யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முடிவுற்றது
உபவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுதிமொழியைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை தொடக்கம் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிடுவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.
இன்று தொடக்கம் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராக வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இதன்போது எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கென உபவேந்தரால் நியமிக்கப்பட்ட மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் இரண்டு நாள்கள் இடம்பெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவும் புதிதாகப் பதவியேற்றுள்ள உபவேந்தருக்கு எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு நன்மையான விதத்தில், நீதியான முறையிலும் பரிசீலித்து உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக விசாரணைக் குழு உறுதி வழங்கியதை ஏற்றுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment