Header Ads



பிரிட்டன் 'அதையும்' ஏலம் விடுகிறது..!

"வர, வர மேற்கத்திய நாட்டுக்காரர்களுக்கு எதை எதைத் தான் ஏலம் விடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. வி.ஐ.பி., பயன்படுத்தியது என்பதற்காக, "கப்' அடித்தாலும் பரவாயில்லை' என, பல முறை போட்டுக் கழற்றிய அண்டர்வேரைக் கூட விடாமல் ஏலம் விடப் போகிறார்களாம். இந்த "பெருமைக்கு' சொந்தக்காரர் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா. அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள், மரச்சாமான்கள், ஆயில் பெயின்டிங், போர்ப்ஸ் குடும்பத்தின் லண்டன் வீட்டிலிருந்த பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருட்களுடன் சேர்த்து, மகாராணி பயன்படுத்திய உள்ளாடைகளையும் ஏலம் விடப்போகிறார்களாம்.

இதில் பிரசித்தி பெற்றது சில்க் துணி வகையைச் சேர்ந்த ஒரு அண்டர்வேர். இதன் மதிப்பு மட்டுமே 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து கருப்பு வெள்ளை துணி, கையால் தைத்த பட்டாடைகள், இளவரசர் ஆல்பர்ட் மரணமடைந்த போது அணிந்திருந்த காலுறை, மூன்று ஜோடி கையுறைகள், நைட் கவுன் ஆகியவை ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த போர்ப்ஸ் குடும்பத்தின் லண்டன் வீட்டில் உள்ள, 10 முதல் 16 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் ஏலம் விடப்பட உள்ளன.

இது குறித்து ஏலம் விடும் லயோன் மற்றும் டேம்பிள் நிறுவனம் கூறியதாவது: தொன்மையான பொருட்களை, ஏலத்தில் எடுக்க போட்டி அதிகமாக இருக்கிறது. விக்டோரியா மகாராணி பயன்படுத்திய அண்டர்வேரை வாங்குவது பெருமை என நினைக்கின்றனர். உலகம் முழுவதிலிருந்தும் ஏலம் கேட்பவர்கள் வருகின்றனர். அவர்கள் எந்த பொருட்களையும் ஏலத்தில் எடுக்க தயங்குவதில்லை. இது போன்ற தொன்மையான பொருட்கள், சில ஆண்டுகளாக அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. எலிசபெத் டெய்லர், தனது ஏழாவது கணவருடன் பயன்படுத்திய கட்டில் 12 லட்சம் ரூபாய் வரை ஏலம் போனதே இதற்கு சாட்சி, என்று அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.