வடக்கில் 50.000 வீடுகள் - இந்தியா நேரடி நிதியுதவி, முஸ்லிம்களின் நிலை..?
50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது.இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதி யில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டில் அங்கு 52 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது என்றும் அதன் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால், இத் திட்டத்தைச் செயற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இதேவேளை வடக்கில் இந்திய அமைக்கும் வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டுமென இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் சார்பிலும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அமைச்சர் றிசாத் அண்மையில் இதனை இந்திய அதிகாரிகளிடமும் குறிப்பிட்டிருந்தார். இருந்தபோதும் தற்போது இந்தியா ஆரம்பித்துள்ள வீடமைப்புக்கு பதிலாக நிதியுதவி திட்டமானது முஸ்லிம்களுக்கும் போய்ச்சேருமா என்பது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.
Post a Comment