முஸ்லிம்கள் தப்பிக்க வழியென்ன?

மூதூர் முகம்மதலி ஜின்னா
நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள். கொடிய யுத்தம் முடிந்தது. நாம் நம் நாட்டே நேசிக்க வேண்டும். எல்லோரும் மீல்குடியேறி வாழ வேண் டும். நீங்கள் என்னே நம்பலாம். நான் உங்களே நம்புகிறேன். ஊங்களை பாதுகாப்பது எனது கடெமெய்
நாள் தோறும் ஊடகங்களில் ஒலிபரப்பாகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் தரும் உற்சாகத்தால் கடந்த முப்பது வருடங்களில் புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் தம் பூர்வீக பிரதேசங்களில் மீள்குடியேறி வாழ ஆயத்தமாகிவருகின்றனர்.
காணிகளை இனங்கண்டு எல்லையிடல், துப்பரவு செய்தல, ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், மீள் குடியேற்றத்திற்கான உதவிகளைப்பெறல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடும் புலியில்லை. ஒரு பலியில்லை. படுகொலையும் கொள்ளையும் இனி இல்லை. என்ற உற்சாகத்தோடு மீள் குடியேறப்போகும் முஸ்லிம்களுக்கு முதலில் ஏமாற்றமே காத்திருக்கிறது. புலியில்லை என நம்பிப்போன முஸ்லிம்கள் புலியின் மற்றுமோர் வடிவை அதிகார வடிவில் எதிர் கொள்கின்றனர். இச்சூழ்நிலையானது கிழக்கின் உதயம் வடக்கின் வசந்தம் என்ற ஜனாதிபதியின் அறைகூவலையும், ஆணையையும் கொச்சைப்படுத்திவருகிறது.
கள்ளியங்காட்டு இதிகாசம்
தனித்தமிழர் தாயகம் என்ற சுலோகத்துடன் புறப்பட்ட தமிழ் தேசியவாதமானது, சிங்களப்பேரினவாதம் எவற்றையெல்லாம் தமிழ் மக்களுக்கு செய்து விடக்கூடாது என எண்ணியதோ அவையனைத்தையும் முஸ்லிம்களுக்குச் செய்து பார்த்தது.
சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழரது விடுதலையைப் பெறும் சம காலத்தில் முஸ்லிம்களை அடிமை கொள்ளும் தம் நிகழ்ச்சி நிரலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யத் தொடங்கினர். 12.02.1985 அன்று மூதூர்-அரபாநகர் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பலியெடுக்கப்பட்ட பல முஸ்லிம் பூர்வீக கிராமங்களுள் மட்டக்களப்பு கள்ளியங்காடும் ஒன்று.
மூதூரில் ஆரம்பித்த புலிகளின் இனச்சுத்திகரிப்பு போரானது ஆக்ரோசமாக தினவெடுத்தெழுந்து புறநாநூறும் தோற்றோடும் வண்ணம் பல வீரபிரதாப களங்கண்டு நிலம் வென்று இறுதியில் விதிவலிதென மீண்டும் ஆரம்பித்த இடத்திற்;கே (4.8.2006 அன்று நல்லிரவுக்கப் பின்) கொண்டு வந்து விட்டது.
அன்றைய தினம் புலிகள் மூதூர் முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றி மற்றுமோர் பரணிக்கு அடியெடுக்க முற்பட்டவேளையில் தான் இதற்குப்பின்னும் தாமதித்தால் தன்மீது மாந்தருக்கிருக்கும் நம்பிக்கை வீணாகி விடும் என தர்மம் ஜெயிப்பதற்கு தலையெடுத்தது. எடுத்து புலியைப் பலியெடுத்தது. முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் கதை முடித்தது.
பின் கிழக்கு மீட்கப்பட்டதென இராணுவம் அறிவித்ததில் இருந்து ஜனாதிபதியின் ஆணைக்கிணங்க முஸ்லிம்கள் மீள்குடியேறப் போய்க் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியவாதம் தன் இரண்டாம் பாகத்தை அதிகார மட்டத்தில் இருந்து ஆரம்பித்துள்ளது.
இனச்சுத்திகரிப்பு வரிசையில் 1990ல் மட்டக்களப்பு மாவட்ட கள்ளியங்காட்டு முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களின் பின் எங்கெல்லாமோ தவணைமுறையில் தம் வாழ்வை கழித்துவிட்டு மீண்டும் அங்கே மீள்குடியேறப்போன போது பேரதிர்ச்சி தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கே இருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளி வாசல் இடித்தழிக்கப்பட்டு அதன் அத்திவாரத்தின் மீது பிரம்ம குமாரி ராஜயோக ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் கள்ளியங்காடு ஸாஹிராவித்தியாலயம் கள்ளியங்காடு மையவாடி ஆகியவையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வத்தனை ஆக்கிரமிப்புகளும் அங்குள்ள அதிகாரமட்டங்களுக்குத் தெரியாமல் நடந்தேறியிருக்கப் போவதில்லை. குள்ளத்தனமான உறுதி தயார்படுத்தலில்லாமல் இந்த தைரியம் வந்திருக்கப் போவதில்லை.
இந்தியாவில் முஸ்லிம்களது அடிச்சுவடு தெரியாமல் அழித்து விடுவதற்காக இந்துகளால் 463ஆண்டுகள் பழமையான பாபர் மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதற்கும் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் இடித்தழிக்கப்பட்டதற்கும் இடையில் எம்மால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. (கடவுள் ஒரு போதும் தனக்கு அடுத்தவரை தவிக்கவிட்டு விட்டு இருப்பிடம் தேடித்தருமாறு கோருவதில்லை) ஒரே ஓரு வேறுபாடு என்ன வெனில் அங்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இன்னும் ராமரைக் குடியமர்த்தவில்லை. ஆனால் இங்கு மஸ்ஜிதுல் பிர்தொஸின் அத்திவாரத்தின் மீது பிரம்ம குமாரி ராஜயோக ஆலயம் கம்பீரத் தோற்றம் தருகிறது..!

இவ்வாறு புலிகள் விட்டுச் சென்றதை தொட்டுச் செல்லும் நவபயங்கரவாதத்தை ஆட்சேபித்து முஸ்லிம்களது வரலாற்றுத் தடத்தை அழித்தொழிக்கும் செயலை முறையீடு செய்யும் முகமாக கள்ளியங்காட்டு மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் நிருவாகம் சம்பந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகளை சந்தித்த போது, இப்பள்ளிவாசலை விட்டு விடுங்கள். உங்களுக்கு வேறு பள்ளிவாசல் இருக்கிறது தானே. மட்டுமல்லாமல் வாழைச்சேனையில் ஒரு கோவில் இருந்த இடத்தில் அரசு சந்தையைக் கட்டிவிட்டது. அதற்குபதிலாக நாங்கள் உங்கள் பள்ளிவாசலை இடித்து கோவில் கட்டியிருக்கிறோம். என அகங்காரமான பதில் ;வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தமிழ்தேசியவாதம் அதிகாரமட்டத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளதை நேரில் அனுபவித்த பள்ளிவாசல் நிருவாகம் 26.02.2010 அன்று பொலிசில் முறைப்படி முறைப்பாடு செய்தது.
அரசியல் யாப்பின் 14இ(1)(உ) பிரிவு உறுதிப்படுத்தும்; இலங்கைத்திவிலுள்ளோருக்கான மதசுதந்திரத்தின் மீது பயங்கரவாதம் புரியப்பட்டுள்ளமை குறித்து கள்ளியங்காட்டு மஸ்ஜித் கோவில் நிர்மாணிப்புக்காக பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் கபளீகரம் எனத்தலைப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பாவக் கொடிச்சேனையின் பரிதாபம்
புலிகளின் இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலில் சிக்கிக் கொண்ட மற்றுமோர் முஸ்லிம் பூர்வீகம் பாவக் கொடிச்சேனை முதலான மட்டக்களப்பு முஸ்லிம் கிராமங்களாகும். மட்டக்களப்பு-உன்னிச்சை பிரதேசத்துள் அடங்கும் பாவக் கொடிசனை, இருநூறுவில், காந்தி நகர் முதலான பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 101 முஸ்லிம் குடும்பங்கள் 19985.4.23 அன்று புலிப்பயங்கரவாதிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டனர். அப்பலாத்கார வெளியேற்றத்தினால் 200 ஏக்கர் விவசாயக்காணிகள் மற்றும் சேனைப்பயிர் செய்கைக் காணிகள், மேய்ச்சல் தரைகள், குடியிருப்புபு; பிரதேசங்கள், மாடுகள, ஆடுகள், கோழிகள் என பல பெறுமதிவாய்ந்த வாழ்வாதாரங்களை விட்டு விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதனால் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளாய் தனிநாட்டுப்போராட்டதட்தின் பக்கவிளைவென அம்மக்கள் பல இன்னல்களைச் சந்தித்து வாழ்ந்து வந்தனர்.
கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேற்படி கிராமங்களுக்கு குடியேறச் சென்ற முஸ்லிம்கள் அங்கும் தமிழ் தேசியவாதத்தின் மற்றுமோர் வடிவத்தை எதிர் கொள்ள நேர்ந்தது. அதாவது மேற்படி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசம் தமிழ் சகோதரர்;களால் ஆக்கிரமிக்கப்பட்டதுடனல்லாமல் விவசாயக்காணிகளும் அவர்களால் செய்கை பண்ணப்பட்டு வந்திருக்கிறது. இப்பொழுது சென்று காணிகளைக் கோரும் போது அக்காணிகள் மரணித்த முஸ்லிம்களால்; தமிழருக்கு விற்றுவிட்டதைப்போன்ற ஆவணங்களைக் காண்பித்து காணிக்குள் கால் வைக்கவிடாமல் தடுத்து வருகின்றனர்.
எஞ்சிய காணியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த முஸ்லிம்களிடம் பாவக் கொடிச்சேனை கிராம சேவகர் காணிக்காண ஆதாரத்தைக் கோரியிருக்கிறார். உறுதியைக் காண்பித்தபோது இதற்குரிமையுடைய உங்கள் பெற்றோர் இறந்துவிட்டதால் இனிமெல் இது உங்களுக்கு உரித்தாகாது (அப்படியெனில் முஸ்லிம் ஒருவர் மரணமானால் அவரது சொத்துக்கு ஆக்கிரமித்தவர் வாரிசாகிறார்!!??) எனக்கூறியுள்ளார். அதே நேரம் இப்படியொரு சட்டம் இலங்கையில் இருப்பதை நாங்கள் இதுவரை அறியவில்லை.
இச்சட்டம் இலங்கையில் எப்போது அமுலுக்கு வந்தது. இச்சட்டம் பற்றி எப்படி யாரிடம் தெரிந்து கொண்டீர்கள் என வினவ மட்டக்களப்பு அரச அதிபரே இவ்வாறு கூறினார். என கிராம உத்தியோகத்தர் கூறியுள்ளார். மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அக்காணிக்குள் முஸ்லிம்கள் தங்கியிருக்கும் பட்சத்தில் ஏதும் ஆபத்து நேருமெனில் அதற்கு தாம் பொறுப்பல்ல என அச்சத்தை ஏற்படுத்தியும் வருகின்றார்.
மேற்படி முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து வவுணதீவு பிரதேச செயலாளரை அம்மக்கள் சந்திக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலிதமாகாததாலும், ஜனாதிபதியின் ஆணை கொச்சைப்படுத்தப்படுவதாலும் இவ்விவகாரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என். கே. றமழான் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு 29.04.2011 அன்று முறையீட்டுக்கடிதம் ஒன்றை அனுப்பி நீதிக்காக காத்திருக்கிறார்.
உதயனின் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் அபகரிப்பு, பின் போத்துக்கேயரினால் துரத்தியடிப்பு, (யாழ்ப்பாண வைபவமாலை) அதன் நீட்சியாக 1990 கறுப்பு ஒக்டோபரின்போது வடமாகாண முஸ்லிம்கள் தம் பூர்வீகப்பூமியில் இருந்து சொத்தக்கள் அனைத்தும் சூறையாடப்பட்ட நிலையில் புலிகளால் பலாத்காரமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டதால் கடந்த இருதசாப்தங்களாக அகதிகளாக நாடெங்கும் சொல்லொன்னா துயரங்களை தாண்டி தற்போது தம் வடக்குத் தாயகத்தில் மீள் குடியேறத் தொடங்கியுள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே வடக்கிலும் தமிழ் தேசியவாதத்தின் மற்றுமொரு வடிவத்தை முஸ்லிம்கள் எதிர் கொள்ள நேர்ந்துள்ளது. அது ஊடக வடிவிலும் உருவெடுத்துள்ளது. வெளியேற்றும் போது சொத்துக்கள் சூறையாடப்பட்ட நிலையில் துரத்தப்பட்டவர்கள், அடிப்படைத்தேவைக்கே இருதசாப்தங்களாக அல்லல்பட்டதுமல்லாமல் பல்வேறு கெடுபிடிக்குள் மீள் குடியேறத்தொடங்கி, தம் வயிற்றுப்பிழைப்புக்காக சிறுசிறு தொழில்களை மேற் கொள்ளத் தொடங்கியதும், வடமாகாண வளங்களின் மீது உதயன் பத்திரிகைக்கு பாசம் பீறிட்டுவிட்டது.
ஆதாவது, வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறிகொடுத்த வடக்கு முஸ்லிம்கள் தற்போது அங்கு பழைய இரும்புகள், மாடாடுகள் போன்றவற்றை வாங்கி விற்று பிழைப்பு நடாத்திவருகின்றனர்.
இதனைப் பொறுக்க முடியாத உதயன் பத்திரிகை வடமாகாணத்தின் இரும்பு வளங்கள் தந்திரமாக வெளியே எடுத்துச் செல்லப்படுகின்றன. இது பெரும் துரோகம். மேலும் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மாடாடுகள் களவு போகின்றன என்ற பாங்கில் செய்தி என்ற பெயரில் துவேசத்தை துப்புகின்றது. அதே நேரம் இதே தொழிலில் சகோதர இன மக்களும் ஈடுபடுகின்ற போதெல்லாம் வடக்கின் இரும்புத்தாது மீது உதயனுக்கு வராத பாசம் முஸ்லிம்கள் ஈடுபடும் போது வந்திருப்பது தான் விந்தை.
இவ்வூடகப்பயங்கரவாதத்தால் யாழ்ப்பாணத்தின் சுவைமிகு மாம்பழம், திராட்சைப்பழங்கள், வாழைப்பழங்கள் போன்றவற்றையும் வாங்கி விற்கும் முஸ்லிம்கள் அரண்டு போயுள்ளனர்.
செய்திகளின் பின்னணியில்
ஆக பள்ளிவாசல் உடைப்பாக இருந்தாலென்ன, துப்பாக்கி வழியில் கொலை கொள்ளை கடத்தல் கப்பமாக இருந்தாலென்ன, காணி அபகரிப்பானாலென்ன, இனச்சுத்திகரிப்பானாலென்ன,அது கோட்சூட் போட்டு அதிகாரிவடிவெடுத்தாலென்ன, பல்வேறு பெயர்களை சூடிக்கொண்ட ஆயுதக்குழுவானாலென்ன, அரசியல் கட்சியானால் என்ன புத்திஜீவித்துவமானாலென்ன, வௌ;வேறு நாமகரணங் கொண்ட ஊடகங்களானாலென்ன தமிழ் தேசியத்தின் இனவாத கோரமுகம் காலத்துக்கு காலம் வௌ;வேறு வடிவெடுத்து பலியெடுத்துக் கொண்டேயிருக்கும். இது தான் நாம் இன்னுமின்னும் ரகசியம் பேசிக் கொண்டிராமல் வெளிப்படையாக உடைத்துப்பேசியாக வேண்டிய யதார்த்தம்.
இது வரலாற்றின் தொடர் செல்நெறி. என்பதை வரலாறு நெடுகிலும் சொல்லிக் கொண்டே தான் வருகிறது.
பள்ளிவாசல் உடைத்ததன் மேல் கோவில் இன்னு மின்னும் எழும். இனத்துவ தனித்துவ அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படும். அதை தமிழ் தேசியவாதமும் செய்யும். சிங்கள தேசியவாதமும் செய்யும். இது தான் வரலாறு சொல்லிவரும் யதார்த்தம். இதைத் தடுப்பதெங்ஙணம்? என்பதற்கு முன் இந்த யதார்த்தத்தின் பின்னணி, இலக்கு என்பனவற்றை இனங்கண்டு பரிகாரந்தேட வேண்டும். தேடாதவரையில் இன அழிப்புக்கான தாக்குதல்கள் மென்மேலும் முனைப்புப் பெற்றுக் கொண்டே செல்லும். நாமும் அழிவுகள் பற்றி செய்தி சொல்லிக் கொண்டும், சீசனுக்கு சீசன் உணர்ச்சி பொங்க அமைச்சுக்கள் உருவாக்கி சுகவாழ்வு கொடுத்து எல்லாம்வல்ல அரசியல்வாதிகள்!!! ஆவேச அறிக்கைவிட்டு சாதிப்பார்கள். என்றும் சொக்கிப்போவது தான் (இப்போது போல் இனி எப்போதும்) தலையெழுத்தாக தொடரும்.
(அனுராதபுரத்தில் அடக்கத்தலம் உடைக்கப்பட்ட போது இதனையிட்டு எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. நீதியமைச்சர் என்றவகையில் நீதிகோரி வழக்குத் தொடர்வேன். இது என்மீதுள்ள பொறுப்பு. நான் செய்தாக வேண்டிய கடமை. ஆதலால் நிச்சயமாக அதைச் செய்தே தீர்வேன். என அமைச்சர் ஹக்கீம் சொன்னபடி வழக்குத்தொடர்ந்துவிட்டமை பற்றி இன்னும் செய்திகள் வெளிவரவில்லை.) எதிர் அணியில் இருந்தாலாவது எகிறிக் குதிக்கலாம். அவர்கள் தான் என்ன செய்வார்கள். அமைச்சொன்றில்லாமல் எதிர்க்கட்சியில் இருப்பதை கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது.; இப்போது எல்லாமே ஆளும் கட்சியில் அடக்கம். அடக்கித்தான் வாசிக்கவேண்டும்.
அதுவரை வேட்பாள பெருமக்களான அமைச்சர்கள் இறக்கிவைத்த சுமைகள்; எத்தனை? மாறாக அவர்களால் எம் சந்ததிக்கும் சேர்த்து ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சுமைகள் எத்தனை? வாக்காளப் பெருமக்களான நாம் சுமந்து கொண்டேயிருக்கின்ற சுமைகள் எத்தனை?
கொடிய பயங்கரவாதம் ஒழிந்து அழிவில்லா வாழ்வு ஆரம்பம் என இனி பயங்கரவாதம் இல்லையெனநம்பிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் பகிரங்கமாக பள்ளிவாசல் உடைக்கப்பட்டு அதன் அத்திவாரத்தின் மீது கோவில் எழுகிறது!
இனியிங்கே சிறுபான்மை பெரும்பான்மை கிடையாது. எல்லோரும் இந்நாட்டின் மக்கள் என்ற கோசம் நாளாந்தம் காற்றில் கலந்து, கரைந்து கொண்டிருக்கும் போதே, அநுராத புரத்தில் அடக்கத்தலம் சுவடு தெரியாமல் அழித்தொழிக்கப் படுகிறது. இன்னுமின்னும் இவை போல் எத்தனையோ தொடரலாம். ஆக மொத்தத்தில் இந்த அபாயச்சங்கொலிகள் சொல்லவருவதென்ன? இந்தச் சோகங்கள் சொல்லும் சேதிகள் சோனகர் எம் காதில் கேட்கிறதா? இது எப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது? எதில் கொண்டு போய் முடித்து வைக்கப்படப்போகிறது? இரு பேரினவாதங்களுக்கிடையில் இருந்து தப்பிக்க வழியென்ன?
சூழ்நிலைகளுக்கேற்ப அவ்வப்போது செய்து கொள்கின்ற சமரசங்களுக்கு பேரினவாதத்தின் போக்கை தணித்துவிடும் சக்தியுண்டா? இதுவரையில் செய்யப்பட்ட சமரசங்களின் ஆயுள் என்ன? அது மதிக்கப்பட்டதெங்ஙணம்? என்றெல்லாம் ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற போதே மறுபுறத்தில் இரு பேரினவாதங்களுக்கிடையில் பங்காளிச் சண்டை தனியாக நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது வடக்கில் பௌத்தர் இல்லாத இடங்களிலெல்லாம் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இது தமிழினத்தை சுவடுதெரியாமல் அழித்தவிடும் முயற்சி. இதனைத்தடுக்க எம்மக்கள் தந்த பாராளுமண்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவோம். புத்தர் ஆரம்பத்தில் ஓர் இந்து. அவர் யாழ்ப்பாணத்தில் நாகர்களது பிரச்சினையை தீர்க்க வந்த போது இந்துவாகவே இருந்தார் என யோகேஸ்வரன் எம்.பி. பாராளுமன்றில் கூற 1990 களுக்கு முன் வடக்கில் இருந்த 21000 சிங்களமக்களையும் அங்கு குடியேற்றியே தீர்வோம் என சம்பிக்க ரணவக்க கூறுகிறார். போதாததற்கு முஸ்லிம்களை சவுதிக்கும, தமிழர்களை இந்தியாவுக்கும் அள்ளி அனுப்புவோம். முதலில் தமிழரை முடித்தவிட்டு வந்து முஸ்லிமை ஒரு கை பார்க்கிறோம் என்ற சிங்கள தேசியவாதத்தின் கொக்கரிப்பு வேறு.
இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு உள்ளும், வெளியிலும் ஆதிக்கவேர் தேடும் படலம் ஒருபுறம் நடந்த கொண்டிருக்க இலங்கையின் ஆதிக் குடிகளான நாகர், இயக்கர் ஆகிய இனங்கள் பற்றிய அலட்டல் ஏதும் இல்லாத வாய்ப்பான இச்சூழலி;ல் விஜயனில் இருந்தா? சோழர் படையெடுப்பிலிருந்தா? என வந்தேறு குடி வரலாற்றுச் சண்டை சூடு பிடித்துள்ளது. ஆனால் இத்தீர்க்கமான சூழ்நிலை குறித்து இலங்கைச் சோனகரது பிரதிபலிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இலங்கையின் ஆதிக் குடியான நாகர் பற்றிய ஆய்வு குறைவாகவே உள்ளது. இது தான் ஆதிக்குடி எனத்தெரிந்தும் ஒருநாடு அவ்வினம்பற்றி பெரிதாக பிரக்ஞையற்றிருக்கும் நிலை இலங்கையிலேயே உள்ளது.
இந்நிலை குறித்து ஆய்வாளர் அ.வ.முஹ்ஸின் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் என்ற நூலில் இலங்கை முழுவதும் நாகர்கள் ஆளுமையுடன் வாழ்ந்த பிரதேசங்கள் என எல்லா வரலாற்றாய்வாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பிரதேசங்கள் அனைத்திலும் இன்றளவும் சோனகர்கள் நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.(அதற்கு நாமே உயிர் உள்ள சாட்சியங்கள்.) எனவே இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று புறமொதுக்கக்கூடியவிடயமல்ல. எனவே இது எங்ஙனம் நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? என்ற அடிப்படையிலாவது ஒரு வரலாற்று ஆர்வத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டிய அவசரமான அவசியமான பொறுப்பு இலங்கைச் சோனகருக்கு இருக்கிறது. என்கிறார்.
ஆதலால் 2500 வருட வந்தேறு வரலாறுடைய பேரினங்கள் சோனகர் குறித்து அச்சம் கொள்ளும் இவ்வேளையில், இன்னும் பயணிக்க வேண்டிய பாதை பட்டால் ஆனதல்ல எனத்தெளிவாகத் தெரிகின்ற பின்னும் இலங்கைச் சோனகர் தம் வேர் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டுமா? அல்லது அதைப் பெரிது படுத்தாமல் இதுவரை பட்டுஇழுத்து வருவது போல் அவ்வப்போது எதிர் கொள்கின்ற சூழ்நிலைகளுக்கேற்ப நெளிந்து வளைந்து சமரசம் செய்து கொண்டு போவதா? எந்தவொரு சமுதாயமும் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முயற்சிக்காத வரையில் அல்லாஹ்வும் மாற்றப் போவதில்லை. -அல் குர்ஆன்.
Post a Comment