Header Ads



முஸ்லிம் பெண் தற்கொலை போராளிகள் அமெரிக்காவுக்கு நடுக்கமெடுத்துள்ளதாம்


பஜாவூர் முகவர் நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை பெண்ணொருவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், போராளிக் குழுக்களின் தந்திரோபாயங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் பெண்களை அதிகளவுக்கு தற்கொலைப்படையில் இணைத்துக்கொள்ளும் தன்மை வெளிப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இது மிகவும் ஆபத்தான விடயமென பாதுகாப்பு ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பஜாவூரிலுள்ள போராளிக் குழுக்களும் தடை செய்யப்பட்டுள்ள தெஹ்ரிக்,தலிபான்,பாகிஸ்தான் குழுவும் எப்.எம். வானொலி மூலமும் பத்திரிகையாளர்களுடனான உரையாடல்களின்போதும் பெண்களை தற்கொலைக்குண்டுதாரிகளாக தாங்கள் பயிற்றுவிப்பதாக எச்சரித்திருந்தன.

 2006 இற்குப் பின்னர் பாகிஸ்தானில் இதுவரை 250 தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பஜாவூரிலேயே பெண்ணொருவர் முதன்முறையாக தற்கொலைக் குண்டுதாரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

2006 இல் கன்கூவில் இடம்பெற்ற அசூரா ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அச்சமயம் 22 பேர் கொல்லப்பட்டனர்.
 2007 இல் பெஷாவரிலுள்ள பாதுகாப்பு தடையரணில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணென நம்பப்படும் குண்டுதாரி கொல்லப்பட்டிருந்தார். 

ஆனால், அந்தப் பெண் வெடிபொருட்களை மட்டுமே கொண்டு சென்றதாகவும் அதனைச் செயற்படுத்தியது வேறொருவர் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பெண்கள் பயன்படுத்தப்பட்டால் இது மிகவும் அபாயகரமானதாக இருக்குமென பாதுகாப்பு ஆய்வாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான பிரிகேடியர் மஹ்மூத் ஷா கூறியதாக டோன் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

போராளிகள் இளம் பிள்ளைகளை தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பெண்களையும் அதில் ஈடுபடுத்துகின்றார்களா என்பது குறித்து தன்னால் நம்பமுடியவில்லையென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய கிழக்கிலுள்ள சில இஸ்லாமியப் போராளிக்குழுக்களும் விடுதலைப்புலிகளும் பெண்களை தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால், இந்த விடயங்கள் இதுவரை பாகிஸ்தானில் இடம்பெற்றிருக்கவில்லை. தலிபான் தலைவர்களான மௌலான பாஹிர் முகமட்,மௌலவி மொஹமட் ஒமர் தங்களிடம் பெண்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களைத் தாங்களே வெடிக்க வைக்க விரும்புவதாகவும் எச்சரித்திருந்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. 

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பெண்களை ஈடுபடுத்துவது குறித்து எப்.எம். வானொலியில் மௌலான பாஹிர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்று பஜாவூரிலுள்ள ஒருவர் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் போராளிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது தொடர்பாக அதிக உள்ளூரதிகாரிகள் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பஜாவூர் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கும் தலிபான் பேச்சாளர் அஷாம் தாரிக்,பெண் தற்கொலைக் குண்டுதாரியைப் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், தங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். குண்டுத்தாக்குதல்களையடுத்து பெஷாவரிலுள்ள லேடி றீடிங் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பெண்ணொருவர் அலறிய சத்தத்தை தாங்கள் கேட்டதாகக் கூறியுள்ளனர். பெண்ணொருவரே இத்தாக்குதல் நடத்தினார் என்பது உறுதியானதென்று அவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.