Header Ads



ஈரானியர்களின் உயிரிழப்புக்கு இலங்கை அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் - இம்ரான் Mp


உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்,  இலங்கையை நோக்கி வந்த ஈரானியக் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா' மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இத் தகவல் அதிர்ச்சியளிப்பதோடு, இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் இறைமையையும் பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளதாக  இம்ரான் மகரூப் MP தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படைத் தளபதியால் விடுக்கப்பட்ட நேரடி அழைப்பின் பெயரிலேயே ஈரானியக் கப்பல் இலங்கையை நோக்கி வந்துள்ளது. எமது நாட்டுக்கு விருந்தினராக வருமாறு அழைத்துவிட்டு, அவர்கள் எமது கடல் எல்லைக்கு மிக அருகில் வைத்துத் தாக்கப்படுவதை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சர்வதேச இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானமாகும்.


 இந்தத் தாக்குதல் குறித்து அரசாங்கம் ஏன் இன்னும் மௌனம் காக்கிறது? எமது கடற்பரப்பு அந்நிய நாடுகளின் போர்க்களமாக மாறுவதை அரசாங்கம் அனுமதிக்கிறதா?


தூதுவரின் கருத்தின் படி, தாக்கப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் போர் வீரர்களோ அல்லது ஆயுதமேந்தியவர்களோ அல்ல. அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட பேன்ட் வாத்தியக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள். சுமார் 104 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ள இந்தத் தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். இலங்கையின் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியதன் மூலம் இந்த உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசாங்கமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.


தாக்குதலுக்குப் பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்ட 'ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர்' கப்பல் ஏன் இன்னும் அங்கு கொண்டு செல்லப்படவில்லை? அத்தோடு, அத்துமீறிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித எதிர்ப்பையும் பதிவு செய்யாதது ஏன்?


அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் காட்டும் பலவீனமும், வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து போவதும் இலங்கையை ஒரு பாதுகாப்பற்ற நாடாக மாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு உடனடியாகத் தெளிவான விளக்கத்தை நாட்டுக்கு வழங்க வேண்டும். எமது நாட்டின் கௌரவத்தையும், இறைமையையும் அடகு வைக்கும் இத்தகைய செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது

No comments

Powered by Blogger.