ஆண் குழந்தையை பிரசவித்து வீட்டு முற்றத்தில் புதைத்த தாய் கைது
ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்து அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் அதனை தனது வீட்டின் பின்புறம் குழிதோண்டிப் புதைத்த தாய் ஒருவர் பற்றி அரலகங்வில - யக்குரே - நுவரகல பிரதேசத்தில் தகவல் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
118 என்ற அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது தாய் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். "2011-11-06 அன்று எனது வீட்டில் வைத்து எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதிகாலை இரண்டு மணி அளவில் குழந்தை பிறந்தது. குழந்தை சத்தமின்றி எதுவித அசைவுகளும் இன்றியே பிறந்தது. அதனால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு வீட்டின் பின்புறம் குழிதோண்டி குழந்தையை புதைத்து விட்டேன். பிறந்தது ஆண் குழந்தை" என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரலகங்வில பொலிஸார் புதைக்கப்பட்ட குழந்தையை இன்னும் தோண்டி எடுக்கவில்லை. எனினும் குழந்தை புதைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

Post a Comment