Header Ads



அமைச்சர் மேர்வின் அதிரடி - எந்த நீதிமன்றுக்கு கட்டுப்படுவது..??

 சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவில் பலியிடுவதற்காக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் ஆடுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலையீட்டினால் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  குறித்த விலங்குகளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு அமைச்சர் மேர்வின் சில்வா உத்தரவிட்ள்ளார்.

மேலும், பின்பு தான் பொலிஸ் நிலையத்துக்கு வந்து விலங்குகளை பண்ணைகளுக்கு கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்ள்ளார். 

இதேவேளை சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மிருக பலி பூஜையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு சிலாபம் மேலதிக மாவட்ட நீதவான் ஆர்.எம்.ஜயரட்ண உத்தரவிட்டுள்ளார். சிலாபம் பொலிஸ் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த பின்னரே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதவானினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மிருக பலியை இடைநிறுத்தி வைக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் ஒவ்வொரு வருடமும் மிருக பலி பூஜை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கடந்த 28ம் திகதி நிராகரிக்கப்பட்டது.  இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை ஒக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்பிலியபிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14 பெளத்த அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.  ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலியே ரத்தன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்ற மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.

தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்தன தேரர் கூறினார்.  ஒக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை நீஜர் மன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிலாபம் மேலதிக மாவட்ட நீதவான் மிருக பலி பூஜைக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.