சீரற்ற காலநிலை தொடருகிறது, மக்கள் இடப்பெயர்வு, மீனவர் கடலுக்கு செல்லவேண்டாம்
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தாழமுக்கம் வடமேல் திசையை நோக்கிப் பயணிப்பதே இதற்குக் காரணமென திணைக்களத்தின் கடமை நேர வானிலை நிபுணர் குறிப்பிட்டார்.
இதனால் கடற்பகுதிகள் ஏனைய நாட்களையும் விட சற்றுக்கொந்தளிப்பாகக் காணப்படுமென அவர் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் கடுங்காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டாயிரத்து 700 பேர் தொடர்ந்தும் தற்காலிகமாக முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களின் எண்ணிக்கை 25 ஆக குடைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வாகரை, கிரான், வாழைச்சேனை செங்கலடி ஏறாவூர், களுவாஞ்சிக்குடி மற்றும் வவுனதீவு ஆகிய பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment