Header Ads



பலஸ்தீன் தனிநாடாக 122 நாடுகள் ஆதரவு - அமெரிக்கா கடும் எதிர்ப்பு

பலஸ்தீன தனிநாடு கோரிக்கையை தடுத்து நிறுத்தும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதற்காக அமெரிக்க இராஜதந்திரிகள் இஸ்ரேல், பலஸ்தீனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க ராஜதந்திரிகளான டென்னிஸ் ரொஸ் மற்றும் டேவிஸ் ஹெல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைக்கான தலைவர் கதரின் அஷ்டன், மத்திய கிழக்குக்கான தூதுவர் டொனி பிளயர் ஆகியோர் இஸ்ரேல்- பலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஐ. நா.வில் பலஸ்தீன தனி நாடு கோரிக்கையை விலக்கிக் கொள்ள அழுத்தம் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அமெரிக்க தூதுவர்களான டென்னிஸ் ரொஸ், டேவிஸ் ஹெல் ஆகியோர் நேற்று முன்தினம் இஸ்ரேல் பயணமானார்கள். இவர்கள் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன் யாஹு, பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த தூதுக்குழு மேற்குக் கரைக்கு சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤டன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கதரின் அஷ்டனும் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பலஸ்தீன தனிநாடு விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதனிடையே பலஸ்தீனம் ஐ. நா. வில் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 20 ஆம் திகதி ஐ. நா. பொதுச்சபை கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதில் பலஸ்தீனம் தனது அங்கத்துவத்திற்கான தனிநாடு கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக ‘வீடோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

எனினும் பொதுச்சபையில் பலஸ்தீனின கோரிக்கைக்கு ஆதரவு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சபையில் நிராகரிக்கப் பட்டாலும் பொதுச்சபையில் மூன்றில் இரண்டு ஆதரவு கிடைத்தால் பலஸ்தீனின் தனிநாடு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கு 126 நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏற்கனவே பொதுச் சபையில் 122 நாடுகளின் ஆதரவு உள்ளது. எனவே, இந்த இலக்கை எட்ட பலஸ்தீனத்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

No comments

Powered by Blogger.