Header Ads



''நளீம் ஹாஜியாரை தந்தையாகப் பெற்றமை அல்லாஹ் தந்த ஒரு பாக்கியம்''

உண்மையில் நளீம் ஹாஜியார் என்பவரைத் தந்தையாகப் பெற்றமை அல்லாஹ் தந்த ஒரு பாக்கியம்தான் இவ்வாறு அல்ஹாஜ் யாகூத் நளீம் தெரிவித்துள்ளார்.
அல்ஹாஜ் யாகூத் நளீம்  பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களின் இளைய புதல்வராவார். நளீம் ஹாஜியாரின் மறைவுக்குப் பிறகு ஜாமிஆ நளீமிய்யாவின் முகாமைத்துவக் குழுத் தலைவராக இருந்து தனது தந்தையின் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவர், பைரஹா தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு, முஸ்லிம்கள் என்றவகையில் வியாபார நடவடிக்கைகளின்போது நாம் நிச்சயம் இஸ்லாமிய வரையறைகளைப் பேண வேண்டும். நேர்மையாக வியாபாரம் செய்ய வேண்டும். எனது தந்தை 40 வருடங்களாக மாணிக்க வியாபாரம் செய்தார். ஆனால், அவர் ஒரு பொய் கூட சொல்லவில்லை எனச் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.

மேலும் நாம் எமது பொருளாதாரத்திற்கான ஸகாத்தை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதனை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் அதில் தவறு விடுவோமாக இருந்தால், நிச்சயம் அது எமது பொருளாதார நிலமைகளை, வியாபாரத்தைப் பாதிக்கும். செழிப்பும் பரகத்தும் இல்லாமல் போகும். எனவே இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதாரத் துறையிலே கற்பதில் நாம் கரிசனை செலுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏனெனில் இன்று அனைத்துமே கல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் நடைபெறுகின்றது. எனவே வியாபாரத்திலும் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காலத்தின் தேவைக்கேற்ப அதனை நடத்திக் கொண்டு போக வேண்டிய தேவை குறிப்பாக இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.

மற்றது முஸ்லிம் ஊர்கள், அதாவது ஒவ்வொரு ஊரும் ஒரே தொழில் தங்கியுள்ளமையும் ஆரோக்கியமான நிலைமை அல்ல. ஏனெனில், நீண்ட காலத்தில் அவற்றில் பாதக நிலைமைகள் தோன்றும்போது அந்த ஊரே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட இடமிருக்கிறது. எனவே ஒவ்வொரு ஊரிலும் தொழிலில், வியாபாரத்தில் பல்வகைமை காணப்பட வேண்டும். அதேவேளை, செய்கின்ற வியாபாரத்தைத் தரமாகச் செய்யவும் வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.