Header Ads



ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் சர்வதேச விசாரணை சாத்தியமா?


(ஊடகவியலாளர் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் எழுதி இன்றைய 01-05-2011 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையை இங்கு மீள்பதிவிடுகிறோம்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

ஐ.நா. நிபுணர் குழுவின் இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகங்களின் பார்வையையும், சர்வதேசத்தின் பிரதிபலிப்பையும் மற்றும் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை சாத்தியமா என்பது தொடர்பிலும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில்

நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானவுடன் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சர்வதேச ஊடகங்களும் செய்திகளையும், அதுகுறித்த அபிப்பிராயங்களையும் வெளியிட்டிருந்தன.

ஐ.நா. செயலாளரான பான் கீ மூன் ஷஇலங்கையின் ஒப்புதலோ அல்லது ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் விண்ணப்பமோ இன்றி தன்னால் யுத்தக்குற்ற விசாரணையை கோரமுடியாது| என்று தெரிவித்ததை முதன்மைப்படுத்தி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டிருந்தது.

ஏ.பீ.சீ. செய்தி நிறுவனமானது, ஷ யுத்தக் குற்ற விசாரணையை நடத்த வேண்டும்| என ஐ.நா. சபை கோருவதாக அறிக்கையிட்டிருந்தது.

அல்ஜஸீரா செய்தி நிறுவனமானது ஷஇலங்கை அரசாங்கம் மீது யுத்தக்குற்ற விசாரணை கோரும் அறிக்கையை நிபுணர் குழு வெளியிட்டுள்ளது| என செய்தி ஒளிபரப்பியதுடன், இலங்கையின் இறுதி யுத்த நிலவரம் தொடர்பிலும், அதன் பாதிப்புகள் குறித்தும் 30 நிமிட ஆவணப் படமொன்றையும் காண்பித்திருந்தது.

பீ.பீ.சி. செய்தி நிறுவனமானது, ஷ இறுதிகட்ட யுத்தத்தில் மாண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசாங்க படைகளின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டார்கள் எனவும், எனவே சர்வதேச யுத்தக்குற்ற விசாரணையை ஐ.நா. நிபுணர் குழு வலியுறுத்துகிறது| எனவும் கூறியது.

இவற்றுக்கப்பால் அமெரிககாவின் சீ.என்.என்., பிரான்ஸின் பிரான்ஸ்24, ஜேர்மனியின் டெர்ஸ்பீக்ஸ், பிரிட்டனின் தே கார்டியன், சனல்4 மற்றும் வொய்ஸ் ஒப் அமெரிககா உள்ளிட்ட ஊடகங்களும் இலங்கை தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கை தொடர்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

சில மேற்குலக ஊடகங்கள் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானவுடன், இலங்கை மீது யுத்தக்குற்ற விசாரணை அவசியமென வலியுறுத்திய அதேவேளை மற்றும் சில ஊடகங்கள் மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்திருந்தன. 

உதாரணமாக ஷதே வேர்ள்ட் ஸ்ரீட் ஜெர்னல்| வெளியிட்ட செய்தியில், ஷஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக சர்வதேசத்தின் செயற்பாடுகளினால் இலங்கையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இவ்வறிக்கையில் கூறப்பட்டு வெளிடப்பட்டுள்ள அநேக கருத்துக்கள் உண்மைக்கு மாறானவையாக இருக்கலாம். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது இறுதிக்கட்ட யுத்த இடம்பெற்ற பகுதிகளில் மாத்திரமல்ல| எனவும் அச்சஞ்சீகை சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச ஊடகங்கள் இவ்வாறு இலங்கை யுத்தக் குற்றஙகள் தொடர்பிலான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிய பிரதிபலிப்பை வெளியிட்டுள்ள அதேவேளை சில சர்வதேச நாடுகளும் இதுதொடபிலான தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிககா, பிரித்தானியா வரவேற்பு

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானவுடன் அதுதொடர்பில் முதலில் பிரதிபலிப்பை வெளியிட்ட நாடு அமெரிககா ஆகும்.

அமெரிககாவின் ஐ.நா.விற்கான பிரதிநிதி சூசன் ரைஸ் ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பிலான அறிக்கை தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஷஇலங்கை பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கையை அமெரிககா வரவேற்கிறது. மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்பு பட்டவர்கள் அதற்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள கூடாதென்பதே அமெரிககாவின் நிலைப்பாடு. எனவேதான் நாம் சர்வதேச ரீதியிலான விசாரணை தேவையென இலங்கையை வலியுறுத்துகிறோம்| என்றார்.

அத்துடன் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியாவும் அறிவித்துள்ளது.

ஷஇலங்கை பொறுப்புடன் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதில் வழங்குவது அவசியமாகும். இதன்மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படும். இலங்கை மீது தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டுமென பிரித்தானியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது| எனவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

நவநீதம் பிள்ளையும் ஆதரவு

அதேநேரம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானவுடன் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருந்தது.

அதில், ஷநிபுணர் குழு அறிக்கையில் உள்ள 16 செய்திப் படங்களை ஆதாரமாக கொண்டு, பான் கீ மூன் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமென கூறியுள்ளதுடன், அறிக்கை மூலம் இலங்கை இறுதியுத்த வேளையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தெளிவாகிறது| எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்பதாக அறிவித்துள்ளார்.

ஷஇலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள இந்ந அறிக்கை வழி செய்கிறது. எனவே இலங்கை தொடர்பில் துரித நீதியான விசாரணைகளை முடக்கிவிட வேண்டும்| எனவும் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் சாத்தியமா..??

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பு இவ்வாறானதாக இருக்கும் அதேவேளை இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணை சாத்தியமா என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானவுடனே அதுதொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், ஷநிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் மேறகொள்ளும் அதிகாரம் என்னிடமில்லை. அறிக்கை பற்றி சர்வதேச ரீதியிலான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தனது விருப்பத்தை தெரிவிப்பது அவசியம். இல்லையேல் ஐ.நா. உறுப்பு நாடுகள் அழைப்பு விடுத்தல்  அவசியம்| என குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் நாம் இலங்கை தொடர்பிலான யுத்தக் குற்றஙகள் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை சாத்தியமா என்பதையும் நோக்கவேண்டும்.

ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான் அறிக்கையை ஆராய முதற் தகுதி பெற்றுள்ள அமைப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையேயாகும். இச்சபையில் அமெரிககா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஸ்யா உள்ளிட்ட ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் அங்கம் பெறுகின்றன. இதில் 5 நாடுகளும் ஷவீட்டோ| ரத்துச் செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளன.

சீனாவும், ரஸ்யாவும் இலங்கையின் நேச நாடுகளாகவே நோக்கப்படுகிறது. பாதுகாப்புச் சபையில் சிலவேளைகளில் மேற்கு நாடுகள் இலங்கை தொடர்பில் தீர்மானங்களை கொண்டு வந்தாலும், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நிச்சயமாக சீனாவும், ரஸ்யாவும் அனுமதிக்கப் போவதில்லை. எனவே ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பிலான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை விவாதிக்கப்படவே அல்லது இலங்கை யுத்தக் குற்றஙகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை கோரவோ வாய்ப்பில்லை.

இரண்டாவது ஐ.நா. பொதுச் சபையாகும். இப்பொதுச் சபையில் ஏராளமான நாடுகள் உள்ளன. ஐரொப்பிய நாடுகளை தவிர்த்துவிட்டு நோக்குகையில் ஆபிரிக்க, அரபு மற்றும் ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே செயற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஐ.நா. பொதுச் சபையிலும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலோ அல்லது இலங்கைக்குகெதிராக சுமத்தப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலோ விசாரணை செய்யமுடியாத நிலையே ஏற்படும்.

இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்க விழும்புவர்கள் அல்லது இலங்கையை தண்டிக்க விரும்புவர்களுக்குள்ள மூன்றாவது தெரிவுதான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவாகும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கெதிராக ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து தோல்விகண்டன. 

ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கைக்கெதிரான பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு மீண்டுமொரு தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயன்றாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் உதவி பெறப்பட்டு அநேகமாக அவ்வாறான தீர்மானமும் தோல்வியிலேயே முடிவடைய வாய்ப்புகள் உண்டெனலாம்.

சிலவேளைகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது வெற்றி பெற்றாலும் இந்த தீர்மானத்தை வைத்துக்கொண்டு ஐ.நா. பொதுச் சபையோ அல்லது பாதுகாப்புச் சபையோ இலங்கை மீது எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறான ஏற்பாடுகளும் நாம் அறிந்தவரையில் ஐ.நா. யாப்புகளில் இல்லை.

மேலும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி சில நாட்களும் சென்றுவிட்டன. இன்றுவரை அந்த அறிக்கை தொடர்பில் பாதுகாப்புச் சபையிலோ அல்லது பொதுச் சபையிலோ ஆராயுமாறு இதுவரை எந்த நாடும் கோரிக்கை விடவில்லை.

இதனை இன்னர் சிட்டி பிரஸும் உறுதிப்படுத்தியுள்ளது. தம்மிடம் இலங்கை தொடர்பில் ஆராயுமாறு எத்தகைய கோரிக்கைகளும் இதுவரை  முன்வைக்கப்படவில்லை என்பதை ஐ.நா. அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகமொத்தத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் பிடியிலிருந்து இலங்கை நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகளவில் காணப்படுகிறது.

இதன் மூலம் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையால் இலங்கையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தவோ முடியாத நிலையே காணப்படுகிறது எனலாம். ஏனவே இலங்கை மீது எத்தகைய சர்வதேச விசாரணைகளும் சாத்தியமற்றதாகவே தற்போதுவரை காணப்படுகிறது.

இருந்தபோதும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சில நாடுகள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கும், ஆட்சியாளர்கள் மற்றும் படைத்துறை அதிகாரிகள் மீதும் சில நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

   அத்துடன் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு புலம்பெயர்ந்த தமிழர் தரப்பும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளும் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் படைத்துறை அதிகாரிகளுக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சாரங்களில் ஈடுபடவும் நிபுணர் குழுவின் அறிக்கை உதவலாம்

இதனைவிட ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையினால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்ற கசப்பாண உண்மையை நாம் ஏற்றாகத்தான் வேண்டும்..!!

No comments

Powered by Blogger.