Header Ads



MRCA வுக்கு இரு வேண்டுகோள்கள்


இஸ்லாமிய நூல் மீளாய்வுக் குழு மற்றும் நூல் மீளாய்வு வழிகாட்டல்கள் பற்றிய சர்ச்சை - MRCA வுக்கு இரு வேண்டுகோள்கள்!


சர்ச்சைக்குரிய வழிகாட்டல்கள் எனது காலத்தில் மீளாய்வுக்குழுவால் தயாரித்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டது என முன்னாள் MRCA பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் குறிப்பிடுவதில் எந்த உண்மையும் இல்லை.


நான் நியமித்த எந்தக் குழு பற்றியோ எனது காலத்தில் தயாரிக்கப்பட்ட எந்த  வழிகாட்டல்கள் பற்றியோ நான்  பாதுகாப்புத் துறையின் அனுமதி ஏதும் கோரி இருக்கவும் இல்லை என்பதையும் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். 


அப்படியாக அந்த வழிகாட்டல்கள் என்னால் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருந்தால்,  அதனை பகிரங்கப்படுத்துமாறு  திணைத்தளத்தை வேண்டிக்கொள்கிறேன்.


மீளாய்வுக் குழுவை நீக்குவதனால் வழிகாட்டலும் நீங்கி விடும் ; இஸ்லாமிய நூல் இறக்குமதியும் எந்தத் தடங்கல்களுமின்றி  இடம் பெறும் என்றிருந்தால், மீளாய்வுக்குழுவை உடனடியாக நீக்குமாறு திணைக்களத்தைக் பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.


மேலும், குறிப்பிட்ட வழிகாட்டல்கள் பற்றிய இரண்டு முக்கிய விடயங்களை இங்கு தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன்.


1. அறிஞர் பட்டியல்


பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தற்போதைய இந்தப்பட்டியலை விடப் பெரிய பட்டியலொன்றை எனக்குத் தந்து அந்த அறிஞர்களினது நூல்களை தடைசெய்யுமாறு வேண்டிக் கொண்டார். அதில் 300க்கும் அதிகமான அறிஞர்களது பெயர்களும் அவர்களைத் தடை செய்த நாடுகளின் பெயர்களும் தரப்பட்டிருந்தன. அது தொடர்பில் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது; அவை பற்றி ஏதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறா  என்று ஆராய வேண்டுமாக இருந்தால், உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்கும் படியும் அவரைக் கேட்டுக்கொண்டேன் ; அத்துடன் தடை செய்யப்பட வேண்டிய அறிஞர்கள் பெயர்ப் பட்டியல் மட்டுமல்ல அவர்களது நூல்களில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ள பக்கங்களையும் குறிப்பிட்டுத் தருமாறு வேண்டியிருந்தேன்.  அப்படித் தரும் பட்சத்தில், தகுதிவாய்ந்த அறிஞர்கள் குழுவொன்றால் ஆராயப்பட்டு இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கோ சமூக ஒற்றுமைக்கோ அச்சுறுதலாக காணப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் கூறியிருந்தேன். அதற்கு பிறகு அந்த அதிகாரி அது விடயமாக என்னுடன் பேசவில்லை.


ஆனால், தற்போது சர்ச்சைக் குள்ளாகியிருக்கும் அறிஞர் பட்டியல் கிடைத்தவுடன் கேள்வி பார்வையில்லாமல் அவர்களது நூல்களை தடைசெய்ய உடன்பட்டமை தவறு என்பதே எனதும் நிலைப்பாடு ஆகும் .


2 . குர்ஆன் மொழி பெயர்ப்புகள்


குர்ஆன் மொழிபெயர்புகளை இறக்குமதி செய்யும் போது, நூல் மீளாய்வுக் குழுவினால் கடைப்பிடிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், யுத்தம்- ஜிஹாத் பற்றிய குர்ஆனின் 33 வசனங்கள் பற்றி ACJU வழங்கிள்ள  விளக்கத்தை தழுவியதாகும் என்று நினைக்கின்றேன்.  அவற்றை மாற்றுவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுக்க முடியும் ; அதற்கு மீளாய்வுக்குழுவின் அனுமதி தேவையில்லை என்பது தான் உண்மை. 


அப்படி முடியாது; அதற்கு பாதுகாப்புத்துறையின் அனுமதி வேண்டும் என்று கூறுவதாயின் எப்படி நூல் மீளாய்வுக் குழுவை குறை கூற முடியும்?


எனவே, இந்த நூல் மீளாய்வுக் குழு என்பதை விட இந்த வழிகாட்டல்கள் தான் பிரச்சினை என்பதை உணர்ந்து அவற்றை மாற்றியமைக்க வேண்டும்; அதற்கு தடையாக நூல் மீளாய்வுக்குழு இருக்குமாயின் அவர்களையும் நீக்கத் தான் வேண்டும் .


ஏ.பீ.எம். அஷ்ரப்

11.06.2026

No comments

Powered by Blogger.