பலஸ்தீன் தனிநாடு - வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டோமென பிரான்ஸ் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்புரிமையை பெறுவது தொடர்பான பலஸ்தீனத்தின் கோரிக்கை மீதான வாக்கெடுப்பில் பிரான்ஸ் கலந்துகொள்ளாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி இதற்கான வாக்கெடுப்பு ஐ.நா பாதுகாப்பு பேரவையில் நடைபெறவுள்ள நிலையில், அதன் நிரந்தர உறுப்பு நாடான பிரான்ஸ் இதனைக் கூறியுள்ளது.
ஐ.நாவின் கலாசார அமைப்பான யுனஸ்கோவில் பலஸ்தீனத்தினை உறுப்பு நாடாக அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்சும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யுனஸ்கோவின் உறுப்புரிமையை பெற்றதன் மூலம், ஐ.நா.வின் முழு உறுப்பு நாடாக இணைந்து கொள்வதற்கான அடித்தளத்தை பலஸ்தீன் பலமாக இட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பலஸ்தீனத்தின் உறுப்புரிமைக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் இராஜதந்திரிகள் பிரான்ஸ்சின் கனாட்டில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முழு உறுப்புரிமையை தவிர வேறு எதனையும் தமது நாடு ஏற்றுக் கொள்ளாது எனவும், ஐ.நா.வின் கண்காணிப்பு நாடு என்ற அந்தஸ்தும் வேண்டாம் எனவும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
1967 ஆம் ஆண்டுக்கு முன்னரான தமது நாட்டை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற பலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் பலஸ்தீனத்தின் இந்த பிரேரணைக்கு எதிராக வீ்ட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment