Header Ads



இஸ்ரேலிய பிரதமர் ஒரு பொய்யன் - ஒபாமாவிடம் சொன்ன சர்கோஸி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ ஒரு பொய்யர்' என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஒபாமாவிடம் விமர்சித்தது தற்போது வெளியாகியுள்ளது.பிரான்சின் கேன்ஸ் நகரில், சமீபத்தில் ஜி 20 நாடுகளின் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் இருந்து பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு கருவிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் கேட்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல மொழிகள் அக்கூட்டத்தில் பேசப்படுவதால், மொழி பெயர்க்கும் கருவிகளும், பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டன. அதற்குரிய "ஹெட்போன்'களை பத்திரிகையாளர்கள் காதில் மாட்டிக் கொண்டால், தலைவர்கள் பேசுவது அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.கூட்டத்தின் போது, அரங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்கோசி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

ஒபாமாவிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த சர்கோசி,"இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து நான் இனி ஒன்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. அவர் ஒரு பொய்யர்' என்றார். இதற்கு பதிலளித்த ஒபாமா,"உங்களுக்கு வேண்டுமானால் அவர் மீது வெறுப்பு இருக்கலாம்.  ஆனால் நான் அவருடன் தினசரி உரையாடுகிறேன்' என்றார்.மேலும், ஐ.நா.,வின் "யுனெஸ்கோ' அமைப்பில் பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கும் ஓட்டெடுப்பில் பிரான்ஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததைப் பற்றி ஏன் தன்னிடம் முதலில் தெரிவிக்கவில்லை எனவும் ஒபாமா, சர்கோசியிடம் கேட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தையை பத்திரிகையாளர்கள் ஒரு சிலர் மட்டும் முதலில் கேட்டுவிட்டனர். அப்போது பலருக்கும் "ஹெட்போன்கள்' வழங்கப்படவில்லை. ஆனால் பின்னர் எப்படியோ இத்தகவல் வெளியில் கசிந்துவிட்டது. இந்த உரையாடல், இஸ்ரேல் மீதான மேற்குலகின் நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்

No comments

Powered by Blogger.