Header Ads



முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது - ஹக்கீம் ஆவேசம்

இந்நாட்டிலே அரசியல் தீர்வின் போதும், அதிகாரப் பகிர்வின் போதும் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதையோ, புறக்கணிக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கி, 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அமிர்தலிங்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தனித் தமிழ் ஈழத்துக்காக அர்ப்பணிப்புடன் களமிறங்கினார். தமிழர்களுக்காக முஸ்லிம் சமூகம் சாமானியமான தியாகங்களைச் செய்யவில்லை என்பதை தமிழ் தேசிய தலைமைகளிடம் நாம் ஞாபகப்படுத்தியிருக்கின்றோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் - அமையப் போகின்ற தமிழ் ஈழத்தில் முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய உரிமையினை நாம் அங்கீகரிக்கின்றோம் எனக் கூறப்பட்டிருந்தது.

அது மட்டுமன்றி, அமையப் போகின்ற தமிழ் தேசத்தில் தமிழர்களோடு சேர்ந்து வாழ முஸ்லிம்கள் விரும்பவில்லையென்றால் நீங்கள் பிரிந்து உங்களுடைய பிரதேசங்களை ஆளலாம். அதற்கு நாம் அங்கீகாரம் தருவோம் என்று சாய்ந்தமருது கடற்கரையில் அப்போது இடம்பெற்ற தேர்தல் பிரசார மேடையில் தமிழ் தலைமைகள் வாக்குறுதியளித்தன. ஆனால், இப்போது எல்லாவற்றினையும் மறந்து விட்டார்கள்.

இவை மட்டுமல்ல, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக கூச்சல்கள் எழுந்த போது, இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு எதிராக முஸ்லிம்களை அரசாங்கம் தூண்டி விடக்கூடிய ஆபத்துக்கள் உருவாகியிருந்த போது, அதைத் தடுப்பதற்காக அஷ்ரஃப் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையினை முன்வைத்தார். வடக்கு – கிழக்கு இணைப்பு என்கிற தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முஸ்லிம்களால் குந்தகங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்வைக்கப்பட்டதே, அஷ்ரஃப்பின் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையாகும்.

ஆனால், தமிழ் சமூகத்தினர் இதை மறந்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றனர். சகோதர இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் குறுக்கே நிற்காமல்தான் எங்களுடைய இலக்குகளைப் பற்றிப் பேசி வருகின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.