Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழக விவகாரம், துணைவேந்தரின் விளக்கம்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் நடத்திய பகிஷ்கரிப்பு போராட்டம் குறித்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் நிலைமைகளை விளக்கும் வகையில் செய்திக் குறிப்பொன்றை இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். 


அச்செய்திக் குறிப்பின் விபரம் வருமாறு, 

29.04.2011 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலரால் பகிஷ்கரிப்புப் போராட்டம் எவ்விதமுன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்டது. 

இது தொடர்பில் பல்கலைக்கழக சபாமண்டபத்தில் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் ஒழுக்காற்று அதிகாரிகள் முன்னிலையில் மாணவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உரிய முன்னறிவித்தல் இன்றி பல்கலைக்கழக சட்டதிட்டங்களுக்கு முரணான விதத்தில் மறியலில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது எடுத்துரைக்கப்பட்டது. 

பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தமை மிகவும் பாரதூரமான குற்றம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திற்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாமையே தமது போராட்டத்திற்கான பிரதான காரணம் என மாணவர் பிரதிநிதிகள் கூறியதை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் 06.05.2011 வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

மாணவர்கள் தமது கோரிக்கைகளை உரிய முறையிலும் ஒழுக்க நடைமுறைகளுக்கு அமைவாகவும் பல்கலைக்கழக மாணவர் என்ற ரீதியில் சமூகத்திற்கு முன்மாதிரியான முறையிலும் முன்வைக்க வேண்டும் என்றும் அவற்றை தகுந்த முறையில் பரிசீலித்து உரியமுறையில் நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.