அரசாங்கமும், தமிழ் ஆயுதக் குழுக்களும்
கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலி மிரர் ஆங்கில நாளேட்டில் அதன் பத்தி எழுத்தாளர் எம் எஸ் எம் அயூப் எழுதிய கட்டுரையை எமது யாழ் முஸ்லிம் வாசகர்களுக்காக காலத்தின் தேவைகருதி சுருக்கித்த தருகிறோம்.
கடந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அல்லாத முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டிருப்பதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
'விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு பற்றி மாத்திரமே பேசப்படுகிறது. எங்களுடன் இணைந்திருந்த போராளிகள் செல்லும்போது அவர்களது குடும்பத்தினைத் தாங்குவதற்கான எந்த வழிவகையும் அவர்களிடம் இருக்கவில்லை. ஈற்றில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்' என இந்தச் செவ்வியின் போது சித்தார்த்தன் குறிப்பிட்டிருக்கிறார்.
தொழில் வழங்குனர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க மறுப்பதால் இவர்கள் பெரும் இடர்களுக்கு முகம் கொடுத்திருப்பதாக அந்த அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரிலுள்ள சென் கென்றி தேவாலயத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தபோது குறிப்பிட்டிருக்கிறார்.
போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்ரர் சட்டவிரோத செயற்பாடுகள் எதிலும் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை
என்ற நிலையில் அதிகாரிகளால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
தற்போது தடுப்பிலுள்ள அந்த அமைப்பின் போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைமைக்குமுழு விசுவாசமாகச் செயற்படாதமையினால் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதோடு மீண்டும் குடும்பங்களுடன் இணைக்கப்படவேண்டும் என தயா மாஸ்ரர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
தங்களுக்கான வேலைவாய்ப்புகள் எதுவுமில்லை என பட்டதாரிகள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒரு நாட்டில் முன்னாள் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமாம் என வேறுபட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த சித்தார்த்தனும் தயா மாஸ்ரரும் வாதிடுவது நகைப்புக்கிடமானது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஏனைய இளைஞர்களின் கல்வித் தரத்துக்கு ஒப்பான நிலைக்கு இந்த முன்னாள் போராளிகளது கல்வி நிலையும் வரும்போது இவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாகக் கவனத்திலெடுக்கலாம்.
இதுபோன்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் பெரும்பாலும் அவர்களது பாடசாலை நாட்களிலேயே கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையினால் இவர்கள் மத்தியில் கல்வியறிவு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுள் 70 சதவீதமானவர்கள் எட்டாம் ஆண்டுக்கு மேல் படிக்கவில்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் டீயூ குணசேகர கூறுகிறார்.
எது எவ்வாறிருப்பினும் வடக்குக் கிழக்கில் நிலைமைகள் வேறுமாதிரியாக இருக்கும்போது சித்தார்த்தன் வித்தியாசமானதொரு தோற்றப்பாட்டினைக் காட்ட முனைகிறார்.
'விடுதலைப் புலிகளைப் போலவே ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கியவர்கள் நாங்கள்''என்றும் 'மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும்' என்றும் சித்தார்த்தன் எச்சரிக்கிறார்.
'ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். இந்த உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதோடு பொருத்தமான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் தவறுமாயின் தமிழ் மக்கள் மத்தியில் விளைவுகள் மோசமானவையாக இருக்கலாம்' என சித்தார்த்தன் கூறுகிறார்.
'எங்களது அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்ட சில குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதை நாமறிவோம். ஆயுதங்களைக் கையாளுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. இந்தப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. இவர்களும் சமூகத்துடன் மீளவும் இணையும் வகையில் தொழிற்பயிற்சிகளும் வேலைவாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்' என முக்கியமானதொரு விடயத்தினை சித்தார்த்தான் நேரிடையாவே கூறுகிறார்.
முன்னாள் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் தொடர்பான முறையான விபரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட உறுப்பினர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்டார்களா அல்லது இல்லையா என உறுதிப்படுத்துவது முடியாத காரியமே என ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அரச அதிகாரிகளும் கூறுகிறார்கள் என்கிறது பி.பி.சியினது செய்திக் குறிப்பு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் மத்தியில் காணப்படும் விரக்திநிலையினை விட புலிகள் அல்லாத ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் அதிக விரக்தியுடன் இருப்பதாகவே தெரிகிறது.
1987ம் ஆண்டு முதல் இந்த ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அரசியல் பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இதர தமிழ் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு எதிரான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விளைவாக இவர்கள் தங்களது உறவினர்கள்இ நண்பர்கள் மற்றும் தங்களின் அங்கங்களைக் கூட இழந்து நிற்கிறார்கள்.
1987ம் ஆண்டு யூலையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னான காலப்பகுதியில்தான் புலிகள் அல்லாத ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்கள் சிறிலங்கா அரச படையினரை எதிர்த்துப் போரிட்டனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் சிறிலங்கா அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு 'சனநாயக' அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் தங்களிடமிருந்து அனைத்து ஆயுதங்களையும் கையளித்துவிட்டு நாட்டினது சட்டத்திற்கு அமைய தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிந்துகொண்டனர்.
எவ்வாறிருப்பினும் விடுதலை புலிகள் அமைப்பு தங்களிடமிருந்த குறிப்பிட்ட சில ஆயுதங்களை மாத்திரம் கையளித்துவிட்டு செப்ரெம்பர் 1987ம் ஆண்டு முதல் இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான போரை முடுக்கிவிட்டனர். இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுமுதல் தற்போதுவரை புலிகள் இல்லாத இந்த ஆயுதக் குழுக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இன்று சித்தார்த்தன் கூறுவதைப் போல அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை இனியில்லை என இந்த இதர தமிழ் குழுக்கள் கருதக்கூடும்.

Post a Comment