எனது மகளுக்கு மன்னிப்பு வழங்குவர் ரிஷானாவின் தாயார் நம்பிக்கை
ஹஜ் கடமையை முடித்து இறந்த குழந்தையின் பெற்றோர் வீடு திரும்பியதும் எனது மகளுக்கு மன்னிப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஷானா நபீக்கின் தயார் தெரிவித்துள்ளார்.
ரிஷானாவின் விடுதலைக்காக நாட்டின் ஜனாதிபதி உட்பட பலர் அக்கறை காட்டி வரும் இந்நிலையில் இறந்த குழந்தையின் பெற்றோர் ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே விடுதலை பெறுவார் என்ற இறுதியான முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் 20 வருட ஞாபகார்த்தவைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றபோது அங்கு சென்றிருந்த சவுதிக்கான உயர்ஸ்தானிகரை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அணுகி ரிஷானாவின் விடுதலை பற்றி பேசியதுடன் இது விடயமாக உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதியையும் பேசவைத்துள்ளார்.
ரிஷானாவின் விடுதலை பற்றி ஜனாதிபதி உயர்ஸ்தானிகருக்கு விளக்கமாக எடுத்துக் கூறியதற்கமைய இறந்த குழந்தையின் பெற்றோர் ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ளதாகவும் அவர்கள் வீடு திரும்பியதும் ரிஷானா நபீக்கை மன்னிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ரிஷானாவின் பெற்றோரிடம் தெரிவிப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையிலான குழுவினரை மூதூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சென்ற குழுவினரிடம் ரிஷானாவின் பெற்றோர் சவூதியில் இருந்து தங்களுக்கும் இவ்வாறானதொரு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்ததாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார். இந்த தகவலின் பின்னர் ரிஷானாவின் பெற்றோர் சற்று ஆறுதல் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment