அத்வானி கொலை முயற்சி - மாட்டுப்பட்ட முஸ்லிம்கள்
மதுரையில் பைப் வெடிகுண்டை வெடிக்க செய்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல திட்டமிட்ட வழக்கில், இருவர் கைதான நிலையில், இமாம் அலி கூட்டாளிகளான, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் தென்காசி ஹனீபா உட்பட, ஐந்து பேரை தேடி, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார், பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக, "மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை' மதுரையில் அக்., 28ல் அத்வானி துவக்கினார். அவர் பயணப்பாதையான திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடைப் பாலத்தில், சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில், நேற்று முன்தினம், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, 26, சிம்மக்கல் தைக்கால் தெரு இஸ்மத், 22, ஆகியோரை, போலீசார் கைது செய்து திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, "ரிமாண்ட்' செய்தனர்.
யார், யாருக்கு தொடர்பு?இவர்கள் கொடுத்த தகவல்படி, நெல்பேட்டையைச் சேர்ந்த இமாம்அலி கூட்டாளிகளான, "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக் மற்றும் தென்காசி மதமோதலில் குமாரபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஹனீபா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் கூறியதாவது:அத்வானியின் யாத்திரை குறித்த செய்தி வெளியானதும், தங்கள் திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்தனர். பக்ருதீன் இதில், "மூளையாக' செயல்பட்டுள்ளார். வெடிகுண்டுகளை வைக்க, குறுகிய பாலமான ஆலம்பட்டியை தேர்வு செய்தார். பின், இவரும், பிலால்மாலிக்கும் யானைக்கல்லில் தர்பூசணி வியாபாரி அப்துல்லாவின் உதவியை நாடினர்.இதைத் தொடர்ந்து, அவரது மஞ்சள் நிற "அப்பாச்சி' பைக்(டி.என்.64 3467), வெடிமருந்து வாங்குவதற்கும், ஆலம்பட்டி செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஒரே டூவீலரில் சென்றால் போலீசார் சந்தேகப்படுவர் எனக்கருதி, ஆட்டோ டிரைவர் இஸ்மத்தை அணுகினர்.மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வத்தின் ஆட்டோவை (டி.என்.59 ஏ.எல். 1536) தின வாடகைக்கு எடுத்து ஓட்டும் இஸ்மத், அதை பக்ருதீன், பிலால்மாலிக், ஹனீபா உள்ளிட்டோரை ஆலம்பட்டிக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தினார். இந்த ஆட்டோவும், டூவீலரும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
"க்ளூ' கொடுத்த பதிவெண் :அத்வானி வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே, இவர்கள் மாறி, மாறி ஆலம்பட்டிக்கு சென்று பைப் வெடிகுண்டை தயாரித்துள்ளனர். அக்., 25 முதல், "அப்பாச்சி' பைக், தொடர்ந்து மூன்று நாட்கள் அதிகாலையில் ஓடைப்பாலத்தில் நிற்பதை ஆலம்பட்டியைச் சேர்ந்த மூவர், தனித்தனியே பார்த்துள்ளனர். பைக் பதிவெண் குறித்து இவர்கள் கூறிய தகவல் தான், இந்த வழக்கின் திருப்புமுனை. அதை ஆய்வு செய்த போது, அப்துல்லாவுடையது எனத் தெரிந்தது.பின், மத அமைப்புகளை கண்காணிக்கும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.யு.) போலீசாரின் உதவியுடன், அப்துல்லாவின் மொபைல் போன் எண் ஆய்வு செய்யப்பட்டது. ஆலம்பட்டி, "டவரில்' இருந்து அடிக்கடி பேசியது தெரிந்தது. அவரை பிடித்து, "கவனித்த' போதுதான், இஸ்மத் குறித்த விவரத்தை கூறினார். அவரிடமும் விசாரித்தபோது, பக்ருதீன், பிலால்மாலிக், ஹனீபா போன்றவர்களுக்கு உள்ள தொடர்பு தெரிந்தது.
பெங்களூரில் பதுங்கல் ஏன்?எந்த அமைப்பிலும் இல்லாத அப்துல்லாவும், இஸ்மத்தும், "இவ்வழக்கில் எந்த, "க்ளூ'வும் கிடைக்காததால், நம்மை போலீசார் தேடமாட்டார்கள்' என்று கருதி, தலைமறைவாகாமல் இருந்துள்ளனர். அதேசமயம், "எப்படியும் போலீசார் நம்மை பிடித்து விடுவார்கள்' எனக்கருதி, பக்ருதீன் உள்ளிட்டோர் பெங்களூரு சென்று பதுங்கியுள்ளனர். ஏற்கனவே இமாம் அலி கூட்டாளிகள் அங்குதான் பதுங்கியிருந்தனர் என்பதால், தகவல் பரிமாற்றத்திற்கும், இதர வசதிகளுக்கும் அந்நகரத்தை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். தொடர்ந்து இருப்பிடங்களை மாற்றி வரும் அவர்களை, ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என, போலீசார் கூறினர்.இதற்கிடையே, அப்துல்லா கடையில் லோடுமேனாக வேலை செய்த நெல்பேட்டையைச் சேர்ந்த கொடிவீரணன் என்பவரிடமும் விசாரணை நடக்கிறது. பக்ருதீன் உள்ளிட்டோரை பிடித்தால் மட்டுமே, வெடிகுண்டை தயாரிக்க எங்கு மருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவரும்.கைதான இருவரையும், நவ., 6 மாலை 4 மணி வரை போலீஸ் காவலில் விட, திருமங்கலம் மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
யார் இந்த "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக்:அல்-உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இமாம்அலி, ஹைதர்அலி, மதுரை மேலூர் ஓவாமலை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். 2002ல், மதுரையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் வழியில் திருமங்கலத்தில், போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு இருவரையும் கூட்டாளிகள் மீட்டுச் சென்றனர்.இச்சம்பவத்தில் தான், "போலீஸ்' பக்ருதீன், முதன்முறையாக ஈடுபட்டார். இவரது தந்தை சிக்கந்தர், போலீஸ் ஏட்டாக இருந்தவர். இதனாலேயே பக்ருதீன் பெயரில், "போலீஸ்' ஒட்டிக்கொண்டது.
பெங்களூரில் இமாம்அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இப்ராகிமின் மைத்துனர் தான் பக்ருதீன். இவர் மீது, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இமாம் அலியை மீட்டுச் சென்ற வழக்கில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு நெல்பேட்டையில் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி, வீடுகளில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது எஸ்.ஐ., ஒருவருடன் பக்ருதீன் தகராறு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எதையும் செய்யும் மாலிக்:நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால்மாலிக், எந்த அமைப்பையும் சேராதவர். ஐந்தாண்டுகளுக்கு முன், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயதான பிலால்மாலிக் சேர்க்கப்பட்டார். "மைனர்' என்பதால் இவருக்கு மட்டும் தனி விசாரணை நடந்தது. இவ்வழக்கும், சில ஆண்டுகளுக்கு முன், வேலூர் சிறையில் இருந்தபோது, ஜெயிலருடன் மோதலில் ஈடுபட்ட வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது.
தியாகப்படையை சேர்ந்தவர்கள்?பக்ரூதீனும், பிலால் மாலிக்கும், "அல்முஜாதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த மதத்திற்காக உயிர் தியாகம்கூட செய்ய தயாராக இருப்பதால், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகிறது.பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. மதுரையில், மத அமைப்புகளை விசாரித்த அனுபவமுள்ள, தற்போது வெளியூர்களில் பணியாற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களின் உதவியை சிறப்பு புலனாய்வுப் பிரிவு நாடியுள்ளது. அவர்களும் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment