அல்ஹைதாவின் அடுத்த தலைவர் டாக்டர் அய்மான் அல் ஜவாஹரி..?

பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அல்-காய்தா தலைவர் வபாத்தானதையடுத்து எகிப்தில் பிறந்த டாக்டரான அய்மன் அல்-ஜவாஹரி அந்த அமைப்புக்கு பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்லேடன் மற்றும் அவரது அல் காய்தா நெட்வொர்க்கின் மூளையாகச் செயல்பட்டவர் ஜவாஹரி. அல் காய்தாவின் விடியோ செய்திகளில் அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி. கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு முஸ்லீம்களை அவர் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.டி.இ. புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கண்காணிப்பில் இது தெரியவந்தது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்தியபோது பின்லேடனும், ஜவாஹரியும் தந்திரமாக தப்பினர். தற்போது அமெரிக்கப் படைகளுடனான தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டு, அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், ஜவாஹரியைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பின்லேடனைப் போலவே ஜவாஹரியும், ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மறைந்திருப்பார் எனக் கருதப்பட்டு வந்தது. ஜவாஹரியும், பின்லேடனும் ஒன்றாக இருந்த விடியோ கடைசியாக செப்டம்பர் 10 2003-ல் அல் ஜஸீராவால் வெளியிடப்பட்டது. அதில் மலைப்பகுதிகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர். ஜவாஹரியை அல் காய்தாவின் தலைமை அமைப்பாளர் என்றும் பின் லேடனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Post a Comment