Header Ads



ஹிஸ்புல்லா, பஸீர் தமிழர் காணிகளை அபகரிக்கின்றனர் - தமிழ் எம்.பி. கூறுகிறார்

ஆசைவார்த்தை கூறி தமிழர்களிடம் வாக்கு பெற்று வெற்றிபெற்ற பசீர் சேகுதாவுத்தும், ஹிஸ்புல்லாவும் வாக்குப்பிச்சை போட்ட தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாண வைபவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்  இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வீடுகளுக்கு சென்ற ஹிஸ்புல்லாவும், பசீரும் வேலைதருகிறேன், வீடு தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி வாக்குபெற்றபின் அதே தமிழர்களை அடிமைப்படுத்தும் அவர்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தமிழர்கள் இனிமேல் இடமளிக்க கூடாது.

மறுபுறத்தில் பிள்ளையான் தமிழ் தேசியக்கூட்டமைப்பை விமர்சித்து வருகிறார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் பிள்ளையானுக்கு கிடைத்த முதலமைச்சர் பதவி என்பதை பிள்ளையான் உணர்ந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு முறை கிழக்கு மாகாணசபை தேர்தல் நடந்தால் தமிழ் மக்கள் தங்கள் பலத்தை கொண்டு பிள்ளையானுக்கு பாடம் புகட்டுவார்கள்.

வாக்கு என்பது பெறுமதியானது. வாக்கினை முறையாக அளிக்க மறந்தால், தவறிழைத்தால் நாக்கினை அறுத்த கதையாகி விடும். இன்று கல்னையிலும் அதே கதிதான் நேர்ந்துள்ளது. கல்னை வாழ் தமிழர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாததால் நாம் இரண்டு பிரதிநிதித்துவத்தினை இழந்துள்ளோம். எமது இனத்தின் விடுதலை, உரிமை பற்றி பேசுவதற்கு எமக்கு மட்டுமே திராணி உண்டு. எமக்கு மட்டுமே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் பலமாக நாமே உள்ளோம் என யோகேஸ்வரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.