிராகரித்திருக்கிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி ஒரு தினம் முன்னதாக எச்சரித்திருந்தார்.

இப்படியாகக் கூறுவது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று தற்போது ஜெனரல் கயானி தனது பதிலில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இராணுவம் தொடர்ந்தும் ஜனநாயகத்துக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும், இராணுவ புரட்சி குறித்த செய்திகள் வெறுமனே தவறான எதிர்வு கூறல் என்றும், ஜெனரல் கயானியை ஆதாரம் காட்டி பாகிஸ்தானிய இராணுவ அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

பிரதமர் யூசுப் ரசா கிலானியால் முன்னெப்போது இல்லாத வகையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இராணுவத் தளபதியின் முதலாவது பதில் கருத்து இதுவாகும்.

பல தசாப்தங்களாக சிவியியன் தலைவரை வெறுமனே முன்நிறுத்திவிட்டு இராணுவம் திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்துவதாக பல காலமாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதிலாக அரசாங்கத்தை பதவியில் இருந்து தூக்கி வீசுவதற்கான திட்டம் எதுவும் இராணுவத்திடம் கிடையாது என்றும், அரசாங்கத்துக்குள்ளேயே அதனை அதிகாரம் செய்யும் இன்னுமொரு அரசாக இராணுவம் இருக்காது என்றும் கயானி கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய இராணுவத்தை பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தானிய அரசாங்கம் கோரியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான இந்தச் சர்ச்சை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு இராணுவத்தை ஆத்திரத்துக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அதிபர் சர்தாரியின் நிலையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

No comments

Powered by Blogger.