Header Ads



வவுனியாவில் வெடிவிபத்து - 6 பேர் காயம்

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னபரந்தன் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற மர்மப் பொருளொன்றை பிரதேசவாசிகள் பரிசோதனை செய்ய முற்பட்ட போது அது வெடிப்புக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 'மேற்கண்டவாறான மர்மப் பொருட்களை பரிசோதனை செய்யும் போது அவை வெடிப்புக்குள்ளான சம்பவங்கள் ஏற்கனவே பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளன. 

இவ்வாறான சம்பவங்களால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அதனால் இவ்வாறான சம்பவங்கள் மேலும் ஏற்படாமலிருக்கும் வகையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

வயல் நிலங்களை உழும் போதும் வீதிகளை சிரதமானத்துக்கு உட்படுத்தும் போதும், குப்பைகளைக் கொட்டும் போதும் அல்லது வீட்டுத் தோட்டத் தோட்டங்களிலிருந்து மேற்கண்டவாறான மர்மப் பொருட்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றைத் தொடாது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும். 

இல்லையேல், பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு தொடர்புகொண்டு அறிவிக்க வேண்டும் என பொதுமக்களில் கேட்டுக்கொள்வதாக' பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.