Header Ads



வாய்புற்று நோய் - இலங்கையில் நாளாந்தம் மூவர் மரணம்

வாய்ப்புற்று நோய் காரணமாக இலங்கையில் தினமும் சுமார் மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட் டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பல்வைத்திய மருத்துவ நிபுணர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்தார்.

வாய்ச் சுகாதாரம் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டிய செய்தியாளர் மாநாட்டில் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுகாதார துறை பதிலமைச்சர் லலித் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் அமரசிங்க மேலும் கூறுகையில், வாய்ப்புற்று நோய்க்கு வெற்றிலை மெல்லுதலே மூல காரணியாக உள்ளது. ஆயினும் இலங்கையில் 35 சதவீதமானோர் வெற்றிலை மெல்லுபவர்களாக உள்ளனர். ஆனால் இந்நாட்டின் கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் 53 சதவீதமானோர் வெற்றிலை மெல்லுகின்றவர்களாக இருக்கின்றனர்.

வெற்றிலை மெல்லுதல் பழக்கம் மனித உடலுக்கு உகப்பானதல்ல. இலங்கையில் வாய்ப்புற்று நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 800 பேர் உயிரிழக்கின்றனர். இது நாளொன்றுக்கு இரண்டு, மூன்று மரணங்களாக இடம்பெறுகின்றது. இந்நாட்டில் வாய்ப் புற்று நோய்க்கு ஆண்கள் தான் அதிகம் உள்ளாகின்றனர். என்றாலும் மத்திய மாகாணத்தில் பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழுகின்ற பெண்களும் குறிப்பிடத்தக்களவில் இந்நோய்க்கு உள்ளாகின்றனர்.

வெற்றிலை மெல்லுதலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்று நோய்க்குத் துணை புரியாக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் வெற்றிலை மெல்லுதல் பழக்கத்தைத் தவிர்த்துக் கொள்ளுவதே உடலாரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.