இவ்வருடத்திற்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேற்றப்படுவர் - பஸில்
வடக்கு, கிழக்கில் அரசாங்கம் மேற் கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளாடியின் விசேட தூதுவரான ஜோன் மெக்கற்றி சந்தித்து கலந்துரையாடிய போது இதை எடுத்துரைத்தார்.அரசாங்கம் வடக்கில் நடைமுறைப்படுத்தி வரும் கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கிக்கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வீதி அமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், ரயில் பாதையை வட பகுதிக்கு விஸ்தரித்தல், பலாலி விமான நிலையத்தின் இறங்கு தரையை புனரமைத்தல் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஏ9 பாதையை விரிவுபடுத்தல், குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல் போன்றவற்றை மேற்கொண்டு வரும் அரசாங்கம் இவ்வாண்டு இறுதிக்குள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றிவிடும் என்றும் கூறினார். அரசசார்பற்ற அமைப்புகளின் அனுசரணை யுடன் வீட்டுச் சொந்தக்காரர்களைக் கொண்டே அவர்களின் வீடுகளை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கை அகதிகளுக்கும் அரசாங்கம் வசதிகளை செய்து கொடுத்து வருகிறதென்றும் அமைச்சர் கூறினார்.
இவ்விதம் நாட்டில் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள மக்களை அரசியல் ரீதியில் வலுவூட்டும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் மேலும் எடுத்துரைத்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தி முதலில் ஜனநாயக ஆளுமையை இலங்கையில் வலுப்படுத்தி அதன் மூலம் சமூக வலையமைப்புத் திட்டங்களினால் மக்களின் வாழ்க்கையை குறிப்பாக விவசாயிகளுக்கு அரசாங்கம் நல்வாழ்வை பெற்றுக் கொடுத்து வருகின்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும், பாடசாலை கள், வீடமைப்புத் திட்டங்கள், சுகாதார, நீர் விநியோக வசதிகளை செய்வதற்கும் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் தமது நன்றிகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கெத்தி குலுக்மானும் கலந்து கொண்டார்.
Post a Comment