"தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இடமளிப்பதால் மாணவர் மத்தியில் அமைதியீனம் அதிகரிக்கும்"
தனியார் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு இடமளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பநிலை உக்கிரமடையுமென எதிர்வு கூறப்படுகிறது.
கடந்த வாரம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மாணவர்கள் ஆரம்பித்திருந்தனர்.எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்வதற்கு மாணவர் குழுக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 200 இற்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் மாணவர்கள் மத்தியில் அமைதியீனம் அதிகரித்து வருகிறது. இலங்கையின் 25 பல்கலைக்கழகங்களுக்கும் இது பரவ ஆரம்பித்திருக்கிறது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் கடுமையான நிலைப்பாட்டினால் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்திருப்பதாக சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.ஆறு பிரதான பல்கலைக்கழகங்களில் குழப்பநிலை நீடித்துள்ளது. பரீட்சைகள் குழப்பப்பட்டுள்ளன.
றுகுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அதேசமயம், பௌத்த பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் பிக்கு மாணவர்கள் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பு அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தது.
தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் உயர்கல்வி சட்டமூலத்தை இந்த மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இதனை எதிர்க்குமாறு சோசலிஷ பின்னணியைக் கொண்ட சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது.
புதிய சட்டமூலம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. 1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்தை மாற்றியமைப்பதை நோக்கமாக இந்த உத்தேசச் சட்டமூலம் கொண்டிருக்கிறது. 1978 பல்கலைக்கழக சட்டமூலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான இந்த ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் மோனார்ஸ் பல்கலைக்கழகம், சீனாவிலுள்ள பெய்ஜிங் அரச பல்கலைக்கழகம் உட்பட 15 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தனியார் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடந்த மாதம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருந்தார்.தற்போதுள்ள அரசாங்கத்தால் நிர்வாகிக்கப்படும் பல்கலைக்கழகங்களை மேம்படுத்த 10 வருடங்கள் செல்லும் எனவும் ஆதலால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைச் சம்பந்தப்படுத்துவது தேவையானதெனவும் திஸாநாயக்க கூறியிருந்தார்.
அரச பல்கலைக்கழக கல்விமுறைமையை இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்ட விடயத்தை தந்திரமாக ஏற்றுக்கொள்வதாக இது காணப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்புக் கூறியுள்ளது.
இதன் விளைவாக இரு வகையான பல்கலைக்கழக முறைமை இங்கு ஏற்படும். நிதி வசதியற்ற அதிக எண்ணிக்கையான மாணவர்களுக்கு சனச்செறிவு கொண்ட பல்கலைக்கழகங்களும் பணவசதி படைத்தோருக்கு தனியார் பல்கலைக்கழகங்களும் என்ற இரு வேறுபட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு ஏற்படுமென அந்த மாணவரமைப்புக் கூறியுள்ளது.
Post a Comment